Published:Updated:

`அரசால் செய்ய முடியாததை கொரோனா செய்தது!' -ஊரடங்கால் தூய்மையான தாமிரபரணி

தூய்மையான தாமிரபரணி
News
தூய்மையான தாமிரபரணி

கொரோனா ஊரடங்கில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கழிவுகள் குறைந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தூய்மையாகக் காட்சி அளிக்கிறது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் பொதிகை மலையில் உற்பத்தியாகி 120 கி.மீ தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலில் கலக்கிறது தன் பொருநை நதியாம் தாமிரபரணி. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் முழு தண்ணீர்த் தேவையையும், விருதுநகர் மாவட்டத்தின் தண்ணீர்த் தேவையில் 30 சதவிகிதத்தையும் பூர்த்தி செய்கிறது. தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலுள்ள தொழிற்சாலைகள், வீடுகளின் கழிவு நீர் ஆற்றில் நேரடியாகக் கலப்பதால் சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன், ஆறுமுழுவதும் பல இடங்களில் அமலைச் செடிகள், சீமைக்கருவேல மரங்கள், அழுக்குத்துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் கலக்கும் கழிவுகள்
ஆற்றில் கலக்கும் கழிவுகள்

தாமிரபரணியில் இதே நிலை தொடர்ந்தால் இன்னும் 20 ஆண்டுகளில் இந்நீர், பயன்படுத்த முடியாத நஞ்சாக மாற வாய்ப்புள்ளதாக நீரியல் ஆய்வு விஞ்ஞானிகளும் எச்சரித்துள்ளனர். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தாமிரபரணி மஹாபுஷ்கர நீராட்டு விழாவின்போது பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரைகள் தூய்மைப்படுத்தப்பட்டன. ஆனால், மீண்டும் கழிவுகள் கலப்பது தொடர்ந்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த நிலையில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரானாவால் தேசிய அளவில் வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்துள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்துவித வாகனப் போக்குவரத்தும் 95 சதவிகிதம் குறைந்துவிட்டது.

தூய்மையான தாமிரபரணி
தூய்மையான தாமிரபரணி

சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவால் ஓசோன் மண்டலத்தில் பாதிப்பும் மிகமிகக் குறைந்துள்ளது. காணாமல் போன சிட்டுக்குருவி போன்ற சிறு குருவி இனங்களையும் காண முடிகிறது. இதேபோல மக்கள் பயன்பாடு இல்லாததால் பல ஆறுகளும் கழிவுகள் கலக்காமல் தூய்மையாகக் காட்சி அளிக்கிறது. இதில், குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் நீரின் மாசுபாடு பாதியாகக் குறைந்து தூய்மையாகக் காட்சியளிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து எழுத்தாளர் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசினோம், ``சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி தண்ணீர் மிக சுத்தமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக நகரங்கள் மற்றும் கரையோர கிராமங்களிலிருந்து கலக்கப்படும் கழிவுநீரால் சாக்கடை கலந்த தாமிரபரணியாக மாறிவிட்டது. இந்த ஆறு முழுவதும் படர்ந்து காணப்படும் ஆகாயத்தாமரை, நீர்க்கருவை, வேலிகாத்தான் போன்றவை அனைத்தும் அதிகமாக நீரை உறிஞ்சும் தாவரங்கள்.

முன்பு ஆக்கிரமித்து காணப்பட்ட அமலைச்செடிகள்
முன்பு ஆக்கிரமித்து காணப்பட்ட அமலைச்செடிகள்

இவை ஓடும் தண்ணீரின் வேகத்தை மட்டுமல்லாமல் நீரின் தரத்தையும் குறைத்து விடுகிறது. இதுபோன்ற தேவையற்ற தாவரங்களை அகற்றிடவும், கழிவுநீர் கலத்தல், குப்பைகள் கொட்டுதலை தடுத்திடக்கோரியும் மதுரை உயர் நீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையருவி, அகத்தியர் அருவி போன்ற இடங்களில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கச் செல்வதை வனத்துறையினர் அனுமதிக்காத நிலையில் முக்கூடல் வந்து குளித்து நிரந்தர சுற்றுலாத் தலமாகவே மாற்றிவிட்டார்கள். இதனால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளியூர்க்காரர்கள் இங்கு குளித்துச் சென்றனர். அத்துடன் பரிகாரம் என்ற பெயரில் தங்களது ஆடைகளை அப்படியே கழற்றி ஆற்றில் போட்டுவிட்டுச் செல்வர்.

தூய்மையான தாமிரபரணி
தூய்மையான தாமிரபரணி

இதனால், முக்கூடல் ஆறு துணி மூட்டைகள் தூர்நாற்றம் வீசி, தண்ணீரையும் மாசுப்படுத்திக் கொண்டிருந்தது. அங்குள்ள சமூக சேவகர்கள் அதை அடிக்கடி அகற்றி வந்தாலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தாமிரபரணியில் கலக்கும் சாக்கடையின் அளவு பாதியாக குறைந்துவிட்டது.

அத்துடன், உள்ளூர் மக்களைத் தவிர வெளியூர் மக்கள் வராததால் முக்கூடல் தாமிரபரணியும் சுத்தமாக மாறிவிட்டது. இதனால் சாக்கடை கலப்பின்றி தெளிவாக ஓடுகிறது. அரசு செய்ய முடியாத தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியை கொரோனா செய்து முடித்தது என்பது சந்தோஷத்தை வரவழைத்தாலும், தொடர்ந்து நாம்தான் உயிர்காக்கும் தாமிரபரணியை அழித்து வந்திருக்கிறோம் என நினைக்கும்போது வேதனைதான் வருகிறது.

முன்பு ஆக்கிரமித்து காணப்பட்ட அமலைச்செடிகள்
முன்பு ஆக்கிரமித்து காணப்பட்ட அமலைச்செடிகள்

தற்போது தூய்மையாகக் காட்சியளிக்கும் தாமிரபரணி ஆற்றங்கரையை, வருங்காலங்களில் மேம்படுத்தினால் 25 வருடங்களுக்கு முன்பு பார்த்த தாமிரபரணியை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.