Published:Updated:

இந்த இயற்கை ப்யூரிஃபையர் சப்பான் மரம் பற்றி உங்களுக்குத் தெரியுமா ?

“எப்பேர்ப்பட்ட உடல் நோய் வந்தாலும் பதிமுகத்தில் இருக்கும் சிவப்புத் தண்ணீரைப் பருகினால் அகலும்” என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை

சப்பான் தண்ணீர்
சப்பான் தண்ணீர்

இன்றைய அறிவியல் உலகில் ஆயிரம் தொழில்நுட்பங்கள் வந்தாலும் இயற்கைக்கு நிகர் எதுவுமில்லை. நாம் குடிக்கின்ற தண்ணீரைச் சுத்திகரிக்க ஆயிரம் செயற்கைச் சாதனங்கள் வந்துவிட்டன. ஆனால், இந்த வேலையை ஒரே ஒரு மரம் செய்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அதுதான் பதிமுகம் எனப்படும் சிசால்பினியா சப்பான் என்ற மரமாகும்.

நம் பாட்டன் காலத்தில் உடல்நிலை சரியில்லாவிட்டால் பதிமுகக்குவளையில் தண்ணீரையிட்டு அருந்தினால் உடல்நிலை சீராகி விடும் என்ற செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். இந்த மரத்தின் இலை, பூ, காய், கனி, பட்டை, தண்டு மற்றும் வேர் முதலான அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை ஆகும். இம்மரத்தை சப்பான், கிழக்கிந்திய செம்மரம், சப்பாங்கம் மரம் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த மரம் பயிரிடப்படுகிறது. இது தமிழகத்தைக் காட்டிலும் கேரளாவில் அதிகமாகக் காணப்படுகிறது.

சப்பான் மரம்
சப்பான் மரம்

இம்மரமானது பத்து மீட்டர் உயரமும், சாம்பல் நிற தண்டு மற்றும் அடர் பச்சை நிறமுடைய இலையைக் கொண்டவையாகும். இம்மரம் பெரும்பாலும் வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலக் காடுகளில் அதிகமாகக் காணப்படும். கேரள மாநிலத்தில் தொண்ணூற்று ஐந்து சதவிகிதத்திற்கும் மேற்பட்ட வீட்டிலும், உணவகத்திலும் தினமும் குடிநீரைச் சுத்திகரிக்க இம்மரம்தான் பயன்படுகிறது. இம்மரக்கட்டையின் தூள் மிகச் சிறந்த சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. இம்மரத்தூள் மற்றும் பட்டையைத் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்கும் போது அதிலிருந்து வெளிவரும் சாயமானது தண்ணீரைச் சிவப்பு நிறமாக மாற்றுகிறது. இதனால் சிவப்புத் தண்ணீர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தண்ணீர் தனக்கென ஒரு சுவையைக் கொண்டதாகும். இந்தச் சிவப்புத் தண்ணீரைப் பருகும் போது குளிர்பானத்தைப் பருகுவது போல இருக்கும்.

“எப்பேர்ப்பட்ட உடல் நோய் வந்தாலும் பதிமுகத்தில் இருக்கும் சிவப்புத் தண்ணீரைப் பருகினால் அகலும்” என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை. இது மட்டுமல்லாமல், முதிர்ந்த மரத்தின் மையப்பகுதியினின்று பெறப்படும் சிவப்பு சாயமானது தோல், பட்டு, பருத்தியிழை, கம்பளி, நார், காலிகோ, அச்சுத்தொழில், மரச்சாமான்கள் வீட்டுத்தரை, சிறகு, மருந்துகள் மற்றும் பல்வேறுபட்ட கைவினைப் பொருள்களை வண்ணமூட்டப் பயன்படுத்தப்படுகிறது. பத்தமடை கோரைப் பாய்கள் பதிமுக வண்ணத்தால் சாயமூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சப்பான் மரம்
சப்பான் மரம்

இம்மரத்தின் சந்தை விலையானது, ஒரு ஏக்கருக்கு அல்லது ஆயிரம் மரத்திற்கு பதினேழு லட்சத்து ஐம்பது ரூபாய் என்றளவு மகசூலைத் தரவல்லதாகும். ஒரு கிலோ மரமானது எழுபது ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது. இவ்வாறு இம்மரம் பாதம் முதல் உச்சி வரை பல மருத்துவக் குணங்களைக் கொண்டு மக்களுக்குப் பயனுள்ளதாக அமைகிறது.

இயற்கை முறையில் சுத்திகரிப்பதால் இது ஓரளவுக்கு நன்னீராக இருந்தால் தான் இதைப் பயன்படுத்த முடியும். நிறைய கழிவுகள் கலந்து மோசமான நிலையிலிருக்கும் தண்ணீரை நிறைய வடிகட்டும் முறையில் சுத்தப்படுத்தி கடைசியில் இதைப் பயன்படுத்தி சுத்திகரிக்க வேண்டும். எவ்வளவு கழிவுகள் இருந்தாலும் இந்த மரம் சுத்திகரித்து விடும் என நினைக்க முடியாது.

ஆயிரம் தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் (வாட்டர் பியூரிபையர்கள்) இருந்தாலும் இயற்கை முறையில் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் சுவை மற்றவற்றில் கிடைக்காது.. எனவே, இம்மரத்தின் பயனைக்கண்டு, இதைப் பாதுகாக்கவும் பயன்படுத்தவும் செய்வோம்.