Published:Updated:

பாலினத்தை மாற்றிக்கொள்ளும் வ்ரேசஸ் மீன்கள்... காரணத்தைக் கண்டுபிடித்த ஆராய்ச்சி

ப்ளூஹெட் வ்ரேசஸ் என்ற வகை மீன்கள், தன் பாலினத்தை மாற்றிக் கொள்ளும் பண்புடையவை என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

ப்ளூ வ்ரேசஸ் (Blue Wrasses)
ப்ளூ வ்ரேசஸ் (Blue Wrasses) ( Leefy Green )
ப்ளூஹெட் வ்ரேசஸ் மீனை பல ஆண்டுகளாக நான் தொடர்ச்சியாக ஆய்வுசெய்துவருகிறேன். என் கண்முன்னாலேயே அவற்றிடம் அந்தப் பாலின மாற்றம் நிகழ்கிறது. அதுவும் அதிவேகமாக. பாலின மாற்றம் நிகழ்வது எப்படியென்பது இத்தனை ஆண்டுகளாகப் புரியாத புதிராகவே இருந்தது. அவற்றின் மரபணுக்களில் மாற்றம் எதுவும் நடப்பதில்லை.
பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ்

கரீபியன் கடல் பகுதியில், பவளப்பாறைகளுக்குள் வசிக்கும் மீன் வகைதான் இந்த ப்ளூஹெட் வ்ரேசஸ் (Bluehead Wrasses). நீல நிறத் தலையோடு இருக்கும் ஆண் மீன்கள், மஞ்சள் நிறத் தலையோடு இருக்கும் பெண் மீன்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பண்பு கொண்டவை. இதில், மீன் கூட்டத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் ஆண் மீனை அந்தக் கூட்டத்திலிருந்து நீக்கிவிட்டால், அடுத்த பத்தே நாள்களில் அங்கு இருப்பதிலேயே பெரிய பெண் மீன், ஆண் மீனாகப் பாலின மாற்றம் அடைந்துவிடுகிறது. அதன் பண்புகள், நிறம் அனைத்தும் சில மணி நேரங்களில் மாறிவிடுகிறது. கருப்பை உறுப்பு விந்தகமாக மாறிவிடுகிறது. அடுத்த பத்தே நாள்களில் உயிரணு உற்பத்தியும் அதனிடம் தொடங்கிவிடுகிறது.

கேட்க ஏதோ ஃபேன்டஸி கதை கேட்பது போலிருக்கிறதா! இதை முதலில் பார்த்தபோது ஜென்னி கிரேவ்ஸுக்கும் அப்படித்தானிருந்தது. இது எப்படி நிகழ்கிறது என்பதை ஆய்வு செய்தது அவருடைய குழு. பல நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடந்த இந்த ஆய்வில், சில சுவாரஸ்யமான தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

"ஒரு மின்சாரப் பெட்டியில், வயர்களை மாற்றிச் செருகி இணைப்பை மாற்றுவது போலத்தான் இதுவும். கோனாடு (Gonad) என்ற பிறப்புறுப்பு தொடர்பான பகுதியில் நடக்கும் மரபணு சீர்திருத்தம்தான் இதற்குக் காரணம். அதாவது, ஒரு ஸ்விட்சை ஆஃப் செய்து, வேறு ஸ்விட்சை ஆன் செய்வது போலத்தான். கருப்பையை இயக்கும் மரபணுக்களின் செயல்பாடு முதலில் முடக்கப்படுகிறது. அடுத்ததாக, விந்தகத்தை இயக்கும் மரபணுக்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, உயிர்மங்களின் நினைவுகளை (Changes in cellular memory) மாற்றியமைக்கின்றன." - முனைவர். எரிகா டோட், ஆய்வுக்குழுவைச் சேர்ந்தவர்.

பாலின மாற்றம்
பாலின மாற்றம்
Jenny Kane
பல்லிகளில் பாலின மாற்றம் தட்பவெப்பநிலையைப் பொறுத்து மாறுகிறது. அதற்கு அவை, குரோமோசோம்களில் மாற்றங்களைச் செய்துகொள்கின்றன. அதேபோன்ற மரபணு வகைதான் வ்ரேசஸ் மீன்களிடமும் இருக்கின்றன. மரபணுக்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் திறனுடைய ஓர் ஆதிச் செயற்பாட்டை நாங்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கிறோம்.
பேராசிரியர் ஜென்னி கிரேவ்ஸ்