Election bannerElection banner
Published:Updated:

கொரோனாவுக்கு அடுத்து எந்த வைரஸ் நம்மை தாக்கலாம்? விடைசொல்லும் விஞ்ஞானிகள்!

Novel Coronavirus SARS-CoV-2
Novel Coronavirus SARS-CoV-2 ( Photo: AP )

பிரச்னை கொரோனா வைரஸ் பரவலோடு முடிந்துவிடவில்லை. இதேபோல் மீண்டுமொரு தொற்றுநோய் பேரிடரை உண்டாக்கும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடர் பற்றிய பேச்சு வரும்போதெல்லாம், நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள் பரவலாகச் சொல்வது ஒன்று மட்டும்தான்.

``பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. இதேபோல் மீண்டுமொரு தொற்றுநோய் பேரிடரை உண்டாக்கும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம்."

இதை விவரமாகச் சொல்ல வேண்டுமெனில், பாலூட்டிகள் மற்றும் பறவைகளில் இதுவரை 17 லட்சம் வைரஸ் நுண்ணுயிரிகள் உருப்பெற்று ஒட்டுண்ணியாக வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அதில் பாதியளவு நுண்ணுயிரிகளுக்கு கோவிட்-19 தொற்றுப் பேரிடருக்கு நிகரான கேடுகளை உண்டாக்கக்கூடிய திறனுடையவையாக இருக்கின்றன. அவற்றில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், வேறு உயிரினங்களிடமிருந்து மனிதர்களிடையே பரவி மீண்டுமொரு பெருந்தொற்றுப் பரவலை உண்டாக்கலாம்.

இந்தப் பேராபத்தை எப்படித் தடுப்பது என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருக்கிறார்கள், கலிஃபோர்னிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் ஆய்வுக்குழுவின் விஞ்ஞானிகள். அந்த முயற்சியின் முதல்படியாக, ஒவ்வொரு வைரஸும் எந்தளவுக்கு ஆபத்தானது என்பதைக் கணக்கிடுவதில் உலகம் முழுக்கவுள்ள ஆய்வாளர்களுக்கு உதவ முயல்கின்றனர். ஒவ்வொரு நுண்ணுயிரியும், ஓர் உயிரினத்திடமிருந்து மற்ற உயிரினங்களுக்கும் மனிதர்களுக்கும் பரவும்போது அவற்றைத் தாக்கக்கூடிய அளவுக்கு வளர்சிதை மாற்றங்களை அடைவதில் எந்தளவுக்குத் திறன் வாய்ந்தவையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் வைரஸ்களைப் பட்டியலிடுகின்றனர். எபோலா, மெர்ஸ், சார்ஸ், எச்.ஐ.வி என்று ஆபத்தான நோய்களை உண்டாக்கக்கூடிய அனைத்து வைரஸ்களையும் தரவரிசைப்படி பட்டியலிட்டு, கொரோனாவுக்கு அடுத்ததாக இப்படியொரு பேரிடரை உண்டாக்கும் அளவுக்கு எந்த வைரஸ் இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வுக்குழு முயல்கிறது.

விலங்கு-வழி தொற்றுநோய் பரவல்
விலங்கு-வழி தொற்றுநோய் பரவல்
Pixabay

இதற்காகவே தனித்துவமாக ஸ்பில் ஓவர் (SpillOver)என்ற இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்கள். இது, வைரஸ் வகை, அது சார்ந்து வாழ்கின்ற ஒம்புயிரி (Host), அவற்றிடமிருந்து மனிதர்களுக்கு அவை பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா, எந்த நாட்டில் அந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்பன போன்ற 32 காரணிகளைக் கொண்டு வைரஸ் நுண்ணுயிரிகளைத் தரவரிசைப்படுத்துகிறது.

இந்த இணையதளம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள வைரஸ் கிருமிகள் மட்டுமன்றி இனி கண்டுபிடிக்கப்படும் நுண்ணுயிரிகளுக்கும் சேர்த்து கண்காணிப்புப் பட்டியல் ஒன்றை உருவாக்குகிறது. உலகளவிலுள்ள ஆய்வாளர்கள் அனைவருமே பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இதில், ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், கொள்கை தயாரிப்பாளர்கள் என்று யார் வேண்டுமானாலும் அவர்கள் சேகரித்த தகவல்களையும் தரவுகளையும் பதிவேற்றலாம், இதில் இருக்கின்ற தரவுகளை அவர்களுடைய ஆய்வுகளுக்கும் பயன்படுத்தலாம். இவைபோக, அடுத்ததாகத் தொற்றுப் பரவலை உண்டாக்கும் அபாயமுடைய வைரஸ் தொற்று குறித்து இதில் பதிவேற்றப்படும் தகவல்களை, அந்தக் குறிப்பிட்ட தொற்றுப் பரவல் நிகழும் முன்னரே அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளுக்கும் பயன்படுத்தலாம்.

35 நாடுகளைச் சேர்ந்த 6,800 பேர் கொண்ட ஒரு படையே இந்த இணையதளத்துக்காக நுண்ணுயிரிகள் பற்றிய தரவுகளை வேட்டையாடியுள்ளார்கள். அவர்களில் பலர் வௌவால்கள், எலி, பெருச்சாலி போன்ற கொறி உயிரினங்கள், குரங்கு இனங்கள் ஆகியவற்றிடமிருந்து ரத்தம், எச்சில், சிறுநீர், எச்சம் போன்ற உயிரியல் மாதிரிகளைச் சேகரித்து, அவற்றில் காணப்படும் வைரஸ்களையும் அவை குறித்த தகவல்களையும் திரட்டினார்கள். இந்தப் படையைச் சேர்ந்த மற்றவர்கள், சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளின் மரபணுக்களை ஆய்வு செய்தனர். அதன்மூலம், கிட்டத்தட்ட 900 புதிய வைரஸ்களைக் கண்டுபிடித்தார்கள். அதில் கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவை மற்றும் எபோலா குடும்பத்தைச் சேர்ந்தவை மட்டுமே 160 வைரஸ்கள்.

SpillOver
SpillOver

மேலும், கொரோனா, எபோலா போலவே இதற்கு முன்னர் பல இழப்புகளுக்குக் காரணமாக இருந்த லஸ்ஸா, மார்பர்க் போன்ற விலங்கு-வழி நோய்களை உண்டாக்கும் 18 வைரஸ்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்தார்கள். இவைபோக, மேலும் பல தகவல்களையும் இந்தப் பட்டியலில் இல்லாத புதிய வைரஸ் நுண்ணுயிரிகள் தென்பட்டால் அவற்றையும் உலகிலுள்ள நிபுணர்கள் யார் வேண்டுமானாலும் சேர்க்கலாம். அதோடு, அவர்கள் சேர்க்கும் நுண்ணுயிரிக்குரிய தரவரிசையை அவர்களே வரையறுக்கவும் முடியும்.

கடந்த வாரம் இதன்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியான ஓர் ஆய்வறிக்கையில் சுமார் 75,000 உயிரினங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட உயிரியல் மாதிரிகளில் கண்டறியப்பட்ட 887 காட்டுயிர் வைரஸ்களுடைய தொற்றுப்பரவல் குறித்த தரவரிசையைப் பட்டியலிட்டது. இந்தப் பட்டியலில், கோவிட்-19 தொற்றுநோய்க்குக் காரணமான SARS-CoV-2 என்ற வைரஸ் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. கொரோனாவையும் முந்திக்கொண்டு முதலிடத்தில் இருப்பது, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கொறி உயிரினங்களிடம் இருந்து பரவும் லஸ்ஸா என்ற தொற்றுநோயை உண்டாக்கும் வைரஸ்தான். அடுத்த பெருந்தொற்றுப் பரவலுக்கு லஸ்ஸா வைரஸ் காரணமாக இருக்குமென்று இந்த ஆய்வறிக்கை கணிக்கிறது. அதைத் தொடர்ந்து கொரோனா வைரஸும் மூன்றாவது இடத்தில் எபோலா வைரஸும் இருக்கிறது

SpillOver Digital tool
SpillOver Digital tool

இதில் சேகரிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் பல தரவுகள், முழுமையடையாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்த முயற்சியின் மூலம் முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்துகொள்வதற்கு ஏற்ப சில விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள இதுபோன்ற பரவலான தளம் மிகுந்த உதவியாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

இதன் சிறப்பம்சம் என்னவெனில், ஒரு வைரஸ் ஓர் உயிரினத்திலிருந்து மனிதர்களிடையே பரவுவதில் அதற்கு இருக்கும் திறனை மட்டுமே அதன் பரவல் திறனைக் கணக்கிடுவதற்கான காரணியாக எடுத்துக்கொள்வதில்லை. ஒரு குறிப்பிட்ட வைரஸ் தொற்று எந்த உயிரினத்தைச் சார்ந்து வாழ்கின்றதோ, அந்த உயிரினம் வாழ்கின்ற சூழலியல் அமைப்பின் மீது ஏற்படுகின்ற வெளிப்புற அழுத்தங்கள், அந்த ஒம்புயிரிக்கு மனிதர்களோடி எவ்விதமான தொடர்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கின்றன, அந்த வாய்ப்பு எவ்வளவு விரைவில் நடக்கலாம் என்பன போன்ற காரணிகளையும் கருத்தில் கொண்டே அடுத்து எந்தத் தொற்றுநோய் பரவல் நிகழலாம் என்பது கணிக்கப்படுகிறது.

இன்றைய நவீன கால மனிதர்கள், காட்டுயிர்களின் கடைசி வாழ்விடங்களையும் ஊடுருவிக் கொண்டிருக்கிறார்கள். இதனால், முன்னெப்போதும் இருந்ததைவிட அதிகளவிலான காட்டுயிர்களோடு மனித இனத்துக்குத் தொடர்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. காட்டுயிர்களுடைய வாழ்விடங்களின் எண்ணிக்கை சுருங்கும்போது, அவை மக்கள் தொகை நிறைந்த பகுதிகளை நோக்கி உணவுக்காக வர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றன. மனிதர்களைப் போலவே, மற்ற உயிரினங்களும் வெளிப்புற மற்றும் சூழலியல் அழுத்தங்களுக்கு ஆளாகும்போது, பலவீனமடைந்து, நோய்த் தாக்குதலுக்கு ஆளாவதோடு, அந்த நோய்களை அவற்றுக்கு இடையிலும் மற்ற உயிரினங்களுக்கு இடையிலும் பரப்பவும் செய்கின்றன.

எபோலா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப்
பட்ட நோயாளி
எபோலா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்தப் பட்ட நோயாளி
Pixabay

இதில், மனித சமூகத்திடையே வெளியேறும் புதுப்புது வைரஸ்கள், எப்படி நம்மைப் பாதிக்கும் என்று நமக்குத் தெரியாது. ஒரு நுண்ணுயிரி, மனித உடலின் அணுக்களுக்குள் நுழைந்து, எண்ணிக்கையில் பெருகி, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை மட்டுப்படுத்தி, நோய்த் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். ஒரு சில வைரஸ்களால் நேரடியாக அதன் ஒம்புயிரினத்திடமிருந்து மனிதர்களிடையே பரவி இந்தத் தாக்குதலைத் தொடுத்துவிட முடியும். சிலவற்றால் இப்படி நேரடியாகச் செய்துவிட முடியாது.

மனித உடலில் கேடுகளை ஏற்படுத்த வேண்டுமெனில், அவை சில வளர்சிதை மாற்றங்களை அடையவேண்டும். அப்படிப்பட்ட வைரஸ்களுக்கு அவை சார்ந்து வாழும் ஒம்புயிரிகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் இடை உயிரினம் (Intermediate species) தேவைப்படுகிறது. அந்த இடை உயிரினம் ஒன்றாகவோ, ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரினங்களாகவோ இருக்கலாம். அது எதிர்கொள்ள வேண்டிய வளர்சிதை மாற்றங்களின் தேவையைப் பொறுத்து அது மாறுபடும். சில வைரஸ்கள் மனிதர்களைத் தாக்க வேண்டுமெனில், இருபதுக்கும் மேற்பட்ட இடை உயிரினங்களைக் கடந்து வந்தாக வேண்டும். இது ஒவ்வொரு வைரஸுடைய திறன், அது சார்ந்து வாழும் ஒம்புயிரி ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

A health worker takes a nasal swab sample
A health worker takes a nasal swab sample
AP Photo/Aijaz Rahi

ஒரு வைரஸ் கண்டறியப்பட்டால் மேற்கண்ட அத்தனை காரணிகளின் அடிப்படையிலும் அவற்றின் திறனை ஆராய வேண்டும். அந்தத் தகவல்கள் அடுத்து எந்த வைரஸ் நம்மிடையே கேடுகளை உண்டாக்கும் திறனோடு இருக்கிறது என்பதைக் கண்டறிய உதவும். அதையே ஸ்பில் ஓவர் என்ற இந்த இணையதளம் செய்கிறது. இதன் நோக்கம், தொற்றுநோய்களால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கணிப்பதும் மக்களோடு அதற்கு எப்படித் தொடர்பு ஏற்படுகிறது என்பதைக் கண்காணிப்பதும், இவை சார்ந்த தகவல்களைச் சேகரிப்பதும். அதைச் செய்வதன் மூலம், தொற்றுநோய்கள் குறித்த ஆய்வில் இது முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு