Published:Updated:

இந்த நெருக்கடியான சூழலில் அண்டார்டிகாவில் நடப்பது என்ன? - விவரிக்கும் இந்திய விஞ்ஞானி #MyVikatan

Representational Image
Representational Image

அண்டார்க்டிகாவில் நடந்துகொண்டிருக்கும், நடக்கவிருக்கும் மாற்றங்களை இந்திய அரசின் 4வது அண்டார்டிக் ஆய்வுப் பயணக் குழு உறுப்பினர் முனைவர் ஜி.குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பரவலாகத் தொற்றும் கொள்ளை நோயாக உலகம் முழுவதும் கொரோனா அறிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப் படுதலும் எல்லைகளை மூடிப் பாதுகாத்தலும் அறிவுறுத்தப்படுகின்றன. குறுகிய கால கட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய மிகவும் இன்றியமையாத நடவடிக்கைகள். முன்னெச்சரிக்கைகள் கிடைக்காமல் விளைவுகளைக் கண்டு விபரீதங்களைத் தடுக்க, நிறுத்த முனைந்திருக்கிறோம். அல்லது கிடைத்த ஒருசில முன்னெச்சரிக்கைகளைக் கவனிக்கத் தவறிவிட்டோம்.

Representational Image
Representational Image

பருவநிலை மாற்றங்களும் உலகம் முழுவதும் பரவிக்கொண்டிருக்கும் நேரம் இது. அதன் விளைவுகளும் ஜீரணிக்கக்கூடியவை அல்ல. உலகம் வெப்பமயமாகிக் கொண்டுவருகிறது. கடல் நீர் அளவும் உஷ்ணமும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. நீரளவு அதிகரித்தால் சில நகரங்கள் மூழ்கலாம் அல்லது வெள்ளத்தால் தத்தளிக்கலாம். பல உயிரினங்கள் அழிந்து கொண்டிருக்கின்றன. தத்தம் இருப்பிடத்திலிருந்து சில உயிரினங்கள் மறைந்துகொண்டிருக்கின்றன. காடுகளில் தீ ! சுனாமி..! இன்னும் எவ்வளவோ.! உடனடியாக ஏற்படாமல் ஒவ்வொன்றாக வந்துகொண்டிருக்கும் இடர்பாடுகள்...

ஆனால் புவி (கொரோனா போல் இல்லாமல்) நீண்டகாலமாக முன்னெச்சரிக்கைகளைத் தந்துகொண்டுதான் இருக்கிறது. இயற்கைக்கு எல்லைகள் கிடையாது. வேலிகொண்டு அடைக்க இயலாது. தனிமைப்படுத்தவும் முடியாது. சீற்றங்கள் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கும். இந்த விளைவுகளைக் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ தீவிரமாக முனைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி..

எச்சரிக்கை சத்தங்களை ஒருசேர வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இடம் அண்டார்டிகா. உலகின் தென்கோடியில் ஆள் அரவம் இல்லா தென் துருவக் கண்டம் என அசாதாரணமாக இருந்துவிட முடியாது. அண்டார்டிகாவில் நிகழும் வெளிப்படைப் பருவநிலை மாற்றங்கள் பெரிய அளவில் உலகின் மற்ற பகுதிகளுக்கும் விபரீதத் தாக்கங்களைத் தர வல்லன.... தந்துகொண்டிருக்கின்றன. எப்படியிருந்த கண்டம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது நாம் என்ன செய்ய வேண்டும் என்பனவற்றைக் கொஞ்சம் பார்ப்போம்...

ஜி குமார்
ஜி குமார்

ஆர்க்டிக், அண்டார்க்டிக் ஆகிய இரண்டும் துருவப் பிரதேசங்கள் எனினும் அண்டார்டிகா அதிகக் குளிர் வாய்ந்த பகுதி. அதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது ஆர்க்டிக் ஒரு (உறைந்த) கடல். அண்டார்டிகா ஒரு கண்டம். பனியால் மூடப்பட்ட நிலப் பகுதி. ஆர்க்டிக் பிரதேசத்தை விட எட்டு மடங்கு அதிகம் உறைந்த பனி அண்டார்டிக்கில் உள்ளது. கடலால் சூழப்பட்டிருந்தாலும் அண்டார்க்டிக் கண்டத்தின் உள் பகுதிகளுக்கு நீர் தரக்கூடிய சேமித்த வெப்பம் பரவ வாய்ப்புகள் இல்லை. மேலும் குளிர்காலங்களில் கண்டத்தைச் சுற்றியுள்ள கடல் நீர் உறைவதால் கடல்பனி வெகுதூரம் பரவுகிறது. ஏன்...அதனால் அக்காலங்களில் கண்டத்தின் பரப்பளவே இரட்டிப்பாகிறது. அதனால் கண்டத்தில் வெப்ப நீரோட்டங்கள் தரக்கூடிய விளைவுகளும் இருந்ததில்லை. கோடையில் சூரிய ஒளி அதிகம் விழுந்தாலும் கண்டத்தை மூடிய பனி எண்பது விழுக்காட்டிற்கும் அதிகமான ஒளிக்கற்றைகளைத் திருப்பி அனுப்பிவிடுகிறது. மேலும் கண்டத்தின் சராசரி உயரமும் அதிகம்.

கோடையிலும் கண்டத்தின் உட்புறம் சராசரி வெப்பம் சைபர் டிகிரியைத் தாண்டியதில்லை. தென்துருவத்தில் கண்ட மிகக்குறைந்த அளவு வெப்ப அளவு மைனஸ் 82.3 டிகிரி [ ஜூன் 1982 ]. ஆனால், உலகின் மிகக்குறைந்த வெப்ப அளவு மைனஸ் 89.6 டிகிரி [ ஜுலை 1983 ]. வோஸ்டாக் என்ற அண்டார்க்டிகாவின் ரஷ்ய நிலையத்தில் எடுக்கப்பட்டது. கரையோரப் பகுதிகளில் அதுவும் வடபுறம் மூக்கை நீண்டிக்கொண்டிருக்கும் தீபகற்பப் பகுதியில் கோடையில் சில நாள்களில் வெப்பம் அதிகமாகலாம். அப்பகுதியில் அதிகபட்சமாகப் பதினைந்து டிகிரி சென்டிகிரேட் வரை எப்போதோ உயர்ந்திருக்கிறது.

Representational Image
Representational Image

பிப்ரவரி 6ம் தேதி 2020ல் அண்டார்க்டிகாவில் அதிகபட்சமாக 18.3 டிகிரி வரை வெப்ப அளவு சென்றிருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்த்தோமானால் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஜல் ஸ் நகரிலும் அந்த நேரத்தில் அதே வெப்ப அளவே பதிவாகியிருக்கிறது. புவி வெப்ப மயமாகுதலுக்கு அண்டார்க்டிகா தந்திருக்கும் சைகைகளில் இது ஒன்று.

அண்டார்க்டிக் கண்டத்தின் மேற்புறம் அடிந்துள்ள பனியின் தடிமன் கிட்டத்தட்ட மூன்று மைல் அளவு அதிகம். அதாவது உலகிற்குத் தேவையான சுத்த நீரின் தொண்ணூறு விழுக்காடு அண்டார்க்டிகா கண்டத்தில் உள்ளது. உஷ்ணக் காற்றும் வெப்பக்கடல் நீரும் கண்டத்தின் வெப்ப அளவை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. வெப்ப அளவு அதிகரிப்பு உறைந்த பனியை உருக வைத்துள்ளது.

அண்டார்க்டிகாவில் 1980களில் இருந்ததைவிட தற்போது பனி உருகுதல் ஆறு மடங்கு உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. உருகும் பனி உலகின் கடலளவை பத்து அடிகள் வரை உயர்த்தலாம் என அறிஞர்கள் அஞ்சுகின்றனர். கடலோரத்தில் உள்ள முக்கிய நகரங்களின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்...

பனிக்கட்டி ஆறு [ க்ளேசியர் - Glacier ], பனிச் சுவர் [ Ice Shelf ] , மிதக்கும் பனிப் பாறைகள் [ Icebergs ] ஆகியவை அண்டார்க்டிக் கண்டத்துடன் அதிகத் தொடர்புடயவை. அண்டார்க்டிக் போன்ற குளிர்ப்பிரதேசங்களில் குளிர்காலத்தில் உறை பனி வீழ்ச்சி [ snow fall ] அதிகமாகிறது. வெப்பம் குறைவாக இருப்பதால் வீழ்ந்து உறைந்த பனி அதிகம் உருகுவதில்லை. வருடங்கள் கழிகையில் அவ்வாறு சேகரிக்கப்பட்ட உறைபனி பெரும் குன்றுகளாக மாறலாம். எடையும் அதிகரிப்பதால் கீழ்ப்புறத்தில் உள்ள பனி உருகத்தொடங்குகிறது. அவ்வாறு உருகிய பனி ஆறாய் வடியத் தொடங்குகின்றன. இவை ஒரு திட வடிவ ஆறுகள் வேகம் மிகக்குறைவு. சில அடிகளே ஒரு நாளில் நகரலாம்.

Representational Image
Representational Image

பனிக்கட்டி ஆறு கண்டத்திலிருந்து கடலில் விழும்போது கண்டத்தை ஒட்டிக்கொண்டு கண்டத்தின் ஒரு பாகமாவே அமைந்துள்ள மிதக்கும் பெரும் பனிச் சுவர் போன்ற பகுதிகளுடன் இணையலாம். அல்லது பனிப்பாறைகளாய்க் கடலில் விழுந்து நகரலாம்.

பல அடிக்கணக்கில் பிரமாண்டமாய் உயர்ந்து நிற்கும் அப்பனிச் சுவர்களின் சில பகுதிகள் கண்டத்திலிருந்து பிரிந்து மிதக்கும் பனிப்பாறைகளாய் மாறவும் வாய்ப்புகள் அதிகம். அவ்வாறு பிரிந்த சில பகுதிகள் பல கப்பல்களைவிட பெரிதான அளவில் இருந்து பனிமலையே பிரிந்து வந்ததுபோன்ற தோற்றத்தை உண்டு செய்யும். கப்பலுடன் மோதிக் கப்பலை உடைக்கவும் அந்த மிதக்கும் பாறைகளுக்கு வலுவுண்டு. டைட்டானிக் கப்பல் மூழ்கிய பிறகு உலக அளவில் ஐஸ்பெர்குகளைக் கண்டறிந்து தகவல் வெளியிடவே ஒரு கழகம் நிறுவப்பட்டுள்ளது. அண்டார்க்டிகாவை நெருங்க நெருங்க இருபுறமும் மிதக்கும் அப்பனிப்பாறைகளைத் தாழ்வாரமாய்ப் படரவிட்டு கப்பல் முன்னேறுவது ஒரு அற்புதக்காட்சி!

Representational Image
Representational Image

மிதக்கும் பனிப்பாறைகள் வெள்ளையும் வெளிர் நீலமுமாய்க் கலந்தே காணப்படும். தூய நீரின் அடர்த்திக்கும் [ 0.925 ] கடல் நீரின் அடர்த்திக்கும் [ 1.025 ] உள்ள வேறுபாடு காரணமாகப் பனிப்பாறைகள் மிதக்கும்போது பத்தில் ஒன்பது பாகம் நீர் மட்டத்தின் கீழ் இருக்கும். ஆங்கிலப் பழமொழி 'டிப் ஆஃப் ஐஸ்பெர்க்' இதிலிருந்தே தோன்றியது.

பிரச்னைக்கு வருவோம்.

பல தேசங்களின் விண்வெளி ஆராய்ச்சிகள் பூமியில் அவ்வப்போது நிகழும் மாற்றங்களைத் தெரிவித்து வருகின்றன. ஒருமித்த கருத்தாக அவை பெரும்பாலும் குறிப்பிடுவது அண்டார்க்டிகாவின் த்வைட்ஸ் {Thwaites} பனி ஆற்றில் நிகழ்ந்து வரும் மாற்றங்களைத்தான்.

த்வைட்ஸ் பனி ஆறு மிகப் பெரியது. கண்டத்தின் மேற்குப் புறம் அமைந்துள்ளது. இங்கிலாந்தின் பரப்பளவை ஒத்தது. கடலின் அதன் வடிகால் சுமார் 120 கிமீ நீளமுடையது. அதன் படுகை கடலின் அடிப்புறம் ஆயிரம் மீட்டர்கள் வரை நீடிக்கிறது. த்வைட்ஸ் பனி ஆறு கடந்த நூற்றாண்டில் சுமார் 600 பில்லியன் டன் எடையுள்ள பனியை இழந்துள்ளது. ஆனால் கடந்த சில வருடங்களிலேயே சுமார் 50 டன் எடை பனியை த்வைட்ஸ் பனி ஆறு இழந்துள்ளது. சுமார் இரண்டு டிகிரி வெப்பமுள்ள கடல் நீர் இந்தப் பனி ஆற்றின் கீழே வருவதே இதற்கு மூலக்காரணம். இந்தப் பனி உருகுவது மட்டுமே 4 விழுக்காட்டிற்கும் அதிகமான உலகின் கடல் நீர் உயர்வுக்குக் காரணம்.

Representational Image
Representational Image

கண்டத்தை அடையும் முன்னர் கடலைச் சுற்றிப் படர்ந்திருக்கும் உறைபனி அதிகத் தடிமன் இல்லாமல் மிதக்கும் பனித்தகடுகளாய்க் காணப்படும். புவி வெப்பமயமாகுதல் இன்னும் இருபது முதல் இருபத்தி ஐந்து வருடங்களில் இந்தப் பகுதியையே இல்லாமல் செய்துவிடும் என்பதும் வல்லுநர்களின் கருத்து.

அண்டார்க்டிகாவின் உயிரினங்கள் குளிர், அதிகம் குளிர்ந்த கடல் நீர், கடல் பனித்தகடுகள், கண்டத்தின் உறைபனி ஆகியவற்றைச் சார்ந்துள்ளன. அண்டார்க்டிகா என்றவுடனேயே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மனதிலும் வருவது பெங்குவின்கள்தான். பெங்குவின்களைத் தவிர சீல், திமிங்கலம், ஸ்கூவா என்னும் பறவை, கிரில் என்ற ஷ்ரிம்ப் போன்ற உயிரினங்கள் இவற்றில் முக்கியமானவை.

பெங்குவின்களில் பதினேழு வகைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும் அவற்றில் முக்கியமானவை அடிலி, எம்பரர் பெங்குவின் ஆகியவைதான். பெங்குவின்கள் பெரும்பாலும் ருக்கெரிகள் [ rookeries ] என்னும் காலனிகளில் கூட்டங்கூட்டாமாய் வாழ்கின்றன. கடல் மீன்களும் கிரில் உயிரினமும் இவற்றின் உணவுகள்.

Representational Image
Representational Image

பெங்குவின் வகைகளில் அதிக உயரமும் எடையும் கொண்டது எம்பரர் பெங்குவின்கள். பெரும்பாலும் கடலோரப்பகுதிகளில் பனித்தகடுகளில் வசிக்கின்றன. வெப்பமயமாகிக்கொண்டிருக்கும் பூமி கண்டத்தை ஒட்டியுள்ள பனித்தகடுகளை அழித்து வருகின்றன. வசிக்க அதிகம் இடமில்லாத எம்பரர் பெங்குவின் குஞ்சுகள் சீல், திமிங்கலத்துக்கு இரையாகின்றன. இந்த இனம் இப்போது அழியப் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பெட்ரோலியம் எரிபொருள்கள் அதிக கரியமிலவாயுவை [ கார்பன் - டை- ஆக்சைடு ] உமிழ்கின்றன. கடல் நீர் அவற்றை உள்வாங்கி அமிலத்தன்மையை எய்யத்தொடங்கியுள்ளன. கால்சியத்தை நம்பியுள்ள அனைத்து நடவடிக்கைகளும் கடலில் குறையத் தொடங்கியுள்ளன. சீல், திமிங்கலம் போன்றவற்றுக்கும் உணவுத் தட்டுப்பாடு எழலாம்.

உலக பருவநிலைக் கட்டுப்படுத்தி வைக்கும் ஆற்றல் துருவப் பிரதேசங்களுக்கு உள்ளது ஏன்றால் அது மிகையல்ல. ஆர்க்டிக்கும் ஆண்டார்க்டிகாவும் உலகின் குளிர்சாதனப் பெட்டிகள்.

Representational Image
Representational Image

இதில் அண்டார்க்டிகாவின் பங்கு அதிகமானது. புவியின் கூக்குரல்களை நாம் [ இப்போதாவது ] செவிமடுத்துக்கேட்டு உடனடியாக ஆவன செய்வது நமது கடமையாகிறது. நீரைச் சேமிப்போம். பிளாஸ்டிக் உபயோகத்தைக் குறைப்போம். மரங்கள் வளர்ப்போம். பெட்ரோலியம் எரிபொருள்கள் உபயோகத்தைப் படிப்படியாகக் குறைக்கத் தொடங்குவோம்...

விளைவுகள் விபரீதமாகும்போது முகமூடிக் கவசமோ தனிமைப்படுத்தலோ நம்மைக் காக்க முடியாது.

-முனைவர் ஜி. குமார்

[கட்டுரையாளர் ஜி. குமார், பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இந்தியா - அண்டார்க்டிகா தொலைத்தொடர்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு [1984-85 ல்] அண்டார்க்டிகாவில் அதற்கான உபகரணங்களை நிறுவி சேவையைத் தொடங்கியவர்..

மின்னணு தொலைத் தொடர்புத் துறையில் நீண்டகாலப் பணி. ஓய்விற்குப் பின் போபால் நகரில் தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணி புரிகிறார்.]

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு