Published:Updated:

சென்ற ஆண்டு 2,00,000 இந்த ஆண்டு 4,00,000... மாங்குரோவ் காடுகளைக் காக்கும் பெண் வன அதிகாரி!

Seema Adgaonkar.
Seema Adgaonkar. ( Pic: Kartik Chandramouli/Mongabay )

மும்பை மாங்குரோவ் காடுகளைக் காக்கும் வன அலுவலர் சீமா.

மும்பை இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக நகரங்களில் ஒன்று. அதன் இயற்கை அமைப்பிலும் பெரும்பகுதி கடலை யொட்டியவாறே அமைந்திருக்கிறது. செல்வச் செழிப்பான பலமாடி அடுக்கக் குடியிருப்புகள் ஒருபுறம் என்றால், புறா கூண்டு போன்ற சின்னச் சிறு வீடுகள் இன்னொரு புறம். அதிக வெப்பம் சில மாதங்கள் என்றால், கடும் மழை சில மாதங்கள். மும்பையின் இயற்கை அரணாக விளங்குவது அங்குள்ள சதுப்பு நிலக் காடுகள். 66 சதுர கிலோமீட்டர் அளவுள்ள மாங்குரோவ் காடுகள் எழிலையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.

Seema Adgaonkar
Seema Adgaonkar

இக்காடுகளே மும்பையைத் தாக்கும் கடுமையான மழை, வெள்ளம் போன்ற இயற்கை இடரிலிருந்து காத்துவருகிறது. முன்பு 42 சதுர கிலோ மீட்டர் அளவே இருந்த காடுகளை 66 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு விரிவாக்கியுள்ளது MMCU (Mumbai Mangrove conservation unit). இதற்கு முக்கியமான காரணம் சீமா அட்கொயங்கர். தாவரவியல் பட்டதாரியான சீமா, தடகள வீராங்கனையும்கூட. இதுவரை பெண்களால் சாதிக்க முடியாத வனவள பாதுகாப்புத்துறையைத் தேர்ந்தெடுத்ததே இவரின் துணிச்சலைப் பறை சாற்றியது. மஹாராஷ்ட்ராவின் முதல் பெண் கள ஆய்வாளராக, 1984-ம் ஆண்டு வனத்துறையில் பணியில் சேர்ந்தார். மாங்குரோவ் காடுகள் பற்றிய வேலையில் சேர்வதற்கு முன் இவருக்கு அதிகம் தெரியாது. ஆனால், களப்பயணத்தில் இவர் கற்றறிந்தது இவரை உற்காசகத்துடன் பணியாற்ற வைத்தது.

மும்பை MMCU-ல் உள்ள நான்கு பிரிவுகளில், ஒரு பகுதிக்கு அதிகாரியாகப் பணியாற்றும் சீமா, பெண் என்பதால் வனப்பகுதி பெண்களுடன் பழகுவதற்கும், காடுகளைக் காப்பதற்கான முறைகளைப் பயிற்றுவிப்பதற்கும் எளிமையாக முடிந்தது. மேன்குரோவ் செல்லில் பயிற்சி எடுத்த சீமா, பல்வேறு நபர்களுடன் உரையாடி புதிய கருத்துகளையும் பெற்றுக்கொண்டார். பிறகு, தம் குழுவினருடன் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டார்.

இவரின் முயற்சிக்கு உடனே ஆதரவும் வெற்றியும் கிடைக்க வில்லை. ஆனால், தோல்விகள் மூலம் வெற்றிக்கான பாதையைக் கண்டுபிடித்து, அங்கிருந்து புதிய பயணத்தைத் தொய்வின்றி தொடங்கினார். சகதிப் பகுதியில் மரக்கட்டையில் பயணம் செய்யவும், ஆபத்து வரும்போது மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டு தப்பிக்கவும் பழகிக்கொண்டார். பெரிய அளவு படகுகளை இயக்கவும் கற்றுக்கொண்டார். மரக்கன்றுகளை நடுவதோடு நின்றுவிடாமல், அவற்றை முறையாகப் பராமரிப்பதையும் மேற்கொள்ளும் பணிகளைச் செய்தார். அதை விடவும், காடுகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது, அடுத்த தலைமுறைக்கு வனத்தைக் காக்க வேண்டிய அவசியத்தைக் கடத்துவதையும் தயங்காது செய்துவந்தார். மாங்குரோவ் காடுகளின் மூலை முடுக்கெல்லாம் 56 வயதான சீமாவை அறிந்திருக்கும்.

Seema Adgaonkar
Seema Adgaonkar

2005-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்துக்குக் காரணம் மீத்தி (Mithi river) ஆற்றையொட்டிய 18 கிலோ மீட்டரில் இருந்த காடுகளை அழித்ததுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மும்பைக்குக் கடல் மட்டம் அதிகரிப்பதுடன் மிதமிஞ்சி மழை உள்ளிட்டவற்றால் 2080-ம் ஆண்டு பேரழிவு ஏற்படலாம் என்றும் கணிக்கிறார்கள். மும்பை உயர் நீதிமன்றம், "வனப்பகுதிகளைப் பாதுகாப்பதுடன், காட்டுப்பகுதியிலிருந்து 50 மீட்டருக்குள் கட்டடங்கள் ஏதும் கட்டக்கூடாது" என்று உத்தரவிட்டுள்ளது. எனவே காடுகளைக் காப்பது நீதிமன்றத்தின் ஆணையும்கூட.

சுற்றுச்சூழலை நன்கு உணர்ந்த சீமா, மாங்குரோவ் காடுகளை பாராமரிக்கவும், ஆக்கிரமிப்பு கட்டடங்களைத் தடுக்கவும் பெரு முயற்சி எடுத்துள்ளார். அதற்காக, அவர் எதிர்கொண்ட அரசியல் தடைகள் ஏராளம். ஆனால், எதற்கும் அவர் தம் முடிவுகளிலிருந்து பின் வாங்கியதே இல்லை. ஏனெனில், காடுகளும் மும்பை நகரமும் பின்னிப்பிணைந்தவை. அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வனத்தைக் காப்பாற்ற முன் வருகிறார்கள். ஆனால், அளவின்றி கொட்டப்படும் குப்பைகளும் அதில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் காட்டின் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. அதை எதிர்கொள்வதே சீமாவுக்குப் பெரும் சவால்.

மும்பை சதுப்புநிலப் பாதுக்காப்பு குழுவினரும் 25,000 தன்னார்வலர்களும் இணைந்து 8,000 டன் கழிவுகளை அகற்றியுள்ளனர். சென்ற ஆண்டில் 2,00,000 மரக்கன்றுகளை இங்கு நடப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் அதை இரட்டிப்பாக்கி 4,00,000 மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன்பின், சீமாவின் உழைப்பு அபரிமிதமாக உள்ளது. "காடுகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மும்பை கடுமையான பாதிப்பை எதிர்கொள்ள நேரிடலாம். அதைத் தடுப்பதே முதன்மையான பணி" என்கிறார் சீமா.

இயற்கையக் காக்கும் முயற்சிகளே வாழ்க்கையை மேம்படுத்தும். சீமாவின் பணிகளால் மாங்குரோவ் காடுகள் இன்னும் செழிப்புடன் வளரட்டும்.

அடுத்த கட்டுரைக்கு