Published:Updated:

`மழைநீரை வடிய வைக்க டோக்கியோ செய்ததை சென்னையும் செய்யலாமே?' - மூத்த பொறியாளரின் ஆலோசனை

சென்னையில் தேங்கும் மழைநீரை உடனடியாக வடிக்க வைப்பதற்கு வழியே இல்லையா என தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முனைவர் அ.வீரப்பனிடம் கேட்டோம். அதற்கு அவர் சொன்ன விரிவான விளக்கமும், ஆலோசனைகளும்..!

ஒவ்வோர் ஆண்டும் சென்னையில் மழை பெய்யும்போது தண்ணீர் தேங்குவதும், மக்கள் சிரமப்படுவதும் வழக்கமாகிவிட்டது. 2015 சென்னை பெருவெள்ளத்துக்குப் பிறகும், எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை தற்போதைய மழை நிரூபித்துவிட்டது. இவ்வளவுக்கும் கடந்த சனிக்கிழமைதான் மழை தொடங்கியது. அதற்கே சென்னை மாநகரம் மிதக்கிறது. அரசியல் கட்சிகளும் ஒருத்தரை மாற்றி ஒருத்தர் கைகாட்டுவதுதான் தொடர்கிறது. சென்னையில் தேங்கும் மழைநீரை உடனடியாக வடிக்க வைப்பதற்கு வழியே இல்லையா என தமிழ்நாடு மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் முனைவர் அ.வீரப்பனிடம் கேட்டோம்.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்

இந்தியாவில் சென்னைதான் மழையால் அதிகம் பாதிக்கப்படுகிறதா?

``இல்லை. இந்தியாவில் மழையால் அதிகம் பாதிக்கப்படும் மாநகரம் மும்பை. அதற்கடுத்து பெங்களூரு. அடுத்து கொல்கத்தா, டெல்லி மாநகரங்கள் வருகின்றன. நகரமயமாக்கம் வேகமாக நடக்கும் நகரங்களிலும் இதுபோன்ற பருவமழைக் காலங்களில் தண்ணீர் தேங்கத்தான் செய்யும். இந்தியா வெகு வேகமாக நகரமயமாகி வருகிறது. நமது நகரங்களால் பெருமழையை எதிர்கொள்ள முடியவில்லை.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் மாநகரப் பகுதிகளில் கட்டடங்கள் கட்டுவதைக் குறைக்க வேண்டும். குறிப்பாக, அடுக்குமாடி கட்டங்களைக் கட்டுவதைக் குறைக்க வேண்டும். இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்புகளை அதிகம் கொண்ட மும்பையும் பெங்களூரும் திணறுகின்றன. ஒரு சதுர கிலோமீட்டருக்கு இத்தனை வீடுகள்தான் கட்ட வேண்டும் என்று தேசிய கட்டட விதிமுறை (National Building Code) இருக்கிறது. அதேபோன்று இத்தனை அடுக்கு மாடிகள்தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால், கட்டடம் கட்டுவோர் அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.”

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்
Photo: Jerome / Vikatan
2015 Vs 2021... சென்னை பெருமழையும், திமுக, அதிமுக அரசுகளின் செயல்பாடுகளும்! - ஒரு பார்வை

ஏன் அடுக்கு மாடி கட்டடங்களைக் கட்டக்கூடாது என்கிறீர்கள்?

``ஓர் அடுக்குமாடி கட்டடத்தில் 100 லிருந்து 1,000 பேர் வசிக்கிறார்கள். இதிலிருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்கு நம்மிடம் எந்த அமைப்புகளும் இல்லை. இப்படியிருக்கும் சூழ்நிலையில் கழிவுநீரை லாரியில் கொண்டுபோய் ஆற்றிலோ, ஏரியிலோ சேர்க்கும் நிலைதான் உள்ளது. இங்கு பாதாள சாக்கடைத் திட்டம் எல்லாம் திரும்பவும் நம்முடைய நீர்நிலைகளில்தான் வந்து சேர்கின்றன. இப்படியொரு மோசமான திட்டம் உலகில் வேறெந்த நாடுகளிலும் இல்லை.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சென்னையின் தெருக்களில் தேங்கும் மழைநீரை வடிக்க என்ன வழி?

``முதலில் சென்னையின் நிலவியல் அமைப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்நகரம் மேடு, பள்ளங்கள் இல்லாத சமதளப் பரப்பைக் கொண்டது. கிட்டத்தட்ட கடல் பரப்புக்கு இணையாகத்தான் நகரமும் இருக்கிறது. அப்படியிருக்கும்போது தண்ணீர் எப்படி வழிந்தோடும். நிறைய பேர் சொல்கிறார்கள் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது இந்த மாதிரி பிரச்னையெல்லாம் வரவில்லை என்று. அப்போது இருந்த சென்னையின் மக்கள்தொகையும், இப்போது இருக்கும் சென்னையின் மக்கள்தொகையும் வேறு. இன்னொன்று சென்னை போன்ற நகரங்களின் நிலவியல் அமைப்புக்கு தண்ணீர் வழிந்தோடி சேகரமாவதற்கு ஏரிகள்தான் சரியான தீர்வு. நம் முன்னோர்களின் மகத்தான யோசனையின் பலன்தான் ஏரிகள். அந்த ஏரிகள்தான் இத்தனை ஆண்டுகளாகப் பெரு வெள்ளத்தைத் தாங்கி வந்தன.

சென்னை வெள்ளம்
சென்னை வெள்ளம்
Photo: Jerome / Vikatan
சென்னை வெள்ளம்: `ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு; நடவடிக்கை நிச்சயம்’ - முதல்வர் ஸ்டாலின்

ஆனால், ஆட்சியாளர்கள், அதிரிகாரிகள், மக்களின் ஒழுங்கின்மையால் சென்னைக்குள்ளிருந்த ஏரிகள் கபளீகரம் செய்யப்பட்டுவிட்டன. இப்போது தண்ணீரை வழிந்தோடு என்றால் எங்கே வழிந்தோடும். இப்போது போடப்பட்டுக் கொண்டிருக்கும் மழைநீர் வடிகால் பாதைகள் முறையாகப் போடப் படுவதில்லை. வெறும் பள்ளங்களை எடுத்து இணைத்துவிட்டால் மட்டும் தண்ணீர் வழிந்தோடிவிடுமா என்ன? அதை கிராவிட்டி புளோ முறையில் செயல்படுத்தினால் மட்டுமே தண்ணீணர் வழிந்தோடும். இல்லையென்றால் கோடிக் கணக்கில் செலவு செய்தாலும், பலன் ஒன்றையும் பார்க்க முடியாது. கடலில் கரைத்த பெருங்காயம்போலத்தான் இருக்கும்.”

சரி, இதற்கு என்னதான் தீர்வு?

``தரைகீழ் சுரங்க நீர்த்தேங்கங்களை (Tunnel Reservoir Project) உருவாக்குவதுதான் சிறந்த வழி. சென்னையைச் சுற்றி தேர்வாய் கண்டிகை போன்ற நீர்த்தேக்கங்களை உருவாக்குகிறோம். அதேபோன்று பூமிக்குள் நீர்த்தேக்கங்களை உருவாக்கினால் நீண்ட காலத்துக்குப் பலன் கொடுக்கும். அமெரிக்காவின் சிகாகோ, மலேசியாவின் கோலாலம்பூர், ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் ஹாங்காங் போன்ற நகரங்களில் இதுபோன்ற நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன. தெலங்கானாவில் கோதாவரி ஆற்றின் குறுக்கேயும் இந்த முறையில் சுரங்க நீர்த்தேக்கங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதற்கு செலவு அதிகமாகும். ஆனால், சென்னை வெள்ளத்துக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

மழை
மழை
Photo: Rakesh.P / Vikatan
சென்னை: `தத்தளிக்கும் தி.நகர்; கோட்டைவிட்ட அதிமுக; சாட்டையைச் சுழற்றும் திமுக!'

எப்படி சென்னைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மெட்ரோ ரயில் சுரங்க பாதையைக் கொண்டு வந்தோமோ அதேபோன்று வெள்ள நீர் வடிவதற்கும் சுரங்க நீர்த்தேக்கங்களை உருவாக்குவது காலத்தின் தேவை. இப்படி சுரங்கங்களில் சேமிக்கும் நீரை பம்பிங் செய்து மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். பிரதமர் மோடி சொல்லும் புதிய இந்தியா இதுபோன்ற திட்டங்களைக் கொண்டு வருவதில்தான் இருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் மழைக்குப் பாதிக்கப்படுகின்றன. அங்கெல்லாம் இதைச் செயல்படுத்திப் பார்க்கலாம். தமிழக அரசும் இந்த முறையைச் செயல்படுத்த பரிசீலிக்கலாம்.”

இந்த முறை எப்படிச் செயல்படுத்தப்படுகிறது?

``சுரங்க நீர்த்தேக்கங்களின் மகிமையை அறிய நாம் ஹாங்காங்குக்கும் டோக்கியோவுக்கும் சென்று பார்க்க வேண்டும். ஹாங்காங்கின் தை-ஹாங் என்ற இடத்தில் ஒரு சுரங்க நீர்த்தேக்கத்தைக் கட்டினார்கள். பெருமழையின்போது கூடுதல் மழைநீரை இந்த நீர்த்தேக்கத்துக்குக் கடத்திவிடுவார்கள். பிற்பாடு மழை குறைந்ததும் இந்த நீரை வெளியேற்றுவார்கள். இந்த நீர்த்தேக்கம், மூன்று கால்பந்தாட்ட மைதானப் பரப்பளவில் இருக்கும். இதன் கொள்ளளவு 35 லட்சம் கனஅடி. 2017-ல் ஹேப்பி வேலி எனும் இடத்தில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தின் கீழும் இதே போன்ற ஒரு சுரங்க நீர்த்தேக்கத்தைக் கட்டினார்கள். 2006-ல் இது போன்ற நீர்த்தேக்கத்தை டோக்கியோ கட்டியது. ஆனால், இதன் கொள்ளளவு ஹாங்காங்கைவிட நான்கு மடங்கு பெரிதானது. இவை பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டவை.

முனைவர் வீரப்பன்
முனைவர் வீரப்பன்

ஹாங்காங்கும் டோக்கியோவும் இடநெருக்கடி மிகுந்த நகரங்கள். ஆகவே, அவர்கள் மழை நீரைச் சேமிக்க நிலத்துக்குக் கீழே போனார்கள். ஆனால், நிலத்துக்கு மேல் நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற எண்ணற்ற குளங்களையும் ஏரிகளையும், அவற்றின் வரத்துக் கால்வாய்களையும் நாம் ஆக்கிரமித்து அழித்துவிட்டோம். அதன் விளைவுதான் சாதாரண மழைக்கே சென்னையில் தண்ணீர் தேங்குகிறது. இனியாவது அரசுகள் விழித்துக்கொள்ள வேண்டும்.”

விழித்துக் கொள்ளுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு