Published:Updated:

`வைரஸ் கொசுக்களை அழிக்க இதுதான் ஒரே வழி!' -டெங்குவைக் கட்டுப்படுத்தும் சிங்கப்பூரின் புதிய திட்டம்

சிங்கப்பூரில் உள்ள தேசியச் சுற்றுச்சூழல் நிறுவனம், `Project Wolbachia Singapore' எனும் பெயரில் இதற்கான ஆய்வை மேற்கொண்டது.

கொசு உற்பத்தி
கொசு உற்பத்தி ( freepik )

டெங்குவை உருவாக்கும் கொசுக்களை ஒழிக்காதவரை, டெங்கு வைரஸின் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியாது. சரி, கொசுக்களை ஒழிக்க ஏதாவது வழி இருக்கிறதா? இதைத் தீவிரமாக யோசித்த சிங்கப்பூரின் ஆய்வாளர்கள் குழுவுக்கு, உதித்தது அந்தப் புதிய திட்டம்.

'Project Wolbachia Singapore' ஆய்வுக்குழு.
'Project Wolbachia Singapore' ஆய்வுக்குழு.
greatnewplaces.com

பொதுவாக, வைரஸ் பாதிப்புள்ள ஒருவரைக் கடிக்கும் கொசுவுக்கு, அந்த வைரஸின் தாக்கம் வந்து சேரும். அது மற்ற மனிதர்களைக் கடிக்கும்போது, வைரஸ் நோய்கள் அவர்களுக்கெல்லாம் பரப்பப்படும். பெண் கொசுக்கள் மட்டுமே மனிதர்களைக் கடிக்கும் என்பதால், அவையே வைரஸ் நோய் பரவலுக்குக் காரணமாகின்றன.

பொதுவாக, டெங்கு உள்ளிட்ட வைரஸ் நோய்களைப் பரப்புபவை, ஏடிஸ் வகை பெண் கொசுக்கள். ஒரு பெண் கொசு ஒரே சமயத்தில் சராசரியாக நூறு முட்டைகளை இடுவதால் கொசுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. அதனால், சிங்கப்பூர் ஆய்வாளர்கள் குழு, முதலில் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என முடிவு செய்தது.

ஹேர்ஸ்டைல் முதல் காலணி வரை... ஆண்களுக்குப் பெண்களிடம் லைக்ஸ் குவிக்கும் 5 விஷயங்கள்!
கொசு
கொசு
pexels

சிங்கப்பூரில் உள்ள தேசியச் சுற்றுச்சூழல் நிறுவனம், `Project Wolbachia Singapore' எனும் பெயரில் இதற்கான ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம், ஒரு வகையான ஆண் கொசுவை உற்பத்தி செய்து, அதை ஏடிஸ் பெண் கொசுவுடன் இணைசேர வைத்தது. இதனால், ஏடிஸ் பெண் கொசு இனப்பெருக்கம் செய்யும் சக்தியை இழந்துவிடும். எனவே, ஏடிஸ் கொசுக்களின் பெருக்கம் தடுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் இந்த நல்ல ஆண் கொசுக்கள் மனிதர்களைக் கடிக்காது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில இடங்களில், இக்கொசுக்களைப் பரவலாக விட்டு, பலகட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் 90% வெற்றிபெற்றிருக்கிறது, சிங்கப்பூரின் இந்த ஆய்வாளர்கள் குழு. இதையடுத்து, இந்த நல்ல கொசுக்களின் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கத்தில், சிங்கப்பூரில் 'கொசு உற்பத்தி தொழிற்சாலை' தொடங்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் மூலம், கேடு விளைவிக்கும் கொசுக்களின் இனப்பெருக்கம் முடக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நல்ல மற்றும் கெட்ட கொசுக்கள் அனைத்தும் அதன் வாழ்நாள் முடிந்ததும் இயற்கையாகவே இறந்துவிடும். எனவே, தற்போது சிங்கப்பூர் மக்கள் டெங்கு மற்றும் கொசுக்கள் இல்லாத வருங்காலத்தை எதிர்நோக்கி ஆவலோடு காத்திருக்கிறார்கள்!