Published:Updated:

`25 ஆண்டுகளில் இல்லாத சோகம்!'- காப்பான் படமும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பும்

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு ( AP )

கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசம் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு

`காப்பான்' படத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகளை படையெடுக்கச் செய்து, வயல்களை அழித்து பாலைவனமாக்க திட்டமிடுவான் கார்ப்பரேட் வில்லன். இந்தக் காட்சியை நிஜமாக்கும் வகையில் சோமாலியாவிலும், பாகிஸ்தானிலும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஒருவார காலமாகவே இந்த இரண்டு நாடுகளிலும் வெட்டுக்கிளிகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்ட விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகள் படையெடுப்பது ஆப்பிரிக்க நாடுகளில் சகஜமான விஷயம்தான் என்றாலும் இந்தமுறை வந்துள்ள படையெடுப்பால் ஏற்பட்டுள்ள சேதம் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு படுமோசம் என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
AP

சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளின் வயல்களில் செய்த அட்டகாசத்தால் சுமார் 1,75,000 ஏக்கரில் விளைந்த தானியங்கள் ஒட்டுமொத்தமாக சீரழிந்துவிட்டன. இந்தத் தானியங்கள் சேதமடையாமல் அறுவடை செய்யப்பட்டிருந்தால் ஓராண்டுக்கு பத்து லட்சம் பேருக்கு உணவு அளிக்க உதவியிருக்கும் என்கிறது ஆய்வு முடிவுகள். வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சோமாலியா நாட்டில் தற்போது தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் அறுவடை தொடங்குவதற்கு முன்பு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்று அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால் அவர்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்.

Vikatan

சோமாலியா மட்டுமல்ல, நமது அண்டை நாடான பாகிஸ்தானையும் இந்த வெட்டுக்கிளிகள் விட்டுவைக்கவில்லை. அங்கும் தங்களின் படையெடுப்பை நிகழ்த்தி வருகின்றன. பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான சிந்து முதல் வடகிழக்கு மாகாணமான கைபர் பக்துவா வரை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்டவைகளை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துவருகின்றன. இதனால் அந்நாட்டு விவசாயிகள் பலத்த சேதத்தை எதிர்கொண்டுள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு கைகொடுக்க வெட்டுக்கிளைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு முன்வந்துள்ளது.

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு
AP

அதேநேரம் தற்போதைய தட்பவெட்ப நிலை வெட்டுக்கிளிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக இருப்பதால் வெட்டுக்கிளி படையெடுப்பு ஏப்ரல் 2020 வரை தொடரும் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். இதைவிட ஒரு அதிர்ச்சித் தகவல். பாகிஸ்தான் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அந்நாட்டின் வழியாகவே இந்தியாவின் குஜராத் மற்றும் ராஜஸ்தானிலும் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. இதுவரை குஜராத்தின் நான்கு மாவட்டங்களில் இந்த வெட்டுக்கிளிகள் விவசாயப் பயிர்களை நாசமாக்கியுள்ளன. இதன் வீரியம் இந்தியாவில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு சார்பில் 11 குழுக்கள் குஜராத்துக்கு அனுப்பப்பட்டு தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு