Published:Updated:

மண்ணால் கட்டப்பட்ட அணை... மண்ணுக்குள் மூழ்கிய கோயில்! - பவானி அணை சுவாரஸ்யங்கள்

சி.கிருஷ்ணகுமார்
அ.கெளசல்யா

தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய மண் அணை எனப் பெயர்பெற்றது. தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணை எனும் சிறப்புப் பெயரும் பெற்றது.

Bhavanisagar dam
Bhavanisagar dam ( சி.கிருஷ்ணகுமார் )

'அணை இன்றி முற்றுப்பெறாது நீரின் அழகு' என்பார்கள். தமிழகத்தில் பல அணைகள் உள்ளன. காலை வெயில் நேரத்தில் ஆதவனின் பிரதிபலிப்பால் நீர் ஆரஞ்சு நிறத்திலும், ஓயாமல் பாயும் அலையின் காரணமாக எழும் நுரை வெள்ளை நிறத்திலும், பாசனத்தின் காரணமாகப் பச்சை நிறத்திலும் இருந்து, நம் நாட்டின் மூவர்ணக் கொடியின் நிறத்தைக் காட்டுகிறது ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை.

சத்தியமங்கலத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவில், பவானி ஆறும் மாயாறும் ஒன்றுகூடும் இடத்தில் உள்ளது, பவானிசாகர் அணை. 1948-ல் பத்துக் கோடியே ஐம்பது லட்சம் மதிப்பில் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டது. 20-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இப்பணியில் ஈடுபட்டனர். பவானிசாகர் அணையின் கட்டுமானப் பணி, ஏழு ஆண்டுகளில் நிறைவுபெற்றது. காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, 1955 ஆகஸ்ட் 19-ம் தேதி, பவானிசாகர் அணை திறக்கப்பட்டது.

Bhavanisagar dam
Bhavanisagar dam
சி.கிருஷ்ணகுமார்

தெற்கு ஆசியாவின் மிகப் பெரிய மண் அணை எனப் பெயர் பெற்றது. தமிழகத்தில் இரண்டாவது மிகப்பெரிய அணை எனும் சிறப்புப் பெயரும் பெற்றது. ஈரோடு, கரூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த அணையிலிருந்து நீர் செல்கிறது. இந்த அணையால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். பவானிசாகர் அணையால் 32.8 டிஎம்சி வரையான நீரை தேக்கிவைக்க முடியும். அணையின் மொத்த உயரம் 120 அடிகள். அதில் உள்ள சேறு, சகதியெல்லாம் கழித்தால், 105 அடியாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. பவானிசாகர் அணையின்மூலம் 16 மெகவாட் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து கம்பீரமாக நிற்கும் மண்ணால் கட்டப்பட்ட அணை என்ற சிறப்புப் பெற்றது. இப்போது 64 ஆண்டுகள் முடிந்து 65-ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது பவானிசாகர் அணை.

ஒவ்வோர் அணையும் பல ஊர்களை அழித்துக் கட்டப்பட்டது. ஊர்களில் உள்ள மக்களை பக்கத்து ஊருக்குப் பெயர்த்துவிட்டு, கோயிலை இடிக்காமல் அணையைக் கட்டிமுடித்தனர். 2016-ம் ஆண்டு, பவானிசாகர் அணையின் நீர் மட்டம் 52 அடிகளாகக் குறைந்த நிலையில், நீரில் மூழ்கியுள்ள தனநாயக்கர் கோயில் வெளிப்பட்டது. இந்த தனநாயக்கர் கோயிலில், மாதவராயர் கோயிலும் சோமேஸ்வரர் மங்களாம்பிகையும், பீரங்கித் தட்டும் உள்ளன. அவ்வூரில் வாழ்ந்த தனநாயக்கர் எனும் அரசர் வழிபடுவதற்கு ஏதுவாக, நுணுக்கமாக கோயிலைக் கட்டினார். இந்தக் கோயில், சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தமிழருடைய வரலாறும் அப்பகுதியின் நிலவியல் கோட்பாடும் பொறிக்கப்பட்டுள்ளன.

Bhavanisagar dam
Bhavanisagar dam
சி.கிருஷ்ணகுமார்

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் உள்ள சித்தனக்குட்டை அருகே, யானைகள் நீர் பருக வரும். மீனவர்களும், விவசாயிகளும் பவானிசாகர் அணையால் பலன் அடைந்துவருகின்றனர். ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் விவசாயிகள் இந்த அணையின் நீரை நம்பியே உள்ளனர். 

2016-ம் ஆண்டு, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்ததாகவும், ஆகஸ்ட் 15, 2018-ல் அணையின் நீர்மட்டம் 120 -க்கு 117 அடிகள் நிரம்பியிருந்தது. முழுக் கொள்ளளவு எட்ட 3 அடிகளே உள்ள அளவிற்கு நீர் உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 117 அடிகளாக இருந்த நிலையில், நீர்வரத்து 44,828 கன அடிகளாக இருந்தது.

அணை பாதுகாப்பு மசோதா பாதுகாப்பானதா?

தற்போது பவானிசாகர் அணையின் நீர்மட்டம், 87 அடிகளை எட்டியிருக்கிறது. 20 டிஎம்சி நீர் உள்ள நிலையில், மேலும் நீரைத் தேக்கிவைக்க முடியும். நீர்மட்டத்தின் அளவைக் கண்டு பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

64-ம் ஆண்டு முடிந்து 65-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது பவானிசாகர் அணை. மண்ணைக் குழைத்து கட்டப்பட்டாலும் பழைமை மாறாமல் கம்பீரமாக இன்றும் நிற்கிறது, பவானிசாகர் அணை.