Published:Updated:

கடல்வாழ் உயிரினத்தை கையில் தூக்கிய நடிகை... வழக்குப்பதிவு செய்த காவல்துறை!

மு.ராஜேஷ்

நடிகை லீ யுல்-எம் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில, அவருக்கு அபராதமாக 40,000 பாட் வரை விதிக்கப்படும் என்றும் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு

கடல்வாழ் உயிரினம்
கடல்வாழ் உயிரினம்

தென் கொரிய நடிகையான நடிகை லீ யுல்-எம் (Lee Yul-em) என்பவர் மீது கடல்வாழ் உயிரினத்தை வேட்டையாடியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

நடிகை லீ யுல்-எம்(Lee Yul-em)
நடிகை லீ யுல்-எம்(Lee Yul-em)

“The Law of the Jungle” என்ற டி.வி நிகழ்ச்சி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இதில், தென்கொரியாவைச் சேர்ந்த பிரபலங்கள் பங்குபெற்றுவருகிறார்கள். கடினமான சூழல்களில் அவர்களுடைய உயிர்வாழும் திறன்களை இந்த நிகழ்ச்சியில் காட்டுகிறார்கள். தாய்லாந்தில் இருக்கும் ஹாட் சாவ் மாய் (Hat Chao Mai) தேசிய கடல் பூங்கா பகுதி, பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இங்கே, கடல் உயிரினங்களை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் அந்தப் பகுதியில் குறிப்பிட்ட டி.வி நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. அப்போது நடிகை லீ யுல்-எம், மூன்று பெரிய அளவிலான கிளிஞ்சல் வகை உயிரினம் ஒன்றை கடலிலிருந்து வெளியே எடுத்தது கேமராவில் படம் பிடிக்கப்பட்டது. அதன் பின்னர், ஜூன் 30-ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அந்த உயிரினம் சமைத்து சாப்பிடப்பட்டதும் தெரிவிக்கப்பட்டது.

அது, விதிகளை மீறி வேட்டையாடியதற்குச் சமம் என்பதால் ஹாட் சாவ் மாய் தேசிய கடல் பூங்கா பகுதியின் தலைமை அதிகாரி நாராங் கொங்கியாட் (Narong Kongeiad), வனப் பாதுகாப்பு சட்டங்களை மீறியதாக காவல்துறையினரிடம் புகார் அளித்திருக்கிறார்.

"இந்தக் குற்றத்துக்கு நேரடிப் பொறுப்பு, அந்த உயிரினத்தை கையில் தூக்கிய அந்த நடிகைதான். அவர், விதிகளை மீறியிருக்கிறார்" என அவர் தெரிவித்திருக்கிறார். அதையடுத்து இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான தென்கொரியாவின் Seoul Broadcasting System உள்ளுர் விதிகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் நிகழ்ச்சி படம்பிடிக்கப்பட்டுவிட்டது எனவும், அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளது.

கடல்வாழ் உயிரினம்
கடல்வாழ் உயிரினம்

நடிகை லீ யுல்-எம் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு தாய்லாந்து பணம் 40,000 பாட் வரை அபராதமாக விதிக்கப்படும் என்றும் அதிகபட்சமாக நான்கு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.