Published:Updated:

சென்னையின் வளர்ச்சிக்கு நடுவே வீழ்ந்த அடையாறு; ஒரு காலத்தில் எப்படி விளங்கியது தெரியுமா?

மனித வரலாற்றில் ஒவ்வொரு நதியுமே ஒவ்வொரு கலாசாரத்தின் தோற்றுவாயாகச் செயல்படுகிறது. நதிக்கும் மனித மரபுகளுக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. அப்படிப்பட்ட ஒரு நதிதான் சென்னையின் அடையாறு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்றைய சூழலில் சென்னை என்றாலே, மூக்கைத் துளைக்கின்ற நாற்றத்தோடு கழிவு சூழ்ந்திருக்கும் நதிகளே அடையாளமாக மாறிவிட்டது. கூவம், அடையாறு ஆகிய இரண்டு நதிகளும் சந்தித்துக்கொண்டிருக்கும் வன்கொடுமைகளை வார்த்தைகளில் சொல்லிமாளாது.

மனித வரலாற்றில் ஒவ்வொரு நதியுமே ஒவ்வொரு கலாசாரத்தின் தோற்றுவாயாகச் செயல்படுகிறது. நதிக்கும் மனித மரபுகளுக்குமான தொடர்பு மிகவும் நுட்பமானது. அப்படிப்பட்ட ஒரு நதிதான் சென்னையின் அடையாறு. இன்றைய தலைமுறையினரைப் பொறுத்தவரை, அடையாறு என்றால், மேம்பாலத்தைக் கடந்து செல்கையில் மூக்கைப் பிடிக்க வைக்கின்ற நாற்றமும் கருகருவென்று சாக்கடைக் கழிவு நிறைந்த நீரும் மட்டுமே தெரியும். ஆனால், அந்த நதியைச் சார்ந்திருக்கும் வரலாற்றின் பெருமையை இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் உணரவில்லை.

அடையாறு பகுதி
அடையாறு பகுதி

அடையாறு, ஆண்டின் பெரும்பாலான நாள்களுக்கு நீர் வரத்து இன்றியே காணப்படும். மழைக்காலத்தின்போது, குறிப்பாக செம்பரம்பாக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்படுகின்ற காலகட்டத்தில்தான் அடையாறு பெருக்கெடுத்து ஓடும். மணிமங்கலத்தில் தொடங்கும் இந்த நதியில், செம்பரம்பாக்கத்திலிருந்து வருகின்ற ஏரி நீர் திருமுடிவாக்கத்தில் இணைகிறது. 40 கி.மீ நீளம் கொண்ட இந்த நதியின் மொத்த நீர்ப்பிடிப்புப் பகுதி 850 சதுர கி.மீ.

100 ஆண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேயர்கள் அந்த நதியைச் செங்கல்பட்டு நதி என்றே அழைத்தனர். பல நூறு மீட்டர் அகலமுடைய இந்த நதியுடைய கடலில் கலக்கும் கழிமுகப் பகுதியின் அகலம் வெறும் 5 மீட்டர்தான். அடையாற்றிலிருந்து செல்கின்ற நீர் பெரும்பாலும் கடலில் கலப்பதில்லை. அளவுக்கு அதிகமாகும் உபரி நீர் மட்டுமே கடலுக்குச் சென்று கொண்டிருக்கும்.

அடையாறு தொடங்குகின்ற மணிமங்கலத்தில், பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்குமான போர் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. மகாராஷ்டிரா முதல் கர்நாடகா வரை நீண்டிருந்த சாளுக்கியப் பேரரசு, காஞ்சிபுரத்தைக் கைப்பற்றுவதற்காக நடத்திய அந்தப் போர் அடையாற்றுக் கரையில்தான் நடந்துள்ளது. அதேபோல், புனித ஜார்ஜ் கோட்டைக்கான போரில் ஃபிரெஞ்சு கிழக்கிந்தியக் கம்பெனியின் படையும் ஆற்காடு நவாப் படையும் மோதியது அடையாற்றுக் கரையில்தான்.

அடையாறு நதிக்கு வரலாற்று ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் இருந்ததோ, அதைவிட அதிக முதன்மைத்துவத்தோடு சமூக ரீதியாக உள்நாட்டு மீனவர்களின் வாழ்வியலில் பங்கு வகித்தது. 50 ஆண்டுகளுக்கு முன்னர், அடையாறு முகத்துவாரம் மிகவும் விரிவாக இருந்தது. அன்று நதி நீரைப் பார்த்தால், வானின் நீல நிறத்துக்கு ஒப்பாக இருக்குமென்று தன்னுடைய பழைய நினைவுகளைத் தூசு தட்டி எடுத்து நம்மோடு பகிர்ந்து கொண்டார், 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர் எஸ்.பாளையம்.

Adyar River, 1905
Adyar River, 1905
Vikatan

அவரிடம் பேசியபோது, ``அடையாறு முகத்துவாரத்துல ஷீலா, பதலா, கோலா, வஞ்சிரம்னு மீன்கள் கடலுல இருந்து முகத்துவாரத்துக்குள்ள புகுந்து ஆத்துக்குள்ள வரும். சுறா மீன் கூட உள்ள வர்றதைப் பார்த்துருக்கோம். ஒருகாலத்துல, அடையாற நம்பித்தான் இந்த மக்களோட வாழ்வாதாரமே இருந்துச்சு. அன்னைக்கெல்லாம், அடையாற்றுல வெளிநாட்டுப் பறவையெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பாக்க முடிஞ்சது. மடவு மீனு என்ன, கானாங்கெளுத்தி மீனு என்ன, அது எல்லாத்தையும் பிடிக்க பறவைங்க கூட்டமா வரும். இதுல பொழைக்குறது பல ஆயிரம் பேரு இங்க வந்து வாழலாம். சுருவலை, கொண்ட வலை, விசிறு வலை, மொடா வலை, ஓ வலைனு எத்தன வகையான வலைகள பயன்படுத்தி அடையாத்துல மீன் பிடிச்சாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஓ வலைன்னு ஒரு வலை இருக்கு. அதுல ஒரு வலைய பயன்படுத்த 12 பேரு வேணும். அவ்வளவு பெரிய மீன் பிடி வேலையெல்லாம் இந்த ஆத்துல நடந்திருக்கு. இதுக்கு ரொம்ப மவுசு, நல்ல வருமானம் இருந்துச்சு. இது 16 குடும்பங்க வாழ்றதுக்கு ஆச்சு. கொண்ட வலை இறால் புடிக்குறதுக்கு, ரெண்டு வலைய முடிபோட்டு ஓடுற தண்ணில கட்டி வெச்சு புடிப்பாங்க. அரைமணிநேரத்துல நல்லா பெரிய பெரிய இறால் கிடைக்கும்.

அடையாறு
அடையாறு
NetProwler/ Wikimedia
மெட்ராஸ் வரலாறு: சென்னையில் இத்தனை ஏரிகள் இருந்தனவா? - பகுதி 13

அவையெல்லாம், இன்னிக்கு ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விக்குது. நாராயணசாமி தோட்டத்துல சிறுவலை போடுவாங்க. அடையாறுல அந்த வலையில கிடைக்குறத நம்பி 500 குடும்பங்களாவது வாழ்ந்துச்சு.

ஆனா, இப்போ முகத்துவாரமே அடைஞ்சு கெடக்குது, நாத்தமடிக்குது. கால்வா தண்ணிய விடக்கூடாது. பட்டினம்பாக்கத்துல இருந்து கடைசி வரைக்கும் சுமாரா 16-ல இருந்து 18 அடி வரைக்கும் கப்பல் போற மாதிரி ஆழப்படுத்தணும். கழிவு, சேறு எல்லாத்தையும் தூர்வாருற கப்பல எடுத்தாந்து சுத்தம் பண்ணணும். அதுக்கு அப்புறமும் இங்க மீனு வரலைன்னா, நா இந்த ஊருலயே இல்ல" என்று வேதனை மிகுந்த குரலில் உறுதியாகச் சொல்கிறார்.

அடையாற்றைச் சாக்கடையாக்குவதற்கான முயற்சி, 1960-களில் தொடங்கியது. சென்னை கடலோரப் பகுதிகளில் வேகமாக அதிகரித்த பொருளாதார மாற்றங்கள், கடந்த 60 ஆண்டுகளில் அந்த நதியைச் சுற்றி தொழிற்சாலைகளின் வளர்ச்சியைத் தீவிரப்படுத்தியது. தொழிற்சாலைக் கழிவுகள் மட்டுமன்றி, சென்னை குடியிருப்புப் பகுதிகளின் கழிவுகளையும்கூட மாநகராட்சி நிர்வாகம் போதிய மேலாண்மையைச் செய்யாமல், கூவம் மற்றும் அடையாற்றிலேயே திறந்துவிடத் தொடங்கினர். கழிவுகளைக் கண்களை மூடிக் கொண்டு, ஆறுகளில் திறந்துவிடுகின்ற பழக்கம் என்பது, இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதுமாகச் சேர்த்து நவீனகால நகரக் கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது இப்படித்தான் நகர்ப்புற திட்டக் குழுக்கள் வடிவமைத்தன. இப்போது வரை அதுவே நடைபெறுகிறது.

Adyar River/ Manapakkam Bridge
Adyar River/ Manapakkam Bridge
Ravichandar84/ Wikimedia Commons
மெட்ராஸ் டே: `டிராம் வாகனம், பக்கிங்ஹாம் கால்வாய்,' - சென்னையில் மறைந்துபோன விஷயங்கள்!

இந்திய நகரங்களுக்கும் அவற்றிலுள்ள நீர்நிலைகளுக்கும் இடையிலான உறவு இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமானதாக இல்லை. அதில், சென்னை தனித்துவமானது. நகரத்தின் மையப்பகுதியை ஊடுறுவிச் செல்கின்ற இரண்டு முக்கிய நதிகளைத்தான் நாம் பெருநகரத்தின் கழிவுக் கூடமாகவே பயன்படுத்துகிறோம்.

அடையாறு, ஆதனூரிலிருந்து சென்னைக்குள் நுழையும்போது தாம்பரத்திலிருந்தே கழிவுகளால் வரவேற்கப்படுகிறது. சாக்கடைக் கழிவுகள் நேரடியாக ஆற்றில் சென்று கலப்பதால், சேற்று நிலத்தில் ஓடிவரும் ஆற்று நீர், அடர்ந்த கறுப்பு நிறத்திலான கழிவுநீராக மாற்றப்படுகிறது.

அதைத் தொடர்ந்து திருநீர்மலையைக் கடந்து வரும்போது, மருத்துவக் கழிவுகள் குவியல் குவியலாக ஆற்றில் கொட்டப்படுகின்றன. அங்கிருந்து அனகாபுத்தூரைக் கடக்கையில் தொழிற்சாலைக் கழிவுகள். கோட்டூர்புரத்தில், கட்டுமானக் கழிவுகளைம் திடக்கழிவுகளையும் நதியில் கலக்கின்றனர். இப்படியாக, அடையாறு சென்னையை அடைந்ததிலிருந்து கடலைச் சென்று சேரும்வரை அதன்மீது நடக்கின்ற வன்கொடுமையின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளாகத் தொடரும் இந்த வன்கொடுமையிலிருந்து நதியை மீட்டெடுக்கும் முயற்சியைத் தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதற்காக சுமார் 2,047.02 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் விநியோகத் துறையினுடைய அரசு உத்தரவுகளிலிருந்து தெரியவந்தது.

அடையாறு முகத்துவாரம்
அடையாறு முகத்துவாரம்
Magentic Manifestations/ Wikimedia Commons
மெட்ராஸ் வரலாறு:  “கூவம் ஆற்றில் பயணம் செய்த ரோமாபுரி மன்னர்கள்”| பகுதி-1

2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், 58 ஏக்கர்களில் அடையாறு சூழலியல் பூங்கா அமைக்க, அந்தப் பகுதியில் நதியோரத்தில் வாழ்ந்த மக்களை இடம் மாற்றிக் குடியமர்த்த, மறுவாழ்வு ஏற்படுத்திக்கொடுக்க, அடையாறு பாலம் அமைந்துள்ள பகுதியில் நதியை மீட்டுருவாக்க என்று 1,936.98 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு, 2019 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில், 300 ஏக்கர் பரப்பளவிலான கழிமுகப் பகுதி, நதியின் முகத்துவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மீட்டெடுக்க 77.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

``ஊரூர் குப்பம், பட்டினம்பாக்கம், ஓடைக்குப்பம், திருவான்மியூர் குப்பம் ஆகிய பகுதிகளிலுள்ள பாரம்பர்ய மீனவர்கள், பன்னு வலை, தூண்டில் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறுதொழில் செய்பவர்கள் அதிகமுள்ளவர்கள். சத்யா நகர் போன்ற பகுதிகளிலுள்ள மீனவர்கள் விசிறு வலை பயன்படுத்தி நதிகளில் மீன்பிடிக்கின்றனர். இன்றைய சூழலில், இவர்களில் சிலர் கோவளம், உதிர் உவர்நீர் ஏரி ஆகிய பகுதிகளுக்குச் சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இங்கு ஆறு நன்றாக இருந்தால், அவர்கள் அவ்வளவு தூரத்துக்குச் சென்று பிழைப்பு நடத்த வேண்டியதில்லை" என்கிறார் மீனவரும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளருமான சரவணன்.

Adyar
Adyar
PlaneMad/ Wikimedia
மெட்ராஸ் வரலாறு: ``சென்னை  கூவம் ஆற்றில் ஒரு படகு பயணம்” |  பகுதி - 2

அடையாற்றை தூர்வாருவது, மீட்டெடுக்கும் முயற்சிகள் அனைத்தும் ஓரளவுக்கு முன்னேற்றத்தை வழங்கின. அதன் விளைவாக இப்போது ஒரு சில மீன்கள், முகத்துவாரத்துக்குள் வந்து செல்வதையும் பார்க்க முடிகிறது என்று மீனவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றில் விடுவது தொடரும் வரை அடையாற்றை எவ்வளவு சுத்தப்படுத்தினாலும் அது மீண்டும் சாக்கடையாவதைத் தடுக்க முடியாது என்றும் வருந்துகின்றனர்.

சென்னை மையப்பகுதியிலேயே கூவம், அடையாறு என்று இரண்டு நதிகள் ஓடுகின்றன. இவையிரண்டுமே உள்நாட்டு மீனவர்களின் மிக முக்கிய வாழ்வாதாரங்கள். நகரங்கள் வளரும்போது, அந்த நகரத்துக்குள் ஓடும் நதிகள் பலியாக்கப்பட வேண்டுமென்பது எழுதப்படாத விதியாகவே இந்தியாவின் நகரத் திட்டமிடுதலில் பல்லாண்டு காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இனியாவது அரசு விழித்துக்கொண்டு, சென்னையின் பூர்வகுடிகளான பாரம்பர்ய மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கும் நதிகளை மீட்டெடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு