திரைகடலோடியும்-1
தமிழக வரைபடத்தை உற்றுநோக்கினால், அதன் கடற்கரை ஒரு நெடுங்கோடாகத் தோன்றுகிறது; கடல் ஒற்றை நீர்ப்பரப்பாய்த் தெரிகிறது; கடற்குடிகள் ஒற்றைத்தன்மை கொண்டவர்களாய்த் தோன்றுகிறார்கள். உண்மையில் கடற்கரையும் கடலும் பன்மைத் தன்மை கொண்டவை. கடற்குடிகளும் அவ்வாறே. கரைக்கடல், ஆழ்க்கடல், அலையாத்தி, காயல், கழிமுகம், கால்வாய் உள்ளிட்ட பலவகை சூழலியல் கட்டமைவுகளைச் சார்ந்து அமைகிறது நெய்தல் நில வாழ்வு. பல்லாயிரம் ஆண்டுகளாகக் கடலை மையமிட்டு, உடலுழைப்பை நம்பி, இயற்கையைப் பேணும் அறுவடை முறைகளைக் கையாண்டு வாழ்ந்திருந்தவர்கள் இத்தொல்குடிகள். கடந்த 60 ஆண்டுகளில் நவீனமயமாக்கலின் பெயரால் உருவாக்கப்பட்ட புற அழுத்தங்களும் அவற்றின் விளைவான அகம் சார்ந்த முரண்களும் இத்தொல்குடிகளை வளர்ச்சி அகதிகளாக்கியிருக்கின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘பேரிடர்களைவிட, அரசின் கொள்கைகள்தான் எங்களுக்கு அச்சுறுத்தலாய் இருக்கிறது’ என வெளிப்படும் மீனவர்களின் ஆற்றாமையை, கொந்தளித்துக் கொண்டிருக்கும் கடற்புற வாழ்வின் சிறிய உதாரணமாகப் பார்க்கலாம். பழவேற்காடு ஏரி, பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணூர் ஓடை, சதுரங்கப்பட்டினம், கழுவேலி, கிள்ளை- பிச்சாவரம், இராமேஸ்வரம், தூத்துக்குடி, இடிந்தகரை என்பதாக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை அக்குடிகளின் அபயக்குரல் கேட்கிறது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇந்தியத் தீபகற்பத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ள தமிழகக் கடற்கரை வங்காள விரிகுடாவைத் தொட்டமைந்த சோழமண்டலக் கடற்கரையின் ஒரு பகுதி. குஜராத்துக்கு அடுத்தபடியாக நாட்டின் மிக நீண்ட கடற்கரை (1076கி.மீ.); வடக்கே திருவள்ளூர் தொடங்கி தெற்கே கன்னியாகுமரி வரை அமைந்துள்ள இக்கடற்கரை கடல்சார் பருவநிலை, சூழலியல், மீன்வளம் முதலியவற்றின் அடிப்படையில் நான்கு கடல்சார் மண்டலங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன: சோழமண்டலம் (பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை), பாக் நீரிணை மண்டலம் (கோடியக்கரை முதல் தனுஷ்கோடி வரை), மன்னார்க்குடா மண்டலம் (தனுஷ்கோடி முதல் குமரி முனை வரை), மேற்கு மண்டலம் (குமரிமுனை முதல் நீரோடி வரை). பாக், மன்னார்க் கடல் பகுதிகளில் இந்திய, இலங்கைக் கடல் எல்லை அமைந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரிய உப்புநீர் ஏரியான பழவேற்காடு ஏரி தமிழக- ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது. கழிமுகங்கள், அலையாத்திகள், சதுப்புநிலப் பரப்புகள், உப்பளங்கள், கடற்கோரைப் படுகைகள். பவளப்பாறைகள், மணல்வெளிகள், மணல்மேடுகள், சிறு தீவுகள் உள்ளிட்ட பலவகையான சூழலியல் கட்டமைவுகளைக் கொண்ட கடற்கரை இது. சென்னை, எண்ணூர், நாகப்பட்டினம், தூத்துக்குடியில் அமைந்துள்ள பெருந்துறைமுகங்கள் உட்பட தமிழகக் கடற்கரையில் 15 துறைமுகங்கள் உள்ளன.

உலகப் புகழ் பெற்ற பட்டுவழியின் ஒரு பகுதியாக இருந்த தமிழகக் கடற்கரை மேலைப் பேரரசுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வாசனைப்பொருள் வணிகத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளது. தொலீமி காலம் முதல் ரோமானிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகான காலம் வரை கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்கு ரோமானிய, கிரேக்க வியாபாரிகள் வருகைதந்து தெற்காசிய வணிகத்தை முன்னிட்டு கிரேக்க- ரோமானிய வணிக மையங்களை நிறுவியுள்ளனர். அவ்வணிகப் பரிவர்த்தனைகளுக்குக் கொற்கை, உறையூர், பூம்புகார்த் துறைமுகங்கள் உதவின.

காவிரிப்பூம்பட்டினம் என்னும் புகார்த் துறைமுகத்தைக் கி.பி. 300இல் கடல் சூழ்ந்து கொண்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனும் அவர் வழிவந்த முதலாம் இராஜேந்திர சோழன், வீரராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் காலத்தில் சோழப் பேரரசின் படைகள் இலங்கை, மாலத்தீவு, ஸ்ரீவிஜயப் பேரரசைச் சார்ந்த மலேசியா, இந்தோனேசியா, தெற்கு தாய்லாந்துப் பகுதிகளில் படையெடுத்துச் சென்றதாய் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகக் கடற்கரைகளில் வாழும் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்களில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள். சமயவாரியாக 54% இந்துக்கள்; 40% கிறித்தவர்கள்; 6% இசுலாமியர். கிறித்தவர்கள் மூன்று தென் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளனர்; இசுலாமியர் புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களில் அதிகமாக உள்ளனர். தமிழகக் கடற்கரை மீனவர்கள் கீழ்வருவன உள்ளிட்ட பல சாதிகளைச் சேர்ந்தவர்கள்: செட்டியார், நாயக்கர், ரெட்டியார், முதலியார், நாட்டார், கவுண்டர், படையாச்சி, சந்தைப்பேட்டையார், பணிக்கர், பிள்ளை, கள்ளர், தேவர், இருங்கலியர், வாண்டையார், அம்பலக்காரன், வன்னியர், மணியகர், சாம்பான், கரையர், வலையன், பட்டங்கட்டியார், கடையர், நுளையர் (இந்துக்கள்), லெப்பை, ராவுத்தர் (இசுலாமியர்), நாடார், பரவர், முக்குவர் (கிறித்தவர்).

தமிழகக் கடற்கரையில் அடிப்படை மீன்பிடி கட்டமைப்புகளாக 363 மீன் இறங்கு மையங்களும் மூன்று பெரிய மீன்பிடி துறைமுகங்களும் மூன்று நடுத்தர மீன்பிடி துறைமுகங்களும் உள்ளன. அரசுத் தரப்பிலுள்ள புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் மொத்தக் கடல்மீன் உற்பத்தியில் 10-12% (ஆண்டுக்கு 7.2 இலட்சம் டன்கள்) தமிழகத்திலிருந்து கிடைக்கிறது. தமிழக மீனவர்களில் 22% மேற்கு மண்டலத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் விசைப்படகுகளில் புலம்பெயர்ந்து மீன்பிடிப்பவர்கள் என்பதும், பிற மாநிலங்களில் கரைசேரும் அவர்களுடைய அறுவடைகள் இப்புள்ளிவிவரத்தில் உட்படுத்தப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியக் கடல் மீன் அறுவடையில் குஜராத்தின் பங்களிப்பு 22%. இதில் பெரும்பகுதி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநில மீனவர்களின் பங்களிப்பு ஆகும். அடிப்படை மீன்பிடி கட்டமைப்புகளின் போதாமையினால் கன்னியாகுமரி மீனவர்கள் பிறமாநிலங்களுக்குப் போக நேர்கிறது என்பதும் அங்கு அவர்கள் பல வழிகளில் சுரண்டலுக்கு ஆட்படுகின்றனர் என்பதும் கள எதார்த்தம்.
-தொடர்வோம்...
கட்டுரையாசிரியர் குறிப்பு
நெய்தல் நில சூழலியல் மற்றும் வாழ்வியல் குறித்து ஆழமாக எழுதி வருபவர் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இந்தியாவின் பல கடற்கரைகளுக்குப் பயணித்து மீனவ மக்களை சந்தித்து அவர்களுடைய வாழ்வியலை பதிவு செய்துள்ளார். கடலோர சூழலியல் குறித்தும் கடலோர மக்கள் வாழ்வியலையும் இந்தத் தொடரில் எழுத இருக்கிறார். கடலோர மக்களின் நிகழ்கால வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இந்தத் தொடர் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.