Published:Updated:

`மரமும், மரம் நிமித்தமும்!' - முதுமையிலும் மரங்களுக்காவே வாழும் கருப்பையாவின் கதை

கருப்பையா
கருப்பையா

``என்னால் அன்னசத்திரம், சாவடிகள் அமைத்து யாருக்கும் பசியாற சோறு போட முடியாது. நான் ஒரு சாதாரண மனிதன். ஏதோ மக்கள் இளைப்பாற, பறவை பட்சிகள் பசியாற சில மரங்களை மட்டும் நட்டு வருகிறேன்" என்கிறார் 70 வயதைக் கடந்துவிட்ட பெரியவர் கருப்பையா.

கறுத்த உடல், வெளுத்த உடை, மழித்த தலை, பழுத்த அனுபவம், பசுமையை நேசிக்கும் மனசு, வெள்ளை உள்ளம்... பெயர் கருப்பையா. பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் அருகில் உள்ள கீழப்புலியூர் கிராமத்தில்தான் இந்த மனிதரைச் சந்தித்தேன்.

``வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரைப் போன்று, பறவை பட்சிகளுக்கு சில பழ மரங்களை நட்டு வைத்து விட்டுச் செல்கிறேன். என்னால் அன்னசத்திரம், சாவடிகள் அமைத்து யாருக்கும் பசியாற சோறு போட முடியாது. நான் ஒரு சாதாரண மனிதன். ஏதோ மக்கள் இளைப்பாற, பறவை பட்சிகள் பசியாற சில மரங்களை மட்டும் நட்டு வருகிறேன்" என்கிறார் 70 வயதைக் கடந்துவிட்ட பெரியவர் கருப்பையா.

``நான் வடலூர் வள்ளல் ராமலிங்க அடிகளாரின் அடியொற்றி வாழ முயல்பவன். தாவர உணவு வகைதான் உண்டு வருகிறேன். ஆனால், நான் கோயில் தர்மகர்த்தாவாக உள்ள கோயில்களில் பலியிடுதல் நடைபெற்று வருகிறது. மக்களுடைய வழிபாட்டு முறைகளில் நான் தலையிடுவதில்லை.

கோயில்
கோயில்

திருமணத்துக்கு முன்பு இளவயதில் நந்தவனம் உருவாக்கி அதற்கு காலை 4:30 மணிக்குத் தண்ணீர் விட்டு பராமரித்து வந்தேன். காலை 6 மணிக்கு மேல் ஆட்டுப்பட்டிக்குச் சென்று ஆடுகளை பராமரித்து, பிறகு மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வேன். காடு, கழனி எல்லாம் ஆடுகள் மேய்த்து வருவதுதான் எனது வேலையாக இருந்தது. இளவயதில் நான் உருவாக்கிய நந்தவனம் அழிந்துவிட்டது. காலங்கள் கடந்தது. என் கண் முன்னே நான் இளவயதில் பார்த்து வியந்த பற்பல மரங்களெல்லாம் கண்ணெதிரே சரிந்தது. சாய்க்கப்பட்டது. என்னால் அத்தனை பெரிய மரங்களை மீண்டும் கண்டிடவே முடியாது. உருவாக்கிடவும் முடியாது.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான் மீண்டும் எம்மால் இயன்ற அளவு பொது இடங்களில் மரங்களை உருவாக்கிட வேண்டும் என முடிவு செய்தேன். எனது 45 வயதில் தொடங்கி மரக்கன்றுகள் நட்டு வளர்த்து பராமரித்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டிலும் எப்படியாவது சில மரங்களை நட்டு வளர்த்துவிடுவேன்.

நட்ட அந்த மரங்கள் வளரும் வரை அதிக அளவில் நடமாட்டேன். அவற்றைப் பராமரித்து அவற்றை என்னுடைய தயவில்லாமல் இயற்கையின் தயவு கொண்டு தாமாக வளரும் வரை அவற்றைப் பராமரித்துக்கொண்டிருப்பேன். அதற்குப் பின்னர்தான் புதிய மரங்களை நடத் தொடங்குவேன்" என்கிறார் கருப்பையா. மேலும் தொடர்ந்தார்.

``ஏனென்றால், நான் ஒரு தனி மனிதன். ஒவ்வொரு மரத்தையும் உருவாக்கிய பிறகுதான் புதிய மரத்தை நான் நட முடியும். நான் நட்ட மரங்களை, நானே பாதியில் விட்டு விலகிவிடக் கூடாது. நம்மால் என்ன முடிகிறதோ அதை மட்டும் நான் செய்துகொண்டு இருந்தால் போதும்.

கருப்பையா
கருப்பையா

எங்க ஊர் ஏரிக்கரையில் பல பெரிய பெரிய மரங்கள் இருந்தன. அவையெல்லாம் என்னுடைய இளவயதிலேயே வெட்டப்பட்டு விட்டன. அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு என்னுடைய இளமைக்காலத்தில் ஏதேனும் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு மேலோங்கியது. தற்போது முப்பதுக்கும் மேற்பட்ட ஆலமரங்கள் கீழப்புலியூர் ஏரிக்கரையில் நிமிர்ந்து நிற்கின்றன. எல்லா மரங்களையும் என்னுடைய கோவணத்தைக் கட்டிக்கொண்டு தண்ணீர் மொண்டு ஊற்றித்தான் வளர்த்தேன்.

எங்கள் ஊர்ப் பகுதியில் ஆடு மாடுகள் அதிகம். ஆனால், என்னுடைய உழைப்பைப் பார்த்த எங்கள் ஊர் மக்கள், அந்த மரங்களை ஆடுகள் ஓரளவு கடிக்காத அளவில் பாதுகாத்து ஒத்துழைப்பு தந்தார்கள்.

அப்படியே யாரேனும் தவறுதலாக மரங்களை வெட்டினால் அவர்களோடு நான் பகைத்துக்கொண்டு வன்மம் பாராட்ட மாட்டேன். அவர்களை அழைத்துப் பேசி புரிய வைப்பேன். ஏனென்றால், என் மீதான கோபத்தை நான் இல்லாதபோது அவர்கள் என் மரங்கள் மீது காட்டிவிடக் கூடாது. மக்களைப் பகைத்துக்கொண்டிருந்தால் இத்தனை ஆண்டுகள் இவ்வளவு மரங்கள் இந்த ஊரில் நான் பாதுகாத்து வர முடியாது. மக்களை நான் புரிந்துகொண்டேன், புரிந்த வண்ணம் நடந்துகொண்டேன். அதே வகையில் மக்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள்.

ஒரு முறை ஒருவர் சில கிளைகளை வெட்டிவிட்டார். என்னைக் கண்டதும் இறங்கி ஓடினார். அவரை அழைத்து ஓடாதே நில்லு எதற்காக மரம் வெட்டினாய்? செலவுக்காகத்தானே மரங்களை வெட்டினாய் உனது செலவுக்குக நான் பணம் தருகிறேன், இந்தா வாங்கிக்கொள். ஆனால், மரங்களை மட்டும் வெட்டிவிடாதே என்று அவரிடமும் நட்பையும் அன்பையும் அளித்தேன். அவரைத் தண்டிக்கவோ பகைத்துக்கொள்ளவோ நான் முயலவில்லை.

 மரங்கள்
மரங்கள்

தண்டிப்பதும் பகைமையும் என்றைக்கும் தீர்வைத் தராது. முடிவையும் தராது. அது தொடர்ந்துகொண்டே இருக்கும். மரங்களை வளர்க்க நினைக்கும் நான் அதற்காக ஏன் மனிதர்களோடு பகைமை கொள்ள வேண்டும்?

எங்கள் ஊர் பச்சையம்மன் கோயில் புகழ் பெற்ற ஒன்று. இங்கே பல ஊர்களில் இருந்து மக்கள் சாமி கும்பிட வருவார்கள். இந்தக் கோயிலில் மொத்தம் 28 ஏக்கர் நிலம் உள்ளது. 10 ஏக்கர் முழுக்கவும் மரங்கள் நட்டு விட்டேன். மலைக் குன்றில் எட்டு ஏக்கர் பரப்பளவில் மரங்கள் உள்ளன. மீதம் 10 ஏக்கர் பரப்பளவு ஏரியாக உள்ளது. அதன் கரைகளில் மரங்கள் நட்டு பாதுகாக்கிறேன். இந்தக் கோயில் இருக்கிற பகுதியில் ஒரு காலத்தில் பெரிய காடாக இருந்தது. வாலிகண்டபுரம், கீழப்புலியூர் இடைப்பட்ட பகுதியில் காட்டில்தான் இந்தக் கோயில் இருந்து வருகிறது. இடைக்காலத்தில் இந்த காடு அழிந்து போனதால் மீண்டும் காட்டை என்னால் உருவாக்க முடியாவிட்டாலும், இந்த இடத்தில் சில பச்சை மரங்களையாவது நிறுத்திவிட்டுச் செல்ல முயற்சி செய்து வருகிறேன்.

நான் இந்த ஊர் கோயில் தர்மகர்த்தாவாகப் பொறுப்பு எடுத்துக் கொண்ட நாள் முதல் அனைத்துக் கோயில்களையும் பழுது பார்த்து சீரமைத்து இருக்கிறேன். பொதுப் பணம் அனைத்தும் ஒன்றுவிடாமல் கணக்கை நேர் செய்துவிடுவேன். என்னைப் பார்த்து யாரும் எந்தக் குறையும் சொல்லிவிட முடியாத அளவுக்கு நடந்துகொள்கிறேன்.

என்னுடைய பொறுப்பு காலத்தில், மரங்களை வெட்டி நான் செலவு செய்துவிட்டதாகவோ, அழித்துவிட்டதாகவோ என்னை யாரும் கூறி விடக்கூடாது. என் காலத்தில் இந்த மரங்கள் நடப்பட்டது என்பதுதான் என்னுடைய அடையாளமாக இருக்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் நான் பெரும்பாலும் ஆலமரம், அரசமரம், நாவல் மரம் ஆகியவற்றை நிழல் தரவும், பழங்கள் தரவும் நட்டு வந்தேன். பின்னர், மக்கள் உணவுக்காகவும் வருமானத்துக்காகவும் புளிய மரங்களை நட்டு வந்தேன். அந்தப் புளிய மரங்கள் இப்போது காய்த்து வருகின்றன.

 மரங்கள்
மரங்கள்

எங்கள் தாத்தா காலத்திலேயே பெரிய பெரிய இலுப்பை மரங்கள் இருந்தன. அவற்றில் பல மரங்கள் தற்போது பட்டுப்போய் விட்டதால் அந்த இடத்தில் எல்லாம் மரங்களை வெட்டிவிட்டு, புதிதாக இலுப்பை மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன்.

அண்மைக்காலமாக இந்த மரங்கள் எல்லாம் ஓரளவுக்கு வளர்ந்து விட்டதால், புதிய வகை மரக்கன்றுகளை நட்டு வருகிறேன். முன்பெல்லாம் என்னால் தனி மனிதனாகப் பாதுகாக்க முடிந்தது. தற்போது வேலைக்கு ஆட்களை வைத்துக்கொண்டு பணிகளைச் செய்து வருகிறேன். பெரும்பாலும் கோயிலுக்காகச் சிலர் உதவி செய்து வருகிறார்கள். அவர்கள் என்னை நம்பி கொடுக்கிற மரங்களை முறையாக நட்டு வருவதுதான் எனது வேலை.

என்னுடைய தேவைக்காக மட்டும் குறைந்து அளவில் விவசாயம் செய்கிறேன். மேற்படி எனக்கு தேவை எதுவும் இல்லை என் மனைவியும் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஓய்வு நேரங்களில் பல்வேறு ஆன்மீக புத்தகங்களைப் படித்து வருகிறேன். எனது இளவயதில் கிருபானந்த வாரியாரை அழைத்து வந்து சில கூட்டங்கள் நடத்த காரணமாக இருந்திருக்கிறேன்.

ஒரு காலத்தில் பல்வேறு நூல்களைச் சேகரித்து வைத்திருந்தேன். வீடு தீப்பிடிக்கும்போது புத்தகங்கள் எரிந்துவிட்டன. பழைய சேகரிப்பு எதுவும் என்னிடம் இல்லை. தற்போது என்னிடம் சில நூல்கள் மட்டும் உள்ளன. இந்தப் பச்சையம்மன் கோயிலைப் பற்றி, ஒரு சிறிய புத்தகம் ஒன்றை வெளியிட்டோம். எனது பையில் எப்போதும் ஒரு புத்தகம் என்னுடன் இருக்கும்.

ஒவ்வொரு மரக்கன்றுக்கும், தனித்தனி குழாய் பதித்து, ஒவ்வொரு மரத்துக்கும் தானே அருகில் நின்று திறந்துவிட்டு நீர் பாய்ச்சுகிறேன். எங்கேயோ இருந்துகொண்டு தண்ணீரை எல்லாவற்றுக்கும் பாய்ச்சிவிட்டுச் செல்வது எனக்குப் பிடிக்காது. ஒவ்வொரு கன்றுக்கும் அருகில் நின்று நானே குழாயைத் திறந்து நீர்பாய்ச்சி வருவதுதான் எனது வழக்கம். ஏனென்றால், அன்று குடத்தைத் தூக்கிக்கொண்டு ஒவ்வொரு செடிக்கும் தனித்தனியாகத்தானே நீர் ஊற்றினோம். அதேபோன்றுதான் ஒவ்வொரு மரத்துக்கும் இன்று குழாய் பதித்த பின்னும் தனித்தனியே கவனம் செலுத்துகிறேன்.

கருப்பையா
கருப்பையா

நான் கோயில் தர்மகர்த்தா பொறுப்பு வகித்து வருவதால், ஒரு முறை கோயில் கட்டுவதற்கு பணம் சேகரிப்பதற்காக ஒவ்வோர் ஊராகப் பக்தர்களைச் சந்திப்பதற்குச் செல்ல வேண்டியது இருந்தது. அதற்காகப் பயணம் செய்யும்போது, அப்பணத்தில்தான் செலவு செய்தாக வேண்டும். சாப்பிட, பயணம் போக உடன் வருவோர்க்கு செலவு செய்ய வேண்டும். அதையும் மிகவும் குறைந்த அளவில் அடிப்படை தேவைக்கு மட்டுமே சிக்கனமாகச் செலவு செய்தேன். ஆனாலும், அந்தக் கோயில் பணத்தைக் கோயில் வேலைக்காகச் செய்த செலவானாலும் அந்தப் பணத்தை என்னால் செலவு செய்ய மனம் ஒப்பவில்லை. எனவே, கோயில் வேலைக்கு பணம் சேகரிக்கச் செல்வதையும் அன்றோடு நிறுத்திவிட்டேன். யாராவது தேடிவந்து கோயில் கட்ட பணம் கொடுத்தால் மட்டும் கட்டிக் கொடுக்கிறேன். அதை வசூல் செய்யப் போகும்போது எனக்காக செலவு செய்யவும் மனம் ஒப்பவில்லை.

என் தந்தை பெயர் வேலாயுதம், அம்மா அருக்காணி, மனைவி சந்தோஷம், தங்கை வள்ளியம்மை. எவரும் இப்போது உயிரோடு இல்லை. இந்தக் கருப்பையா வாழ்ந்ததற்கு அடையாளமாக நான் நட்ட சில மரங்கள் இருக்கின்றன.

வீட்டில் சாப்பிடுகிறேன், கோயிலில் தங்குகிறேன். இதுவே, எனது வாழ்க்கை. கடைசிவரை எனக்குப் பெயரோ, புகழோ பாராட்டுகள் வேண்டாம். பழியில்லாத வாழ்வு ஒன்றே போதும்'' என்கிறார் இந்த பச்ச மனுஷன் கருப்பையா.

இவரோடு உரையாட...

வே.கருப்பையா, செல்போன்: 9786002670

கட்டுரையாளர் - ரமேஷ் கருப்பையா
அடுத்த கட்டுரைக்கு