உலகெங்கும் கடுமையான காற்று மாசுபாட்டால் பல ஆயிரம் மக்கள் வருடந்தோறும் இறக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டின் காரணமாக மக்களின் ஆயுளில் 10 வருடங்கள் குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில், காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படும் நகரங்களில் நம் நாட்டின் தலைநகரான டெல்லியும் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில் நிலவும் காற்று மாசுபாடு குறித்த பல தகவல்களையும் அந்த ஆய்வு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் வாழும் மக்களில் 1.3 பில்லியன் பேர் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள சராசரி காற்று மாசுபாட்டு அளவான 5µg/m³-ஐ விட அதிகமாக மாசடைந்த காற்றினை சுவாசிக்கின்றனர். மேலும் PM2.5 எனப்படும் அபாயகரமான நுண் துகள்கள் இந்த மாசடைந்த காற்றில் உள்ளதாகவும், இதன் மூலம் நுரையீரலில் பல பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் எரிசக்திக் கொள்கை நிறுவனத்தின் (EPIC - The Energy Policy Institute at the University of Chicago) காற்றின் தரம் குறித்த குறியீட்டின் அடிப்படையில், வட இந்தியாவில் வசிக்கும் சுமார் 510 மில்லியன் மக்கள், அதாவது இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 40% மக்கள், காற்று மாசுகளின் சராசரி அதிகரிப்பதன் காரணமாக தங்கள் வாழ்க்கையில் 7.6 வருடங்களை இழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும் EPIC, உலக அளவில் காற்று மாசு ஏற்படும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 40µg/m³ அளவிலான காற்று மாசுதான் மக்களை பாதிக்காத அளவு என்றும், ஆனால் இந்தியாவில் 2019-ம் ஆண்டு காற்று மாசுக்கான அளவு 70.3µg/m³ அளவிற்கு அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, காற்று மாசுபாட்டில் உலகளவில் முதலிடத்தில் இந்தியாவை வைப்பதாகவும் கூறுகிறது.

ஆயுட்காலம் அடிப்படையில் பார்த்தால், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்தக் காற்று மாசுபாடு மனித உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், 1998 முதல் காற்று மாசுபாடு 61.4% அதிகரித்துள்ளது என்றும் EPIC கூறுகிறது. இந்தக் காற்றை சுவாசிப்பது, புகைபிடிப்பதை விட ஆபத்தானது என்பதையும் குறிப்பிடுகிறது. இந்தியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களாக காற்று மாசுபாடு அதிகரிப்பதற்குக் காரணமாக தொழில்மயமாக்கல், பொருளாதார வளர்ச்சி மற்றும் புதைபடிவ எரிபொருளின் பயன்பாடு ஆகியவை கூறப்படுகின்றன. மேலும் வாகனங்களின் எண்ணிக்கை சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
காற்று மாசை குறைப்பதற்காக தேசிய சுத்தமான காற்றுத் திட்டம் (NCAP) நம் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தீங்கு விளைவிக்கும் துகள்களை 20% முதல் 30% வரை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதனை வரவேற்றுள்ள EPIC, "இந்தியா, காற்று மாசை குறைப்பதை தக்கவைத்துக் கொண்டால், அது குறிப்பிடத்தக்க சுகாதார முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்" என்று கூறியுள்ளது. மேலும் காற்று மாசு 25% குறையும் பட்சத்தில் தேசிய ஆயுட்காலம் சராசரியை 1.4 ஆண்டுகள், மற்றும் டெல்லியில் வசிப்பவர்களுக்கு 2.6 ஆண்டுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.