Published:Updated:

62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு!- ஆச்சர்யப்பட வைத்த மன்னார் வளைகுடா ஆய்வு

மன்னார் வளைகுடா பகுதியில் 15 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட ஆய்வில் 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட கடல்வாழ் உயிரினம்
ஆய்வில் கண்டறியப்பட்ட கடல்வாழ் உயிரினம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து விரிந்து காணப்படும் கடல் பகுதிதான் மன்னார் வளைகுடா. இப்பகுதி கடல்வாழ் உயிர்க்கோள காப்பகமாக, கடந்த 1989-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகாரம் அளித்தது. இங்கு 4,223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் விலங்கினங்கள், அழிந்துவரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்துள்ளன. இந்தத் தீவுகளைச் சுற்றியுள்ள 560 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆழம் குறைந்த கடல் பகுதியை மன்னார் வளைகுடா கடல்சார் தேசிய பூங்காவாக கடந்த 1986-ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்தது.

மன்னார் வளைகுடாவில் உள்ள தீவு
மன்னார் வளைகுடாவில் உள்ள தீவு

இத்தீவுகளின் பரப்பளவு, வடிவம், தன்மை குறித்து 50 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகத்தின் நிதியுதவியுடன், தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் ஓராண்டாக ஆய்வு நடத்தி மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், 2 தீவுகள் கடல் அரிப்பால் அழிந்துவிட்டன எனவும், சில தீவுகள் அழியும் நிலையில் உள்ளன எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் தற்போதைய கடல்வாழ் உயிரியல் வளம் குறித்து விரிவான ஆய்வு நடத்திட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் திட்டமிட்டது. இந்த அமைச்சகத்தின் பருவநிலை மாற்றத்துக்கான தகவலமைப்பு நிதியின்கீழ், தூத்துக்குடியில் உள்ள சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் நபார்டு வங்கி மேற்பார்வையில் இம்மையத்தின் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய கடல்வாழ் உயிரினம்
ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய கடல்வாழ் உயிரினம்

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான கடல்பகுதியில், கடந்த 2017 மே மாதம் முதல் 2019 மார்ச் வரை 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆய்வு தற்போது நடத்தப்பட்டுள்ளது. இதில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் மற்றும் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் பேட்டர்சன் எட்வர்டிடம் பேசினோம். ``மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 2003 முதல் 2005-ல் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது தூத்துக்குடியிலிருந்து பாம்பன் வரையிலான மன்னார் வளைகுடா கடல்வாழ் தேசியப் பூங்கா பகுதியில் பவளப்பாறைகளைப் பற்றிய ஆய்வு நடந்தது. அதில் அடிப்படைத் தகவல்கள் மட்டும் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து ஆண்டுதோறும் இந்தப் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய கடல்வாழ் உயிரினம்
ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய கடல்வாழ் உயிரினம்

இந்த நிலையில், தற்போது ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை 345 கி.மீ. தொலைவில், மன்னார் வளைகுடா பகுதி முழுவதும் முழுமையாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில், மன்னார் வளைகுடாவின் வடக்குப் பகுதியான பாம்பன் முதல் தூத்துக்குடி வரை, கரையிலிருந்து கடலுக்குள் 10 கி.மீ. தொலைவு வரை அவ்வப்போது ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், தெற்குப் பகுதியான தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரை இதுவரை பெரிதாக ஆய்வுகள் நடத்தப்பட்டதில்லை. அதனால், இந்தப் பகுதியையும் சேர்த்து தற்போது விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகள் 10 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், 62 புதிய கடல்வாழ் உயிரினங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் அடையாளம் காணப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 14 கடின பவளப்பாறை இனங்கள், 17 மிருதுவான பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 11 கடல்பஞ்சு இனங்கள், 16 சங்கு இனங்களும் அடங்கும். இதில் 48 உயிரினங்கள் வடக்குப் பகுதியிலும், 14 உயிரினங்கள் தெற்குப் பகுதியிலும் கண்டறியப்பட்டுள்ளன.

புதிய கடல்வாழ் உயிரினம்
புதிய கடல்வாழ் உயிரினம்

மேலும், 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காணமுடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 39 வடக்கு பகுதியிலும், 11 தெற்குப் பகுதியிலும் காணப்பட்டன. இவைகளை அடையாளம் காண சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முயன்றுவருகிறோம். இந்த உயிரினங்கள் அனைத்தும் மன்னார் வளைகுடாவுக்கு புதிதானவை.

மேலும், 77 புதிய பவளப்பாறை திட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவை 90 முதல் 730 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தத் திட்டுகளில் 10 முதல் 52 சதவிகிதம் வரை பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இதேபோல் 39 புதிய கடல்புல் திட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. அவை 150 முதல் 340 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளன. இந்தத் திட்டுகளில் கடல்புற்கள் 10 முதல் 40 சதவிகிதம் வரை காணப்படுகின்றன. கடந்த 2003-2005-ல் நடத்தப்பட்ட ஆய்வுத் தகவல்களையும், தற்போதைய ஆய்வுத் தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரியல் வளத்தில் பருவநிலை மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய கடல்வாழ் உயிரினம்
ஆய்வில் கண்டறியப்பட்ட புதிய கடல்வாழ் உயிரினம்

மன்னார் வளைகுடா ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பகுதியாக இருப்பதால், இங்குள்ள பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். குறிப்பாக மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் உறைவிடமான பவளப்பாறைகள் மற்றும் கடல்புற்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்றார் உறுதியான குரலில்.