Published:Updated:

`சுனாமியிலிருந்து எங்களைக் காப்பாற்றிய கடவுள் இது!' -அலையாத்திக் காடுகளால் நெகிழும் மக்கள்

இந்த அலையாத்திக் காடுகள்தான் எங்களை சுனாமியிலிருந்து காத்த கடவுள். இல்லையென்றால் பேரழிவுகள் ஏற்பட்டிருக்கும்.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

சுனாமியின் கோரத்தால் தமிழகத்தில் உள்ள பல கடற்கரைப் பகுதிகள் பேரழிவைச் சந்தித்தன. சுனாமியின் நினைவு தினமான இன்று பலரும் அவற்றை நினைத்து வேதனைபட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில் தஞ்சாவூர் கடற்கரையோரத்தில் இருக்கும் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர்கள், `எங்களை சுனாமி பாதிப்புகளிலிருந்து அலையாத்திக் காடுகள்தான் காத்தன' என நெகிழ்ச்சியோடு விவரிக்கின்றனர்.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமி என்கிற பெயரில் உலகின் பல கடற்கரை பகுதிகளைக் கோரமாக்கிவிட்டுச் சென்றது. ஏராளமான பேரழிவுகளை ஏற்படுத்திச் சென்ற சுனாமியைத் தமிழக மக்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. உயிரிழப்புகள், பொருள் சேதங்கள் என அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிட்டுச் சென்றது.

Vikatan

சுனாமி தாக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இந்த ஆழிப்பேரலையில் தங்கள் குடும்பத்தில் உயிரிழந்தவர்களுக்காக அவரது உறவினர்கள், கடற்கரையில் குவிந்து அலையின் சத்தத்தைத் தாண்டி பெரும் குரலில் அழுது கண்ணீர்விட்டுக் கதறி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதேநேரம் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் சுனாமியின் தாக்கம் சிறிதும் ஏற்படாமல் எந்தப் பேரழிவும் ஏற்படாமல் அரணாக இருந்து மீனவர்களையும் அப்பகுதி மக்களையும் அலையாத்திக் காடுகள் காப்பாற்றியதாகச் சொல்கின்றனர் அப்பகுதி மக்கள்.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மரங்கள்
கஜா புயலில் பாதிக்கப்பட்ட மரங்கள்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த மீனவரான காளிதாஸிடம் பேசினோம். ``சுனாமி தாக்கிய அன்னைக்கு வழக்கம் போல் கடற்கரையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அப்போது கடலிலிருந்து ராட்சத அலைகள் வந்தன. என்னடா.. என்னைக்கும் இல்லாம கடல் இவ்வளவு கொந்தளிப்பா இருக்கு.. கடல் தாயே கொஞ்சம் இறங்கும்மா என வேண்டிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தோம். அதற்குள் பக்கத்தில் இருந்த மீனவக் கிராமங்களில் கடல் அலை கரையைத் தாண்டி வீசி ஊருக்குள் வந்துவிட்டதாகவே பலரும் பேசினர்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் நாகை, வேளாங்கண்ணி உள்ளிட்ட பல கடற்கரைகளில் பெரும் அலைகள் தாக்கிவிட்டதாகவும் கரையில் நின்ற படகுகள், கடலில் விளையாடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானவர்கள் மற்றும் மீனவர்களையும் தூக்கி வீசிவிட்டதாகத் தகவல்கள் வந்தன. கடற்கரையோரங்களில் எங்கு பார்த்தாலும் அழுகுரல்கள் கேட்டு கொண்டே இருந்தன என உறவினர்கள் கூறியதும் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

கண்ணீர்விட்டு அழக்கூட நேரம் இல்லாமல் எங்க பகுதியில் இருந்த மீனவர்கள் பலரும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி செய்யச் சென்றனர். இவ்வளவு அசுர வேகத்தில் சுனாமி தாக்கியுள்ளது, ஆயிரம் கிலோ எடை கொண்ட விசைப் படகுகளையும்கூட தூக்கி வீசியிருக்கிறது. ஆனால், எங்கள் பகுதியில் மட்டும் சிறு பாதிப்புகள்கூட ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தொடங்கி தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் வரை கடற்கரைகளில் உள்ள அலையாத்திக் காடுகளே இதற்குக் காரணம் எனத் தெரியவந்தது. அலைகளின் வேகத்தைக் குறைப்பதால் அலையாத்திக் காடுகள் என்றே அழைக்கப்படும் இந்த அலையாத்தி மரங்கள் முத்துப்பேட்டையில் தொடங்கி அதிராம்பட்டினம் கீழத்தோட்டம் கடற்கரையைத் தாண்டியும் வளர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் கடற்கரையையொட்டி இருக்கின்றன.

அலையாத்திக் காடுகள்
அலையாத்திக் காடுகள்

இந்த அலையாத்திக் காடுகள்தான் எங்களை சுனாமியிலிருந்து காத்த கடவுள். இல்லையென்றால் எவ்வளவு பேரழிவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அந்த நேரத்தில் ஒரு சின்ன பையன் கேட்டான், `இந்த மரங்கள் இல்லையென்றால் நாமும் செத்திருப்போமாப்பா' என்று. `ஆமாம்ப்பா' எனக் கூற உடனே கையெடுத்துக் கும்பிட்டான். அவை இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது.

சுனாமி நினைவு தினமான இந்த நேரத்தில் இந்த அலையாத்திக் காடுகளுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூற எங்கள் பகுதி மீனவ கிராமம் முழுவதும் கடமைப்பட்டிருக்கோம். கரையிலிருந்து அலையின் வேகத்தை ஆற்றி எங்களுக்கு அரணாக விளங்குகின்றன இந்த மரங்கள். இதில் வேதனைப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் சுனாமியைத் தாங்கிய மரங்களின் கிளைகள் கஜா புயலில் முறிந்து விழுந்துவிட்டன.

கஜா புயலில் காற்று வேகமாகச் சுழற்றி அடித்தது. அதைத் தாங்க முடியாத மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தன. அடுத்த நாள் மரக்கிளைகள் முறிந்து கிடப்பதைப் பார்த்து பலர் கலங்கினர். இந்த மரங்களுக்குப் பல வகையில் ஆபத்து வந்திருக்கிறது. பேரழிவிலிருந்து தஞ்சை மாவட்டத்தை காத்த அலையாத்தி மரங்களைக் காக்க அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.