Published:Updated:

ஊழிக்காலம் 8: இனி தண்டவாளங்கள் வெப்பம் தாளாமல் அமுங்கும், தார்ச்சாலைகள் உருகும்!

கோடை வெயில்
News
கோடை வெயில்

இதுவரை மனித வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டுகள் என்று 19 ஆண்டுகளை வரிசைப்படுத்தினால், அவற்றில் 18 ஆண்டுகள், 2001க்குப் பின் வருபவை!

சென்ற மாதம் வரை உச்சிப்பொழுதில், தெருக்களில் மட்டும் சுற்றிக்கொண்டிருந்த வெயில் இப்போது நம் வீடுகளுக்குள் வந்துவிட்டது. மின்விசிறிகள் ஐந்தாம் அளவு வேகத்தில் இயங்கத் தொடங்கியிருக்கின்றன. சில நேரங்களில் ஐந்துக்கும் மேல் வேகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றுகூட தோன்றுகிறது. வெகுவிரைவில் "நான்கு மாவட்டங்களில் சதமடித்தது வெயில்", "அக்னி நட்சத்திரம்", "கத்தரி வெயில்" போன்ற தலைப்புச் செய்திகள் வரத்தொடங்கிவிடும்.

"உச்சிக்கு வந்த சூரியன், சுட்டெரிக்கும் வெப்பத்தால் அச்சுறுத்துகிறது. நிழல் கூட நிழலைத் தேடி ஓடுகிறது" என்கிறது ஸார்ங்கதரபத்ததி. இந்தியாவுக்கு வெயில் புதிதல்ல. ஆனால், நாம் ஓரளவு பழகிவிட்ட வெயிற்காலம்கூட இனிமேல் மோசமாக இருக்கப்போகிறது என்பது காலநிலை வல்லுநர்களின் ஒருமித்த கருத்து.

2019ல், பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் நிலவும் கடுமையான வெப்பத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றைவெளியிட்டது டைம் இதழ். ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது வெப்பக்காற்று நம் மீதே வீசுவதைப் போன்ற உணர்வு மேலிடும். இதுபோன்ற அதி வெப்பம் நிறைந்த கோடைகளும் வெப்ப அலைகளும் (Heat waves) எதிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

வெப்பம்
வெப்பம்
Pixabay

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு வருடத்தில், 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேற்பட்ட வெப்பநிலையைக் கொண்ட நாட்கள் எத்தனை என்பது ஒரு முக்கியமான அலகு. இது வருங்காலத்தில் இருமடங்காகும்! வெப்ப அலைகள், அதீத வெப்பநிலை கொண்ட நாட்கள் ஆகியவை அதிகரிக்கும். வெப்ப அலைகளுக்கிடையே கால இடைவெளியும் குறைவாக இருக்கும். 2100ம் ஆண்டுக்குள், சில இடங்களில் வருடத்துக்கு 120 நாட்கள் அதீத வெப்பம் கொண்ட நாட்களாகவே இருக்கும் - அதாவது ஒரு வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு, தாளமுடியாத வெப்பம் கொண்டதாக இருக்கப் போகிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இதுவரை மனித வரலாற்றிலேயே அதிக வெப்பநிலை கொண்ட ஆண்டுகள் என்று 19 ஆண்டுகளை வரிசைப்படுத்தினால், அவற்றில் 18 ஆண்டுகள், 2001க்குப் பின் வருபவை!

இதில் ஒரு முக்கியமான கேள்வி வரும் - சராசரி வெப்பநிலை அதிகரித்தால், அதீத வெப்பநிலை கொண்ட நாட்கள் எவ்வாறு அதிகமாகும்? புள்ளியியல் விஞ்ஞானிகள் இதற்கு விளக்கமளிக்கிறார்கள் - சராசரி வெப்ப அளவுகளில் சிறிய அளவில் மாற்றம் ஏற்பட்டால்கூட, அதீத அளவுகளில் (extreme values) மிக அதிக அளவில் மாற்றம் ஏற்படுகிறது. வெப்பநிலையின் புள்ளியியல் அமைப்பு அப்படிப்பட்டதாகத்தான் இருக்கிறது.

2015ல் ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாவில் ஏற்பட்ட வெப்ப அலையை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. வெப்பத்தால் 2422 பேர் இறந்தார்கள். சர்வதேச பேரிடர் ஆவணங்களின்படி, உலகத்தில் இதுவரை ஏற்பட்ட வெப்ப அலைகளிலேயே ஐந்தாவது மோசமான வெப்ப அலை என்று இது வர்ணிக்கப்படுகிறது!

வெயில்
வெயில்

வெப்பம் ஒரு பிரச்சனை என்றால், ஈரப்பதம் இன்னொரு அச்சுறுத்தல். பொதுவாக வெப்பம் அதிகமாக இருக்கும்போது நமக்கு வியர்க்கும், வியர்வை வெளியாகும்போது உடல் குளிரும். ஆனால் வெப்பக்காற்றில் ஈரப்பதமும் இருந்துவிட்டால், வியர்வையும் வெளியேறாது. புழுக்கமும் வெப்பமும் நிறைந்த சூழலில், உடலில் உள்ள வெப்பம் வெளியேற முடியாமல் உடல் சூடேறும், அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஏற்கெனவே உடல்நல பாதிப்பு உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும். வருங்காலத்தில், ஈரப்பதம் நிறைந்த வெப்பம் (Humid Heat) ஒரு முக்கியமான பிரச்னையாக இருக்கப்போகிறது என்கிறார்கள் காலநிலை வல்லுநர்கள்.

"2100க்குள் காலநிலையைக் கட்டுக்குள் வைக்காவிட்டால், உலகின் பல இடங்கள் வாழ்வதற்கே தகுதியில்லாத இடங்களாக மாறிவிடும். தார்ச்சாலைகள் உருகும், தண்டவாளங்கள் வெப்பத்தால் உள்ளடங்கி அமுங்கும்" என்று எழுதுகிறார் டேவிட் வாலஸ் வெல்ஸ். அதைப் படிக்கும்போதே பயமாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பாரீஸ் ஒப்பந்தம் பின்பற்றப்பட்டால் கூட, பல இடங்களில் வெப்பநிலையும் வெப்ப அலைகளும் அதிகரிக்கும். ஏற்கனவே அதிக வெப்பநிலையால் விளிம்பில் பல நகரங்கள் நின்றுகொண்டிருக்கின்றன என்பதால், அவை, 'ஆபத்தான வெப்பநிலை' என்ற வரையறைக்குள் எளிதில் போய்விடும்.

வெப்பநிலையைப் பொறுத்தவரை, "என்னா வெயிலு", "ஒரே புழுக்கம்" என்று அதை ஓர் இம்சையாக மட்டுமே அணுகுகிறோம். உண்மையில் இந்த உளவியல் புரிதல்கூட, சரியான வெப்ப மேலாண்மைக்கு ஒரு தடையாக இருக்கிறது என்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். "வெப்ப அலை என்பதும் சுட்டெரிக்கும் வெயில் என்பதும் ஒரு பேரிடராக அணுகப்படவேண்டும், அப்போதுதான் மேலாண்மைக்கான திட்டங்கள் விவாதிக்கப்படும்" என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். வெள்ளமும் புயலும் எப்படிப்பட்ட ஆபத்துகளோ, அதே அளவில் அச்சுறுத்தல் அதிக வெப்பத்தாலும் வரக்கூடும்.

வெயில்
வெயில்

"நாங்க பார்க்காத வெயிலா?" என்று நமக்கு விளையாட்டாகத் தெரியலாம். ஆனால் அதீத வெப்பத்தால் ஏற்படவிருக்கிற பாதிப்புகளின் பட்டியல் தலைசுற்றவைக்கிறது. வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் இறப்புகள் (Heat stroke death), வறட்சி, தண்ணீர்த் தட்டுப்பாடு ஆகியவை நாம் ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால் நாம் அறிந்திராத ஆபத்துக்கள் நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன.

இந்தியாவில் 2015 ஏற்பட்ட வெப்ப அலையால், 3.6% பகல் வேலை நேரம் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் ஆவணம். 2100க்குள் வெப்பநிலை கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், இந்தியாவில் மட்டும் வெப்பநிலையால் 15 லட்சம் பேர் இறக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2050க்குள், மதிய நேர வேலைக்காலத்தில் பாதிக்கும் மேலாக இடைவேளையிலேயே கழியும் - இடைவேளைகள் இல்லாவிட்டால் ஒழுங்காக வேலை செய்ய முடியாத நிலை ஏற்படும். மதிய நேரங்களில் வேலைக்கு செல்லவோ, வேலையிலிருந்து திரும்பவோ முடியாத அளவுக்கு வெப்பநிலை மோசமாக இருக்கும். பள்ளிக்குழந்தைகளுக்கான விளையாட்டு நேரங்கள் எல்லாம் மாற்றி அமைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அதிகமான மக்கள் வேலை செய்கிற தொழிற்சாலைகள், பணிமனைகள் எல்லாவற்றிலும் உள்கட்டமைப்பு வசதிகளை வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு மாற்றி அமைக்கவேண்டியிருக்கும்.

இதில் வேறொரு கோணமும் இருக்கிறது - வெளியில் வேலை செய்ய முடியாது/மதிய நேரம் வேலை செய்ய முடியாது என்றால் உடனடியாக வேலை நேரத்தையோ வேலை செய்யும் இடத்தையோ மாற்றிக்கொள்ளும் வசதி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆக, பொருளாதார அடுக்கில் கீழே இருப்பவர்கள் தங்கள் உடல்நலத்துக்குக் கேடு என்றபோதும் அதீத வெப்பத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, கட்டுமானத் தொழிலாளர்கள் மிக அதிகமாக பாதிக்கப்படுவார்கள். அதீத வெப்பநிலையால் மிக மோசமாக பாதிக்கப்படவிருப்பது வறியவர்கள்தான்.

நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island) என்பது சமீப காலமாக அதிகமாக விவாதிக்கப்பட்டுவரும் ஒரு சூழல் பிரச்சனை. கட்டிடங்களைக் கட்டுவதற்கான கான்க்ரீட், தார்ச்சாலைகள், அஸ்பால்ட், சிமெண்ட் ஆகியவை எல்லாமே வெப்பத்தை அதிகரிக்கக்கூடியவை. ஆகவே பெருநகரங்களில் பொதுவாகவே வெப்பம் அதிகமாக இருக்கும். சுற்றியிருக்கும் கிராமப்புறங்களை விட ஒரு பெருநகரத்தின் சராசரி வெப்பம் 11 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கும்.

நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island)
நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island)
ivansmuk

அதிலும் குறிப்பாக, அதிக கட்டடங்கள் நிறைந்த பகுதிகள், போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்கள், மரங்கள் இல்லாத வெட்டவெளி தார்ச்சாலைகள், தொழிற்பகுதிகள் ஆகிய இடங்களில், நகரத்தின் சராசரி வெப்பத்தை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும். நகர்ப்புற வெப்பத் தீவுகள் என்று இவை குறிக்கப்படுகின்றன. உதாரணமாக, சென்னை நகரத்தைப் பொறுத்தவரை, அண்ணாசாலை, கோயம்பேடு, கத்திப்பாரா, மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் வெப்பநிலை மிக அதிகம். அங்கு வெப்பத் தீவுகள் காணப்படுகின்றன என்று தெரிவிக்கிறது 2009ல் வெளிவந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் ஆய்வுக்கட்டுரை.

இன்னொரு உதாரணத்தைப் பார்க்கலாம் - பெங்களூருவின் கலாசிப்பாளையம் பகுதி, பழைய நகரத்தின் ஒரு பகுதி. அதிகம் திட்டமிடாமல் கட்டப்பட்ட, நெரிசல் நிறைந்த பகுதி. இங்கு வெப்பத்தீவுகள் அதிகம். ஆனால், புதிதாக வந்த ஜெயநகர் உள்ளிட்ட பகுதிகள் இடைவெளியோடு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இங்கு மரங்களும் அதிகம். ஆகவே இங்கு வெப்பத்தீவுகள் குறைவு.

'வர்க்கரீதியான ஏற்றத்தாழ்வு' என்ற ஒரு கண்ணோட்டத்தில் இதைப் பார்க்கும்போது, நமக்கு சில விவரங்கள் தெளிவாகத் தெரியும். யாரால் தோட்டங்கள் நிறைந்த, காற்றோட்டமான வீடுகளில் வசிக்க முடியும்? நெரிசலான கட்டடங்களில், மரங்களே இல்லாத அடைசல் இடங்களில் யார் வசிக்கிறார்கள்? நகரத்தின் வெப்பத்தீவுகளில், வேறு வழியின்றி வசிப்பது யார் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.

வருடாவருடம் நகரத்துக்குப் புலம்பெயர்ந்து வருபவர்களின் எண்ணிக்கையும், நகரமயமாதலும் அதிகரிக்கிறது. கடந்த ஐம்பது வருடங்களில், உலக அளவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்திருக்கிறது! உலகத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில்தான் வசிக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மக்கள் தொகையில் 34% பேர் நகரங்களில்தான் வசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் வாழ்வாதாரங்கள் குறைந்துகொண்டேவரும் சூழலில், இது மேலும் அதிகரிக்கும். நகரங்களை சரிவர மேலாண்மை செய்வதும், வெப்பத்தீவுகளைக் கண்டறிந்து அங்கு தீர்வுகளை செயல்படுத்துவதும் இனி வருங்காலங்களில் ஒரு முக்கியமான கடமையாக இருக்கும். ஏற்கெனவே பல நகரங்களில் அச்சுறுத்தலாக மாறிவரும் தண்ணீர்ப் பிரச்சனையோடு இதுவும் சேர்ந்துகொள்ளும்.

ஊழிக்காலம்
ஊழிக்காலம்

இந்த விவாதத்தில் அதிகம் பேசப்படாத ஓர் அம்சம், வெப்பநிலை அதிகரிப்பதால் வரும் மனநல பாதிப்பு. இது பற்றிய ஆய்வுகள் குறைவு என்றாலும், ஆரம்பகட்டத் தரவுகளே அச்சுறுத்துகின்றன. அமெரிக்காவிலும் மெக்சிக்கோவிலும், அதிகமான இரவுநேர வெப்பநிலை இருக்கும் பகுதிகளில், தற்கொலை விகிதம் அதிகம் என்கிறது ஓர் ஆய்வு! வறட்சிக் காலங்களில் மனத்தொய்வும் (Depression) பதற்றமும் (Anxiety) அதிகரிக்கின்றன என்று பல ஆய்வுகள் உறுதிசெய்திருக்கின்றன. வெப்பநிலை அதிகரிக்கும்போது ஏற்படும் மனரீதியான பாதிப்புகள், சமூகக் கட்டமைப்பில் என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

காலநிலை மாற்றத்தால் வெப்பநிலை அதிகரிக்கும்போது தண்ணீர்த் தட்டுப்பாடும் ஏற்படலாம், இல்லையா? அதன் பாதிப்பு எப்படிப்பட்டதாக இருக்கும்?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...