Published:Updated:

நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்திருந்த கட்டடங்கள்; இடித்து அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

Representational Image
Representational Image ( Photo: Vikatan )

நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம் என நன்கு தெரிந்திருந்தும்கூட, ஆக்கிரமிப்பாளர்கள், துணிச்சலுடன் இதைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

தஞ்சையில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை வருவாய்த்துறையினர், புல்டோசர் மூலம் இடித்து அகற்றினர். இது இப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. ஊரகப் பகுதிகளில் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதனால் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மழைநீர் வழிந்தோடி, நீர்நிலைகளைச் சென்றடைவது தடுக்கப்படுகிறது. இதனால் தண்ணீர் வீணாவதோடு, நிலத்தடிநீர் சேமிப்பும் பாதிக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், மழைக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

தஞ்சை கலெக்டர் அலுவலகம்
தஞ்சை கலெக்டர் அலுவலகம்
பொது இடத்தை ஒருவர் ஆக்கிரமித்தால் யாரிடம் புகார் அளிப்பது? | Doubt Of Common Man

நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பது சட்ட விரோதம் என நன்கு தெரிந்திருந்தும்கூட, ஆக்கிரமிப்பாளர்கள், துணிச்சலுடன் இதைச் செய்து வருகிறார்கள். பெரும்பாலும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால் புதிது புதிதாக ஆக்கிரமிப்பு கட்டடங்கள் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில்தான் தஞ்சை மாவட்டம் நீலகிரி ஊராட்சிப் பகுதியில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடங்களைக் காவல் துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகளோடு வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினர். இந்த அதிரடி நடவடிக்கை இப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட தெற்குத் தோட்டம் பகுதியில் நீர் வழிப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து 22 அடி அகலத்துக்கு சுமார் 2,000 சதுர அடி பரப்பளவிலான இடத்தை தனியார் ஆட்கள் 3 பேர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி இருந்தனர். மேலும், நீர்வழிப்பாதையில் 9 அடி அகலத்துக்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைநீர் தேங்கி அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து பெரும் சிரமம் ஏற்படக்கூடிய அவலம் இருந்து வந்தது. இதையடுத்து அப்பகுதி குடியிருப்போர் நலச் சங்கத்தினர், தஞ்சை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து, இந்த இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர், இங்கு ஆக்கிரமிப்பு இருப்பதை உறுதி செய்தார். உடனடியாக, ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார்.

அகற்றப்படும் ஆக்கிரமிப்பு (File Pic)
அகற்றப்படும் ஆக்கிரமிப்பு (File Pic)
நீரோடையை ஆக்கிரமித்த கொடநாடு முதல் முகம் திருப்பிக்கொண்ட ராகுல் வரை..! கழுகார் அப்டேட்ஸ்

இந்நிலையில், காவல் துறையினரின் முன்னிலையில், வருவாய்த்துறை அதிகாரிகளால், இங்கிருந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதுபோல் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கட்டடங்களையும் அகற்ற வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள். மழைக்காலம் நெருங்கிவிட்டது. தமிழக அரசு உடனடியாக விழித்துக்கொள்ள வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள வருவாய்த்துறை அதிகாரிகள், உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

அடுத்த கட்டுரைக்கு