Published:Updated:

`ராஜராஜ சோழன் காலத்து `அழகிகுளம்'!' - 50 ஆண்டுகளுக்குப் பின் தூர்வாரப்பட்டு விழாக்கோலம்

கே.குணசீலன்
ம.அரவிந்த்

ராஜராஜன் சோழன் காலத்தில் இருந்த பழைமையான குளத்தை மீட்டு தூர் வாரியத்துடன் அதைக் காப்பதற்காக லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடியுள்ளனர்.

குளத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் மக்கள்
குளத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாடும் மக்கள் ( ம.அரவிந்த் )

ராஜராஜ சோழன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட குளத்தை பொதுமக்கள் முயற்சி செய்து தங்கள் சொந்த செலவில் தூர் வாரியதுடன் லாரி மூலம் தண்ணீர் நிரப்பி அந்தக் குளத்திலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடினர். ``சிறப்பு வாய்ந்த இந்தக் குளம் கண் போன்று பாதுகாக்கப்பட வேண்டும். இதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாகவே ஆடிப்பெருக்கை இங்கேயே கொண்டாடினோம். இனி இந்தக் குளம் எங்க வாழ்க்கையின் ஒன்றாக கலந்திருக்கும்'' என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குளத்தில் ஆடிப்பெருக்கு விழா
குளத்தில் ஆடிப்பெருக்கு விழா

தஞ்சாவூர் நகரின் மையப் பகுதியான பர்மா பஜார் அருகே விஜயா தியேட்டர் பின்புறம் உள்ளது அழகிகுளம். ராஜராஜ சோழன் ஆட்சி காலத்திலே இந்த குளம் இருந்துள்ளது. பின்னர் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளாலும், குப்பை கழிவுகளை கொட்டியதாலும் பயன்பாடு இல்லாமல் போனதுடன் முழுமையாக தூர்ந்து போனதோடு குளம் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து கடந்த மாதத்தில் குளத்தை சுற்றியுள்ள மக்கள் குளத்தை தூர்வார வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் தங்களால் முடிந்த நிதியைக் குளத்தை தூர்வாருவதற்குக் கொடுத்தனர்.

பின்னர் 50 ஆண்டுகளுக்குப் பிறகு அழகி குளம் தூர்வாரப்பட்டன. குளத்தில் இருந்த குப்பை கழிவுகளைக் கொண்டே நான்கு புறமும் கரைகள் அமைத்தனர். மூன்று ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட இந்தக் குளம் தற்போது பரந்து விரிந்து காணப்படுகிறது. இன்று ஆடிப்பெருக்கு விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காகக் குளத்தின் மையப் பகுதியில் உள்ள பள்ளத்தில் 5 லாரிகளின் மூலம் தண்ணீரை நிரப்பினர். முன்னதாக பொதுமக்கள் ஆடிப்பெருக்கை இங்கேயே கொண்டாட வேண்டும் என நேற்று காலை தண்டோரா மூலம் தெரிவிக்கப்பட்டது. இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் திரண்டு வந்து படையலிட்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி வந்தனர். 50 ஆண்டுகளுக்குப் பிறகு அழகி குளம் விழாக்கோலம் கண்டதைக் காண்பதற்கு ஏராளமானவர்கள் வந்து சென்றனர். பலர் குளத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அழகி குளம்
அழகி குளம்

இது குறித்து செல்லபெருமாள் என்பவரிடம் பேசினோம். ``சோழமன்னர்களில் ராஜராஜ சோழன் ஆட்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால் ராஜராஜன் சோழன் நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி செய்து வந்தார். சிவகங்கை குளம், அய்யன் குளம், அழகி குளம் என 50-க்கும் மேற்பட்ட குளங்களை அமைத்துள்ளார். இந்தக் குளங்கள் அனைத்தும் தஞ்சாவூரின் நகர் பகுதியிலேயே அமைந்துள்ளன. அதில் இந்த அழகி குளம் என்பது தனிச் சிறப்பு பெற்றது. இந்தப் பகுதியில் வசித்த சொக்கியம்மாள் என்ற மூதாட்டி சிவத்தொண்டு செய்து வந்தார். சொக்கியம்மாள் என்றால் அழகி என்று பொருள். அவர் பெரிய கோயில் கட்டும்போது அதில் கட்டடப் பணியாற்றிய அனைத்துப் பணியாளர்களுக்கும் அவர்களின் களைப்பும் தாகமும் தீர்வதற்கு இந்தக் குளத்திலிருந்து தண்ணீரும், நீர் மோரும் குடிப்பதற்குக் கொடுத்து வந்துள்ளார்.

மேலும், மூதாட்டி அழகி அவர் வீட்டில் இருந்து பெரிய கல்லைக் கொடுத்து இதைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறியிருக்கிறார். இவரின் சிவத்தொண்டைப் பார்த்து வியந்த ராஜராஜ சோழன் மனதார பாராட்டியதுடன் அவர் கொடுத்த கல்லில் தாமரை பொறித்து கோபுரத்தி உச்சியில் உள்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது அவை இன்றளவும் இருக்கிறது. ராஜராஜ சோழன் அழகி மூதாட்டியின் சிவத் தொண்டில் திருப்தியடைந்ததால் அவருக்குத் தீர்வையின்றி அழகி குளத்தைப் பதிவு செய்து கொடுத்தார் என்ற வரலாறு தெரிவிக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மன்னர் காலத்து குளமான அழகி குளம் பாதுகாக்கப்படாமல் கிடக்கிறதே என எங்கள் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் கடும் வேதனையில் இருந்தனர்.

குளத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்
குளத்தில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்

பின்னர் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து குளத்தை தூர்வாரிவிட்டோம். இதிலேயே ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாட வேண்டும் என நினைத்தோம். அதன்படி சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம். இதற்காக தற்சமயத்துக்கு லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பினோம். ஆனால், இந்தக் குளத்துக்கு நிரந்தரமாகத் தண்ணீர் விட வேண்டும். அவை அரசால் மட்டுமே முடியும். காவிரி கிளை ஆறான புது ஆற்றிலிருந்து குளத்துக்குத் தண்ணீர் வரும் நீர்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சரிசெய்து ஆற்றில் தண்ணீர் வரும்போது குளத்துக்குத் தண்ணீர் வரவழைத்து நிரப்ப வேண்டும். இதன் மூலம் எங்கள் பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும். இனி இந்தக் குளத்தை எங்க கண் போல பராமரிப்போம். இதை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஆடிப்பெருக்கு விழாவை குளத்திலேயே கொண்டாடினோம்'' என்றார்.