Election bannerElection banner
Published:Updated:

ஒரு பாட்டில் பிளாஸ்டிக் சேகரித்தால் ₹5 பரிசு... தஞ்சை இளைஞரின் அசத்தல் முயற்சி!

மாணவர்களுடன் தேந்திரன்
மாணவர்களுடன் தேந்திரன் ( ம.அரவிந்த் )

எனக்கு சொந்தமான இடத்தில் நான்கு வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிளாஸ்டிக் குறித்த அபாயத்தை பலரும் உணர்ந்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதை யாரும் கைவிடவில்லை.

தஞ்சாவூர் அருகே இளைஞர் ஒருவர் பள்ளி மாணவர்களுக்கு பாரம்பர்ய கலைகளைக் கற்றுத் தருவதுடன், அவர்கள் மனதில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வையும், சேமிப்பு குறித்த அவசியத்தையும் ஏற்படுத்தும் விதமாக ஒரு பாட்டிலில் பிளாஸ்டிக் பைகள் நிரப்பி வந்து கொடுத்தால் அந்த மாணவருக்கு ரூ.5 தருகிறார். மாணவர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் புதிய முயற்சியைச் செய்தாலும் நம் மண்ணை விட்டு பிளாஸ்டிக் ஒழிய வேண்டும் என்பதே குறிக்கோள் எனக் கூறும் அந்த இளைஞரை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.

பிளாஸ்டிக் பாட்டில்
பிளாஸ்டிக் பாட்டில்

தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே உள்ள புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (30) பி.இ படித்திருக்கும் இவர் 10 வருடங்களாக சென்னையில் உள்ள ஜப்பான் கம்பெனி ஒன்றில் ரோபோட் தயாரிக்கும் வேலை செய்து வந்ததுடன் மாதம் ரூ. 75,000 சம்பளம் பெற்று வந்துள்ளார். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் தேவேந்திரனுக்கு மனசு மட்டும் நிறையவே இல்லை. இயற்கை விவசாயம், பாரம்பர்யம், மண் மீது கொண்ட அக்கறை போன்றவை அவர் சொந்த ஊர் நோக்கிச் செல்வதற்கு காரணமாக அமைந்தது.

தொடக்கத்தில் 15 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் இன்றைக்கு 100 மாணவர்கள் வரை பயிற்சி பெற்று வருகின்றனர். அத்துடன் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாய குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு பயிற்சியை அளித்து வருகிறார். மாணவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தேவேந்திரன் கையாண்டு வரும் புதிய நடைமுறை அனைவரையும் கவர்ந்திருப்பதுடன் இதில் முக்கிய முத்தாய்ப்பான விஷயமாகவும் பார்க்கப்படுகிறது.

இது குறித்து தேவேந்திரனிடம் பேசினோம். ``கிராமத்தில் வளர்ந்தவன் என்பதால் விவசாய விளைநிலங்கள் மீது எனக்கு பெரும் ஈடுபாடு இருந்து வந்தது. அத்துடன் பாரம்பர்ய கலைகளையும் முறைப்படி கற்றுத் தேர்ந்தேன். விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களைக் கொடுத்தால் அமோக விளைச்சல் கிடைக்கும் விளைகின்ற பயிர்களும் தரமானதாக இருக்கும் என்பதைக் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவன். அதே நேரத்தில் விவசாயத்துக்கு ரசாயனம் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும் அறிந்தவன். அத்துடன் பிளாஸ்டிக் பயன்பாட்டால் மண் வளம் கெட்டுப்போவதை எண்ணி எதிர்காலத்தில் என்னவாகுமோ என்ற பெரும் கவலையும் எனக்குள் சூழ்ந்தது.

இந்நிலையில், எனக்கு சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது எல்லோரும் புடிச்ச வேலையை அப்புறம் பாத்துக்கலாம் படிச்ச வேலையை முதலில் செய் எனக் கூறியதால் வேலைக்குச் சென்றேன். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அந்த கம்பெணியில் பணிபுரிந்தேன். கை நெறய சம்பளம் கிடைத்தது மனசு மட்டும் நெறயவே இல்லை. ஊர் காட்டை பத்தியே நெனச்சுக்கிட்டு இருப்பேன். அப்பப்ப வந்து இயற்கை விவசாயத்தில் ஈருபட்டு வந்தேன்.

தேவேந்திரன்
தேவேந்திரன்

திடீர்னு ஒரு வருசஷத்துக்கு முன்னால வேலையை விட்டுட்டு ஊரில் வந்து நின்னேன். ரூ. 75,000 சம்பளம் வருது அதை வேண்டாம்னு சொல்லிட்டு வந்து நிக்கிறியே உனக்கு கிறுக்கு புடிச்சிருக்கான்னு எல்லாரும் கேட்டாங்க. அதை எதையும் காதில் வாங்கிக்காம பாரம்பர்ய பள்ளியைத் தொடங்கி பாரம்பர்ய கலைகளான சிலம்பம், அடி முறை, பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு, பாரம்பர்ய உணவு குறித்து எடுத்து கூறி அதற்கான பயிற்சியும் கொடுக்க தொடங்கினேன். ஆரம்பத்தில் 15 மாணவர்கள் இருந்த என் பள்ளியில் இன்றைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

மேலும் பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு, ஒட்டங்காடு, மதன்பட்டவூர், வெட்டுவாக்கோட்டை உள்ளிட்ட பல கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு இதற்கான பயிற்சியைக் கொடுத்து வருகிறேன். காசு கொடுக்கக்கூடிய சூழ்நிலையில் உள்ள மாணவர்களிடம் மட்டும் இதற்கான கட்டணத்தை வாங்கிக் கொள்கிறேன். கிட்டத்தட்ட 350 மாணவர்கள் வரை என்னிடம் பாரம்பர்யங்களைக் கற்று வருகின்றனர்.

மாணவர்கள்
மாணவர்கள்

அத்துடன் எனக்கு சொந்தமான இடத்தில் நான்கு வருடங்களுக்கு மேலாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிளாஸ்டிக் குறித்த அபாயத்தை பலரும் உணர்ந்திருந்தாலும் அதைப் பயன்படுத்துவதை யாரும் கைவிடவில்லை.

என்னோட வயலில் உளுந்து விதைத்திருந்தேன் முளைத்து வந்த ஒரு விதையின் மேல் பிளாஸ்டிக் கவர் விழுந்து மூடியது. மூன்று நாள்கள் தொடர்ந்து அதைக் கவனிச்சேன் கடைசியில் பிளாஸ்டிக்தான் ஜெயிச்சது முளைத்த செடி பட்டு மண் மலடாகி விட்டது.

சிறிய அளவிலான பிளாஸ்டிக் கவருக்கே இந்த நிலமை என்றால் தினமும் எவ்வளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது, அவை நம் மண்ணை மட்டுமல்ல மண்ணை நம்பி வாழும் மக்கள், உயிரினங்கள் ஆகியோருக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது என்பது எனக்கு பதைபதைப்பை அதிகப்படுத்தியது. இதையடுத்து வளரும் தலைமுறைகளான பள்ளி மாணவர்களின் மனதில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வையும், அதைப் பயன் படுத்துவதால் ஏற்படும் அபாயத்தையும் பதிய வைக்கும் முயற்சியில் இறங்கினேன். பிளாஸ்டிக் ஒழிப்பில் அவர்களை ஈடுபட வைத்தேன். ஒரு மாணவன் தன் வீடு மற்றும் தன்னைச் சுற்றியுள்ள இடங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் பைகளை எடுத்து ஒரு பிளாஸ்டிக் பாட்டில் முழுக்க நிரப்பி வந்து கொடுத்தால் அவனுக்கு ரூ.5 தந்து ஊக்கப் படுத்துகிறேன்.

நான் கொடுக்கும் 5 ரூபாயைச் சேமித்து வைத்து படிப்பு செலவுக்கு பயன்படுத்தவும் கூறி சேமிப்பின் அவசியத்தையும் ஆழமாகப் பதிய வைக்கிறேன். பிளாஸ்டிக் கவரில் அடைக்கப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறேன்.

ஏழு மாதங்களுக்கும் மேலாக இதைச் செயல்படுத்தி வருகிறேன். மாணவர்கள் மட்டுமன்றி பொதுமக்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சக்திவேல் என்ற மாணவன் பாட்டிலில் பிளாஸ்டிக் கவர்களை நிறைத்து கொடுத்தே ரூ. 550 வரை சேமித்துள்ளான். பாட்டிலில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களை புது நகரில் உள்ள பாரம்பர்ய பள்ளிக்கு எடுத்துச் சென்று சேமித்து வருகிறேன்.

பிளாஸ்டிக்குடன் மாணவர்கள்
பிளாஸ்டிக்குடன் மாணவர்கள்

ஏற்கெனவே பிளாஸ்டிக் பொருள்கள் அடங்கிய பாட்டில்களை பயன்படுத்தி கோழிக் கொடாப்பு அமைத்துள்ளேன். தற்போது 1,700 பாட்டில்கள் சேர்ந்துள்ளது. இதில் சுமார் 500 டன்னுக்கு மேலாக பிளாஸ்டிக் உள்ளது குறிப்பிடதக்கது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி சாலை அமைத்துள்ளதை அறிந்துள்ளேன். அது போன்ற தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பர்ய பள்ளிக்கு சுவர், மாட்டுக் கொட்டகை அமைக்க உள்ளேன். நான் சார்ந்திருக்கக்கூடிய பகுதிகளில் முற்றிலுமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

இதற்காக மாணவர்கள் தரும் ஒத்துழைப்பு என்பது அளப்பரியது. அவர்கள் காட்டுகின்ற வேகம் என்னை ஆச்சர்யப் படுத்துகிறது. மாணவர்களின் மனதில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை விதைத்தால் மண்ணில் பிளாஸ்டிக் இருக்காது என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. அது கை கூடி வருவது எனக்கு நிம்மதியைத் தந்துள்ளது. உண்மையைச் சொன்னா கை நெறய சம்பளம் வாங்கும்போது வராத தூக்கம் இப்ப வருகிறது. மனம் முழுக்க நம்பிக்கை நிறைந்திருப்பதால் நல்லபாதையில் என் பயணம் செல்கிறது'' என்று முகம் மலர தெரிவித்தார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு