Published:Updated:

ஒரு வருடத்தில் உருவான சிறு `காடு'.. பாராட்டும் மக்கள்.. கும்பகோணத்தை அசத்தும் `ஆனந்த' தம்பதி!

கே.குணசீலன்
ம.அரவிந்த்

கும்பகோணம் அருகே பொது இடத்தில் சொந்த செலவில் 1000 மரக்கன்றுகளை நட்டதுடன் அதனை வளர்த்து இன்று சிறிய அளவிலான காட்டை உருவாக்கியுள்ள தம்பதியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனந்தி கணவருடன்
ஆனந்தி கணவருடன் ( ம.அரவிந்த் )

கும்பகோணம் அருகே பொது இடத்தில் சொந்த செலவில் 1000 மரக்கன்றுகளை நட்டு அதனை வளர்த்து அதன் மூலம் இன்று சிறிய அளவிலான காட்டையே உருவாக்கியுள்ளனர் கால்நடை மருத்துவ தம்பதியர். சுற்றுசூழலை கவனத்தில் கொண்டும், மரங்கள் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இதனை செய்திருப்பதாக தெரிவிக்கும் அந்த ஜோடியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஆனந்தி கணவருடன்
ஆனந்தி கணவருடன்

கும்பகோணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ஆனந்தி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியர் அமெரிக்காவில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தனர். இதனையடுத்து சொந்த ஊருக்கு சென்று விவசாயம் செய்ய வேண்டும். குழந்தைகள் தாத்தா பாட்டியுடன் வளர வேண்டும் என்ற ஆசையில் கடந்த 2010ம் ஆண்டு ஊருக்கு வந்தனர்.

அதன் பிறகு செக்கான்கன்னி என்ற கிராமத்தில் 13 ஏக்கர் விளை நிலத்தை வாங்கி விவசாயம் செய்ய தொடங்கினர். இயற்கை முறையில் மாப்பிளை சம்பா, கருங்குறுவை உள்ளிட்ட பல ரக நெல்களை சாகுபடி செய்ய தொடங்கினர். இதனை தற்போதும் தொடர்ந்து வருகின்றனர். பின்னர் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்டு மரங்களை வளர்க்கவும் இளைஞர்கள் மற்றும் அனைவர் மத்தியிலும் மரம் வளர்ப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் மரங்கள் வளர்பதற்கான இந்த முயற்சியில் இறங்கினர்.

வளர்ந்த கன்றுகள்
வளர்ந்த கன்றுகள்

இதற்காக கடந்த ஆண்டு ஸ்ரீநிவாசநல்லுார் அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 7 ஆயிரம் சதுர அடி நிலத்தில் உரிய அனுமதி பெற்று, ஆயிரம் மரக்கன்றுகளை நட்டதுடன் இவர்கள் தங்களது சொந்த செலவில் வளர்க்க தொடங்கி அவை மரமாக வளரவும் வைத்தனர். இன்று அந்த இடம் ஒரு சோலைவனமாக மாறி ஒரு சிறிய காடாக காட்சி அளிக்கிறது. பெயரில் இருக்கும் பொறுத்தத்தை போலவே இயற்கையை நேசிப்பதிலும் பொறுத்தம் கொண்டவர்கள் இந்த தம்பதியினர். மரக்கன்றுகளை ஊன்றி ஒரு வருடமாக உயிராக நினைத்து உழைத்தற்கு பலனாக இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் உருவாகியிருக்கின்றன இதற்காக நாங்கள் அனைவரும் அவர்களை நெகிழ்ச்சியோடு பாராட்டுகிறோம் என ஆனந்தத்துடன் தெரிவிக்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.

இது குறித்து ஆனந்தியிடம் பேசினோம், ``நாங்க அமெரிக்காவில் பணிபுரிந்தாலும் எங்க எண்ணம் எல்லாம் கும்பகோணத்தை சுற்றி தான் இருக்கும். ஊருக்கு வந்ததுமே முதலில் விவசாயம் செய்ய வேண்டும் பின்னர் மரங்களை வளர்க்க வேண்டும் என நினைத்தோம். இதற்காக விலை நிலமாக நிலத்தை வாங்காமல் விளை நிலமாக பார்த்து வாங்கினோம். பின்னர் விவசாயம் செய்ய தொடங்கியதும் எங்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இங்கு அனைவரும் சாதரணமாக பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தி வந்தனர்.

ஆனந்த் மற்றும் ஆனந்தி
ஆனந்த் மற்றும் ஆனந்தி

அதை பற்றிய ஆராய்ச்சியை தான் என் கணவர் அமெரிக்காவில் செய்து கொண்டிருந்ததால் அதிர்ந்து விட்டார். மேலும் அங்கு இந்த மருந்து தடை செய்யப்பட்டு விட்டது. அதன்பிறகு நாம் இயற்கை விவசாயம் செய்வோம். நமக்கு தெரிந்தவர்களை செய்ய வைப்போம் என பணியை தொடங்கினோம். முதல் இரண்டு வருடங்கள் இது குறித்து தெரியவில்லை. பின்னர் ஒவ்வொன்றாக நன்கு தெரிந்து கொண்டு விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். மூன்றாவது வருடத்தில் இருந்து நல்ல முறையில் விளைச்சல் கிடைக்க ஆரம்பித்தது. பிறகு இயற்கை விவசாயம் குறித்து எங்களுக்கு தெரிந்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கினோம்.

பின்னர் பொது இடத்தில் மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இதற்காக கோயில் இடத்தில் அனுமதி வாங்கி மரக்கன்றுகள் ஊன்றினோம். இதனை எங்கள் சொந்த செலவிலேயே செய்தோம். அரசமரம், ஆலமரம், புங்கன், நெல்லி, அரளி, வேம்பு உள்ளிட்டவையும் பழம் மற்றும் பலன் தரும் மரக்கன்று, மூலிகை மரங்கன்றுகள் என 30 வகையான மரங்களை நட்டோம். இதற்கு சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி நீர் பாய்ச்சினோம்.

ஆனந்த் மற்றும் ஆனந்தி
ஆனந்த் மற்றும் ஆனந்தி

ஒரு வருடத்திற்கு முன் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் இன்று வளர்ந்து சுமார் 15 அடி அளவில் மரங்களாக வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனை பார்ப்பதற்கே சந்தோஷமாக இருக்கிறது. மேலும் 200 பனை விதைகளை ஊன்றியுள்ளதோடு ஒவ்வொன்றையும் எங்கள் பிள்ளைகளாக நினைத்து வளர்த்தோம் அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இதில் கூடுதலான மகிழ்ச்சி என்னவென்றால் இங்குள்ள மரங்களில் பறவைகள் கூடு கட்டி வசிக்க தொடங்கியுள்ளன.

வருங்கால தலைமுறையினருக்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும், மரங்கள் வளர்ப்பது குறித்து இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதை செய்தோம். இதற்கு மூன்று லட்சம் வரை செலவானது. இது முதல் முயற்சி அதுவும் சிறிய அளவிலான முயற்சி தான்.

மரங்கள்
மரங்கள்

பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் என பலரும் இந்த சிறிய காட்டை சுற்றி பார்த்து எங்களை பாராட்டி செல்கின்றனர். இது மகிழ்ச்சியை தருகிறது. தற்போது மீண்டும் வேறு ஒரு பொது இடத்தில் மரம் வளர்க்கும் பணியை தொடங்க இருக்கிறோம். மன்ணுக்காகவும், மரத்திற்காகவும் மக்கள் மனதில் இதனை ஒரு உரமாக விதைக்கும் நோக்கத்தில் இதை ஒரு விழாவாகவும் நடத்த இருக்கிறோம்" என்றார்.