Published:Updated:

அரசே யானை வழித்தடத்தை ஆக்கிரமிக்கலாமா... தமிழக அரசுக்கு `குட்டு' வைத்த நீதிமன்றம்!

கட்டடப் பணிகள்
கட்டடப் பணிகள்

மலை அடிவாரங்களை ஆக்கிரமித்து முறையற்ற கட்டடங்களைக் கட்டுவதும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பதையும் இதுவரைக்கும் தனியார் அமைப்புகள் செய்து வந்தன. ஆனால், இப்போது அதை தமிழக அரசே செய்திருப்பதுதான் விதிமீறலின் உச்சம்.  

கோவை மாவட்டத்தில் பேரூர் வட்டம், ஆலந்துறை கிராமம், காளிமங்கலம் பகுதி, கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி ஆகிய பகுதிகள் வனச்சரகத்திற்குட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதியில் அமைந்துள்ளன. இந்தப் பகுதி முழுவதும் மாவட்டச் சுற்றுச்சூழல் கமிட்டி மற்றும் மலையிடப் பாதுகாப்புக் குழுவினால் (HACA) பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது. இந்தப் பகுதி யானைகள் மற்றும் சிறுத்தைகளின் வாழ்விடமாகவும், நொய்யலாற்றின் நீராதாரப் பகுதியாகவும் விளங்குகிறது.

`யானை வழித்தடம் போல புலிகளுக்கும் வேண்டும்!” - விலங்கு நல ஆர்வலர்கள் #InternationalTigerDay

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஆலந்துறை, காளிமங்கலம் பகுதியில் 600 வீடுகளும், தென்கரை கிராமத்தில் 1500 வீடுகளும், பேரூர் செட்டிப்பாளையம் கிராமத்தில் 2500 வீடுகளும், பச்சன வயல் கிராமத்தில் 70 வீடுகளும் என மொத்தம் 4,710 வீடுகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன. மலைவாழ்ப் பகுதிகளில் எந்த ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், வனத்துறை, வருவாய்த் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட பல துறைகளில் அனுமதி பெறவேண்டும். ஆனால், முதற்கட்டமாக எந்த ஓர் அனுமதியும் பெறாமல், இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் வனத்துறையிடம் நிபந்தனையுடன் அனுமதி பெறப்பட்டது. ஏற்கெனவே, அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருக்கும் இண்டஸ் பொறியியல் கல்லூரி நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டுள்ளது. தற்போது குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட உள்ள வீடுகளும் இந்தக் கல்லூரியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் அமையவுள்ளன.

இந்த நிலையில், வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் லோகநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், `ஏற்கெனவே வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டுமானங்கள் அதிகளவில் கட்டப்பட்டு வருகின்றன. அதனால் யானைகள் அடிக்கடி எங்களுடைய குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்கின்றன. சிறுத்தைகளும் அடிக்கடி ஊருக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடிச் செல்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் 4,000-க்கும் அதிகமான வீடுகளைக் கட்டினால் அதை முன்வைத்தே வனப்பகுதியை முழுமையாக ஆக்கிரமிக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கெனவே ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் எளிதாகப் பட்டா வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். நிலச்சரிவு அபாயம், வன விலங்குகள் நடமாட்டம், இயற்கை வளம், சுற்றுச்சூழல் பாதிப்பு என எதையும் யோசிக்காமல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே, இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதி
கட்டுமானப் பணிகள் நடக்கும் பகுதி

இந்த வழக்கு கடந்த ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, திட்டத்துக்குத் தமிழக வனத்துறை வழங்கிய தடையில்லாச் சான்றிதழ் அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அந்தச் சான்றிதழில், 'ஆலந்துறை, செட்டிப்பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சுமார் 29,000 சதுர மீட்டருக்கு கட்டடங்கள் கட்டப்படவிருக்கின்றன. இந்தப் பகுதிகளில் விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்தப் பகுதிகளில் வீடு கட்டினால், மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே மோதல் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே சில நிபந்தனைகளுடன், தடையில்லாச் சான்று வழங்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் யானைகளுக்குப் பிடித்தமான பயிர்களை வளர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குடியிருப்புகளுக்குள் யானை வருவதைத் தடுக்க சுற்றி அகழிகளை வெட்டவேண்டும். வனவிலங்குகளின் நடமாட்டத்தைத் தெரிந்துகொள்ள கேமரா உள்ளிட்ட முன்னெச்சரிக்கை உபகரணங்களைப் பொருத்த வேண்டும். குடியிருப்புகளைச் சுற்றி மதில் சுவர்கள் கட்டப்பட வேண்டும். குடியிருப்புப் பகுதிகளுக்குள் யானைகள் வந்தால், அதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும். பொதுமக்கள் யானைகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. வனவிலங்கு நடமாட்டத்தைத் தடுக்கும் விதமான தடைகளையும், இயற்கையான நீரோடைகளைத் தடுக்கும் செயலிலும் ஈடுபடக் கூடாது. யானை உள்ளிட்ட வன விலங்குகளினால் கட்டடங்கள் சேதம் அடைந்தாலோ, மனித உயிர்கள் பலியானாலோ அதற்கு வனத்துறை பொறுப்பாகாது. பாதிக்கப்பட்டவர்கள் வனத்துறையினரிடம் இழப்பீடு எதுவும் கேட்கக் கூடாது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வனத்துறை யானைகள் நடமாட்டம் உள்ள பகுதி எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "எந்த ஒரு முன் அனுமதியும் வாங்காமல் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதால், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்டக் குடிசைமாற்று வாரியத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது" என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இந்த இடத்துக்கு பஸ் வசதியும் இல்லை. எப்படி இந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள் எனத் தெரியவில்லை.
வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் லோகநாதன்

இதுபற்றி வெள்ளியங்கிரி மலைவாழ் மக்கள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் லோகநாதனிடம் பேசினோம். "மலைத்தளப் பாதுகாப்புக் குழுவால் பாதுகாக்கப்பட்ட கிராமங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் குடிசைமாற்று வாரியம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது. இதற்கான பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் வேலுமணி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். ஆனால் இந்தத் திட்டத்துக்கு எந்தவிதமான அனுமதியும் வாங்கவில்லை. இப்போது பணிகள் நடக்கும் இடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில்தான் தனியார் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு மூடப்பட்டிருக்கிறது. குடிசை மாற்று வாரியம் கட்டுமானப் பணிகளை கட்டினால், கல்லூரியைத் திறக்கும் வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. குடிசை மாற்று வாரியம் தேர்வு இடம் கோவையிலிருந்து 27 கி.மீ தொலைவில் இருக்கிறது. இந்த இடத்துக்கு பஸ் வசதியும் இல்லை. எப்படி இந்த இடத்தைத் தேர்வு செய்தார்கள் எனத் தெரியவில்லை. நேற்று நீதிமன்றத்தில்கூட வழக்கு வந்தபோது, நீதிபதிகள் முன்னர் குடிசை மாற்று வாரியத்தால் எந்தப் பதிலும் பேச முடியவில்லை. அவர்களிடம் எந்த அனுமதி கடிதமும் இல்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசே முறையாக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இப்போது தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இனி இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தால் பயனடையப்போவது அதிகாரத்தில் இருக்கும் ஆட்களாகத்தான் இருக்கும்" என்றார். மலை அடிவாரங்களை ஆக்கிரமித்து முறையற்ற கட்டடங்களைக் கட்டுவதும், யானை வழித்தடங்களை ஆக்கிரமிப்பதையும் இதுவரைக்கும் தனியார் அமைப்புகள் செய்து வந்தன. ஆனால், இப்போது அதைத் தமிழக அரசே செய்திருப்பதுதான் விதிமீறலின் உச்சம்.

அடுத்த கட்டுரைக்கு