Published:Updated:

மரம் காக்க மரணித்த இந்தியாவின் முதல் பெண் சூழலியல் போராளி... அம்ரிதாவின் நெகிழ்ச்சிக் கதை!

Khejri Tree
Khejri Tree

இந்திய வரலாறுகளில் இடம்பெற்றிருக்கும் முதல் சூழலியலுக்கான போராட்டம், பிஷ்னோய் மக்களின் இந்தத் தியாகம்தான்.

Kalyanji Poem
Kalyanji Poem
A Poem by Kalyanji
A Poem by Kalyanji

மரம் என்பது மரம் மட்டுமே அல்ல, ஒரு மண்ணின் வரலாறு. நிலத்தை ஊடுருவிச் செல்லும் அந்த வேர்கள், உண்மையில் அந்தச் சமூகத்தின் வரலாற்றில் ஊடுருவிச் செல்பவை. அந்த வகையில் இந்தக் கட்டுரை, ஒரு குடும்பமும் ஒட்டுமொத்த கிராமமும் உயிர்கொடுத்துக் காப்பாற்றிய கேஜ்ரி மரத்தின் கதை.

Amrita Devi
Amrita Devi

இயற்கையைக் காப்பாற்றுவதற்கான போராட்டம், இன்று நேற்று தொடங்கியதல்ல என்பதற்கான அத்தாட்சி, கேஜ்ரி மரத்தின் வரலாறு. மகாபாரதப் பாண்டவர்கள் காட்டுக்குள் செல்வதற்கு முன்பு, தங்களது ஆயுதங்களை கேஜ்ரி மரத்தின் கீழ்தான் புதைத்து வைத்ததாகப் புராணக் கதைகள் உண்டு. ராஜஸ்தான் மாநில மக்கள் துளசிக்கு நிகராகப் புனிதப்படுத்தும் மரம். இன்றளவும் தங்களது வீட்டின் சுப நிகழ்ச்சிகளுக்கு முன்பு கேஜ்ரி மரத்துக்கு பூஜை செய்யும் மரபு அவர்களிடம் இருக்கிறது. ஆனால், 17-ம் நூற்றாண்டில் நிலைமை இப்படியாக இல்லை.

ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் இருக்கிறது, கேஜ்ராலி கிராமம். பிஷ்னோய் என்னும் பழங்குடிச் சமூகம் அதிகம் வசிக்கும் பகுதி. ஜம்பேஷ்வர் என்னும் குருவின் வழி வந்த இந்தச் சமூகம், அவர் எழுதிவைத்த 29 சட்டதிட்டங்களை இன்றளவும் பின்பற்றி வாழ்பவர்கள். 14-ம் நூற்றாண்டிலேயே எழுதிவைக்கப்பட்ட அந்த சட்டதிட்டங்களில், தனிமனிதச் சுகாதாரமும் சுற்றுச்சூழலைக் காப்பதன் முக்கியத்துவமும் நிறைந்திருக்கும்.

Khejri Tree
Khejri Tree

17-ம் நூற்றாண்டு காலகட்டத்தில், இந்தப் பகுதியை மார்வார் தேசத்து மன்னர் அபய் சிங் ஆண்டுவந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. அவரது காலத்தில்தான் கோட்டை எழுப்புவதற்காக பல நூறு மரங்கள் வெட்டப்பட்டு, காடுகள் அழிக்கப்பட்டதும் நிகழ்ந்தது. கட்டுமானப் பணிகளுக்கு, கேஜ்ரி மரங்களை எரித்து அதிலிருந்து சுண்ணாம்பு எடுப்பார்கள். ஊரே உறங்கிக்கொண்டிருந்த வேளையில், மரங்களை வெட்டுவதற்காக பரிவாரங்களோடு வந்தார் ராஜா அபய்சிங். அந்தப் படைகளை எதிர்த்து நின்றார் அம்ரிதா தேவி. பிஷ்னோய் சமூகத்தின் சட்டதிட்டங்களின்படி, மரங்களை வெட்டுவது பாவம். 'மரங்களை வெட்டக்கூடாது என்றால், தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும்' என்று படைவீரர்கள் அம்ரிதாவை வற்புறுத்தினார்கள். அந்தச் சமயம் அவர் பேசியது இன்றும் பிஷ்னோய் சமூகம் வழிவழியாகத் தங்களைப் பற்றி கூறும் கதைகளில் இடம்பெற்றிருக்கின்றன.

ஒரு மரத்தைக் காப்பாற்ற ஒரு மனிதத் தலைதான் சன்மானம் என்றால், அந்தச் சன்மானத்தை தாராளமாகத் தரலாம்.
அம்ரிதா தேவி

மரத்தைப் பற்றிக்கொண்டு அவர் அப்படிக் கூறிக் கொண்டிருந்தபோதே, மன்னர் அபய் சிங்கின் படைவீரர்கள் அம்ரிதாவின் தலையை வெட்டினார்கள். மரத்தைக் காப்பாற்றும் போராட்டம் அம்ரிதாவோடு நின்றுவிடவில்லை.

 Khejarli Massacre memorial
Khejarli Massacre memorial

அம்ரிதாவின் மூன்று மகள்கள் அஷூ, ரத்னி, பாகூ ஆகியோரையும் படைவீரர்கள் வெட்டிக் கொன்றார்கள். இந்த விஷயம் கிராமம் முழுவதும் பரவவே, பிஷ்னோய் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டார்கள். எல்லோரும் கேஜிரி மரங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள். அந்த மக்களை மரங்களோடு சேர்த்து இருதுண்டுகளாக வெட்டிய ரண கொடூரங்களும் நடந்தன. மொத்தம் 363 பிஷ்னோய் பழங்குடி மக்கள் மகாராஜாவின் ஆட்களால் கொல்லப்பட்டார்கள். அம்ரிதா, செப்டம்பர் மாத மத்தியில் ஒரு இருள் சூழ்ந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டதால், இன்றும் அந்த மக்கள் செப்டம்பர் மாத சனிக்கிழமையை துக்க தினமாக அனுசரிக்கிறார்கள்.

இந்திய வரலாறுகளில் இடம்பெற்றிருக்கும் முதல் சூழலியலுக்கான போராட்டம், பிஷ்னோய் மக்களின் இந்தத் தியாகம்தான்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் அஸ்ஸாம்... சூழலியல் அகதிகளான லட்சக்கணக்கான மக்கள்!

பிஷ்னோய் மக்களைப் பின்பற்றிதான் 1970-களில் உத்தரப் பிரதேசத்தில் ’சிப்கோ’ இயக்கமும் உருவானது. ஒரு குடும்பத்தைப் பறிகொடுத்து, அத்தனை பிஷ்னோய் மக்கள் உயிர்கொடுத்துக் காப்பாற்றிய கேஜ்ரி மரம், வறட்சியால் தற்போது 35 சதவிகிதம் வரை எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதுதான் சோகம். மரம் என்பது மரம் மட்டுமல்ல..!

அடுத்த கட்டுரைக்கு