Published:Updated:

இந்த சுத்தம் கொரோனா தந்தது!

இந்த சுத்தம் கொரோனா தந்தது!
பிரீமியம் ஸ்டோரி
இந்த சுத்தம் கொரோனா தந்தது!

கொரோனா வைரஸ்

இந்த சுத்தம் கொரோனா தந்தது!

கொரோனா வைரஸ்

Published:Updated:
இந்த சுத்தம் கொரோனா தந்தது!
பிரீமியம் ஸ்டோரி
இந்த சுத்தம் கொரோனா தந்தது!
2017 டிசம்பர் மாதம், ஈரான் தனது தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் திணறிக் கொண்டிருந்தது. பள்ளிகளுக்கு நீண்ட விடுமுறை அளித்திருந்த டெஹ்ரான் நகரத்தில் அளவுக்கு மீறிய காற்று மாசுபாட்டினால் அவசரக்கால அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு முழுக்கவே, டெல்லி மற்றும் சென்னையில் அதிகமாகியிருந்த காற்று மாசுபாடு மக்களை மூச்சுத்திணற வைத்துக்கொண்டிருந்தது. அதைச் சரிக்கட்டத் தெரியாமல் அரசாங்கமும் திணறியது. இவையனைத்திற்குமே தீர்வு வழங்கும் வகையில் கொரோனா லாக்டௌன் நல்ல விளைவுகளைச் சுற்றுச்சூழலுக்கு நல்கிக் கொண்டிருக்கிறது.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தொழிற்சாலைகள் செயல்படாமலே இருப்பதால் காவிரி ஆற்றில் முன்னர் இருந்த தூய்மையான வாழ்வாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றின் தரம் தற்போது முன்பைவிடத் தரம் உயர்ந்திருப்பதாகக் கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், காவிரியில் சென்று இணையும் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை, ராஜவாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால், சுண்ணாம்பு ஓடை ஆகிய நீர்நிலைகளைச் சுற்றி 469 சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளும் 37 தோல் தொழிற்சாலை களும் செயல்படுகின்றன. அவை, வெளியிடும் தோல் மற்றும் சாயக் கழிவுகள் நேரடியாகக் காவிரியாற்றில்தான் சென்று கலக்கும். அதனால், காவிரியின் நீர் விஷமாகிக் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் லாக்டௌன் காரணமாக இவையனைத்தும் மூடப்பட்டிருப்பதால் தற்போது காவிரியில் கழிவுநீர் கலப்பது நின்றுள்ளது. இது, காவிரியின் தரத்தை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறது.

சுத்தம்
சுத்தம்

வெனீஸ் நகரத்தின் நீர் எவ்வளவு மாசடைந்திருந்தது என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், தற்போது நீரைப் பார்த்தால் அதிலிருக்கும் மீன்கூடத் தெரியும் அளவிற்கு அந்நீர் தூய்மையடைந்திருக்கிறது. இத்தாலி லாக்டௌன் காரணமாக, படகுப் போக்குவரத்தை நிறுத்தியதன் விளைவே இந்த நன்மை. கொரோனாவுக்காகக் கடுமையான லாக்டௌனை அமல்படுத்தியுள்ள நாடுகள் எதிர்பார்க்காத நன்மைகளைக் கண்டுவருகிறது. பல நாடுகளில், நீர் மாசுபாட்டைச் சரிசெய்வதில், பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் குறைப்பதில் லாக்டௌன் பெரும் நன்மைகளைச் செய்துள்ளது.

இது இக்கட்டான காலகட்டம்தான் என்றாலும்கூட, காலநிலை அவசரம் என்ற இதைவிடப் பேராபத்திலிருந்து நாம் மீண்டெழ இதுவொரு பாடத்தை வழங்குமென்று ஆய்வாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவேளை, கொரோனாவை எதிர்கொள்ளத் தயாரானது போலவே, காலநிலை அவசரத்தை எதிர் கொள்ளவும் இதுபோல் நாம் தயாரானால் நேர்மறையான விளைவுகளைச் சந்திக்க முடியும். எதிர்காலத்தில் காத்திருக்கக்கூடிய நெருக்கடி களைச் சமாளிக்க நாம் தயாராக இருக்க, இந்தப் பாடம் உதவும்.

நாளொன்றுக்கு, 6700 மில்லியன் லிட்டர் கழிவுநீர் கங்கையில் கொட்டப்படுகிறது. தற்போது அதுவும் இல்லாததால், கங்கை பிழைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

சுத்தம்
சுத்தம்

உலகம் முழுவதுமே, கொரோனா வைரஸின் தாக்குதல் காரணமாகத் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வான், நீர் மற்றும் நிலவழிப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மட்டும் 25 சதவிகித கரிம வாயு வெளியீட்டை கடந்த நான்கே வாரங்களில் குறைத்துள்ளது கொரோனா. இந்தியாவிலும், காற்று மாசு குறைந்ததால் இமயமலையை 200 கிலோமீட்டர் தொலைவி லிருந்துகூடப் பார்க்கமுடிகிறது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ஜலந்தரிலுள்ள தன் வீட்டின் மாடியிலிருந்து இமயமலையின் தௌலதார் சிகரத்தைப் பார்க்க முடிவதாகப் பதிவு செய்துள்ளார். இந்தியாவின் 85 நகரங்களில் காற்றின் தரம் அதிகரித்துள்ளது. புது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களில் பி.எம்.2.5 என்ற நுண்துகள்களின் அளவு காற்றில் 71 சதவிகிதம் குறைந்துள்ளது. கந்தக டை ஆக்சைடு அளவு 79 சதவிகிதம் குறைந்துள்ளது. உலகளவில், அனல் மின் நிலையங்களின் நிலக்கரிப் பயன்பாடு 36 சதவிகிதம் குறைந்துள்ளது.

இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை இந்த நகரங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பார்த்துள்ளது இதுவே முதல்முறை. நைட்ரஜன் டை ஆக்சைடு அளவு மும்பை, பூனே, அகமதாபாத் ஆகிய நகரங்களில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருந்த அளவிலிருந்து 50 சதவிகிதம் குறைந்துள்ளது. அதிகமான சுவாசக் கோளாறுகள் மற்றும் காசநோயாளிகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதற்கு முக்கியக் காரணம் காற்று மாசுபாடு. அத்தகைய ஆபத்தைக் கொரோனா லாக்டௌன் வெகு எளிதில் சரிசெய்துவிட்டது.

கொரோனா பூமியின் சூழலியலை மீட்டெடுத்துக்கொண்டிருப்பது உண்மையா என்று சூழலியல் ஆய்வாளரான முனைவர் ப.அருண்குமாரிடம் பேசியபோது, “சூழலியல் சீரழிவு என்ற ஒரு ஆக்சிலேட்டரை நாம் மிதித்துக்கொண்டேயிருந்தோம். கொரோனா காரணமாகத் தற்காலிகமாக அதிலிருந்து கால் எடுத்துள்ளோம், அவ்வளவுதான். அழிவை நோக்கிய பாதையில் நாம் பயணித்துக் கொண்டிருந்ததன் வேகம் மட்டும்தான் குறைந்துள்ளது. பயணம் தடைப்படவில்லை. காற்றிலுள்ள நுண்துகள்களின் அளவு குறைந்துள்ளது. நாட்டின் ஜீவநதிகளான கங்கை மற்றும் யமுனையுடைய நீரின் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதற்குக் காரணம் அவற்றை மாசுபடுத்திக் கொண்டிருந்த தொழிற்சாலைகள் இயங்காமலிருப்பதே. இது தற்காலிக ஆசுவாசம்தான். சூழலியல் சட்டங்களும் இன்னபிற கட்டுமானங்களும் செய்ய முடியாதவற்றைக் கொரோனா பாதிப்பு செய்துகாட்டியுள்ளது.

இயற்கை தம்மைத்தாமே தகவமைத்துக் கொள்ளும் கருதுகோள் இதன்மூலம் நம் கண்முன்னே விரிகின்றது. காடழிப்பு மட்டுமன்றி பனிப்பாறை உருகுவதால் அதற்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக உறைந்திருக்கும் தொற்றுக் கிருமிகள் எதிர்காலத்தில் வெளிவரும் ஆபத்தும் உள்ளது. ஆகவே, எஞ்சியுள்ள இயற்கை வளங்களை மேலும் சிரத்தை எடுத்துப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கொரோனாத் தொற்றும் அதன் நீட்சியான ஊரடங்கும் நமக்கு உணர்த்தியுள்ளது” என்று கூறினார்.

சுத்தம்
சுத்தம்

இந்த முன்னேற்றம் மேலும் எதிர்காலத்தில் நீடிக்குமா என்று தெரிந்துகொள்ளப் பேசியபோது, “லாக்டௌன் காலகட்டம் சுற்றுச்சூழலுக்கு நல்ல முன்னேற்றத்தை வழங்கியுள்ளது. ஆனால், இந்த முன்னேற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு எதிர்காலத்தில் இல்லை. ஏனென்றால், எப்படியும் லாக்டௌன் முடிந்தவுடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி அனைத்தும் வேகமெடுக்கும். அதைக் கட்டுப்படுத்த முடியாது. அதுமட்டுமன்றி, விலங்குகளிடமிருந்து பரவுகின்ற ஸூனாட்டிக் நோய்கள் மனிதர்களிடம் இன்னும் அதிகமாகப் பரவும் என்றுதான் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதற்குக் காலநிலை மாற்றம்தான் முக்கியக் காரணம்” என்று கூறினார் கேரள மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைக் குழுவின் திட்ட இயக்குநராக இருக்கும் சூழலியல் ஆய்வாளர் பிரதீஷ்.

1940-களின்போது இருந்ததைவிட, 1990-களில் இருந்ததைவிட நாம் இப்போது எவ்வளவோ மாறியுள்ளோம். நாம் பலவற்றைச் சிந்திக்கத் தொடங்கியுள்ளோம். அப்போது நாம் செல்லும் பாதை சரியில்லை என்பதைப் பலரும் எச்சரித்தார் கள். ஆனால் அதை அரசுகள் புறக்கணித்தன, மக்கள் காது கொடுக்கவில்லை. இப்போது அப்படியில்லை. நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.

இந்த சுத்தம் கொரோனா தந்தது!

1970, ஏப்ரல் 22-ம் தேதியன்று முதல் சர்வதேசப் புவி தினத்தைக் கொண்டாடும்போது இருந்ததைவிட, 1973-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் அலக்நந்தா பள்ளத்தாக்கிலிருந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிப்கோ இயக்கத்திற்கான விதையை விதைத்தபோது இருந்ததைவிட, மனித வாழ்வியல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டுக்குமே உள்ளூர், தேசிய, சர்வதேச அரசியலில் உள்ள முக்கியத்துவம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் நமக்கொரு நல்ல வாய்ப்பைக் கொடுத்து, பூமியின் சூழலியல் சமநிலையைச் சரிசெய்வதற்கான வழியையும் கொரோனா காட்டியுள்ளது.

இயற்கையைக் காப்பதே நம்மையும் காத்துக் கொள்ளும் வழி என்றுணர்ந்து, இந்தப் பேரிடர்க் காலம் முடிந்த பின்னரும் செயல்பட்டால், அடுத்து வரவுள்ள பேராபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.