Published:Updated:

பிளாஸ்டிக்கின் கதை... விளைவு, பிரச்னை, தீர்வு! #MyVikatan

Representational image
Representational image

1988-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பங்களாதேஷ் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு நீரில் மூழ்கிவிட்டது. இதற்குக் காரணம் அந்நாட்டின் நீர் கால்வாய்களை பிளாஸ்டிக்குகள் அடைத்துக்கொண்டதுதான்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

மீத்தேன் (Methane) எடுக்க எதிர்ப்பு, ஹைட்ரோ கார்பன் (Hydrocarbon) எதிர்ப்புப் போராட்டம் போன்ற தலைப்புச் செய்திகளைப் படிக்கும்போது எனக்கு குழப்பமாக இருக்கும். ஹைட்ரோ கார்பன் என்பது ஹைட்ரஜனும் (Hydrogen) கார்பனும் (Carbon) உள்ள மூலக்கூறுகள் (Molecules). உலகில் உள்ள மிகச் சிறிய ஹைட்ரோ கார்பன் மீத்தேன்! எனவே, மீத்தேன் ஒரு ஹைட்ரோ கார்பன் என்பதை நினைவில் வைக்க வேண்டும். மீத்தேனைவிட கொஞ்சம் பெரிய புரொபேனும் (Propane) பியூட்டேனும் (Butane) எல்பிஜி (LPG) சிலிண்டர்களில் உள்ளன. அது மட்டுமல்ல, டீசல் பெட்ரோல் இவையெல்லாம் ஹைட்ரோ கார்பன்கள்தான்.

பாலித்தீனுமே ஹைட்ரோ கார்பன்தான். பாலிதீனை தடை செய்ய போராடுபவர்கள் டீசலையும் பெட்ரோலையும் தடை செய்ய சொல்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், எல்பிஜியை இலவசமாகக் கொடுத்ததை சாதனையாக அரசாங்கமே விளம்பரம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பின்புலத்தில் பார்த்தால், ஹைட்ரோ கார்பன்களில் ஒன்றான பாலிதீனை அரசாங்கம் தடை செய்திருப்பது ஆச்சர்யமாக இருக்கும். இதற்கு காரணம் இருக்கிறது. எல்லா ஹைட்ரோகார்பன்களாலும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது.

இதில் அதிகமாக மாசு ஏற்படுத்துவது பாலிதீனை உள்ளடக்கிய பிளாஸ்டிக்குகள். ஐக்கிய நாடுகள் அவை, 2018-ம் ஆண்டு ``ஒரு முறை பயன்படும் பிளாஸ்டிக்குகள்" [Single Use Plastics (SUP)] என்ற வார்த்தையை பிரயோகித்தது. அதிலிருந்து, SUP என்கிற வார்த்தை பிரபலமாகிவிட்டது. இந்தக் கட்டுரையில் SUP என்பதற்குப் பதிலாக பிளாஸ்டிக்குகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம்.

Representational image
Representational image

பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட வேண்டுமா. பிளாஸ்டிக்குகள் தடை செய்யப்பட்ட இடங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நிகழ்ந்தன? இந்த இரண்டு கேள்விகளுக்கான விடைகளைப் பார்க்கலாம்.

பிளாஸ்டிக் கழிவுகளில் சிகரெட் பட் (Cigarette but), பிளாஸ்டிக் பைகள் (Plastic Bags), பிளாஸ்டிக் போத்தல்கள் (Plastic Bottles), போத்தல்களின் மூடிகள் (Bottle Caps), உணவு கொள்கலன்கள் (Food Containers) ஆகியவை பிரதானமானவை. இவற்றில் அதிகமாக உபயோகிக்கப்படுபவை பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஸ்டைரஃபோம் கோப்பைகள் (Styrofoam Cups). பிளாஸ்டிக் பைகளில் உள்ள பிரச்னைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

காகித பைகளோடு ஒப்பிடும்போது பிளாஸ்டிக் பைகள் வலுவான, எடை குறைவான மற்றும் விலை குறைந்தவை. ஒரு காகித பை தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் மற்றும் மின்சாரத்தைவிட குறைவான தண்ணீர் மற்றும் மின்சாரத்தை பயன்படுத்தி ஒரு பிளாஸ்டிக் பை தயாரிக்க முடியும். இது பிளாஸ்டிக் பைகளில் உள்ள நன்மை. ஆனால், பிளாஸ்டிக் பைகள் எளிதாக அழிந்துபோகக்கூடியவை அல்ல. அவை அழிந்துபோக ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம் என்று கணிக்கிறார்கள். அப்படி சிதையும்போது சிறுதுகள்களாக மாறும் பிளாஸ்டிக்கை கடல் உயிரினங்கள் சாப்பிட்டுவிடுகின்றன. 2050-ம் ஆண்டுக்குள் 99% கடல் பறவைகள் பிளாஸ்டிக்கை சாப்பிட்டு பாதிப்படையும் என்று கணிக்கிறது ஒரு ஆராய்ச்சி. படிக்கும்போதே பயம் தரும் புள்ளிவிவரம் இது.

மனிதர்களுக்கு என்ன விதமான பாதிப்புகளை பிளாஸ்டிக் பைகள் ஏற்படுத்துகின்றன?

பிளாஸ்டிக்குகள் தண்ணீர் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால் பெரும் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. 1988-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் பங்களாதேஷ் நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு நீரில் மூழ்கிவிட்டது. இதற்குக் காரணம் அந்நாட்டின் நீர் கால்வாய்களை பிளாஸ்டிக்குகள் அடைத்துக் கொண்டதுதான். இது போன்ற காரணங்களால், பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்தோனேசிய நாட்டின் பாலியில் சில இளைஞர்கள் பிளாஸ்டிக்கை தடை செய்ய கையெழுத்து இயக்கம் நடத்தி ஒரு லட்சம் கையெழுத்து பெற்றனர். இந்த அழுத்தத்தின் காரணமாக பாலியின் கவர்னர் பிளாஸ்டிக்கை தடை செய்தார். இது போன்று தடை செய்யப்பட இடங்களில் பிளாஸ்டிக் கழிவு குறைந்திருக்கிறதா என்ற கேள்வி எழும்.

50% இடங்களில் என்ன நடந்தது என்ற தகவல் இல்லை. 20% இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. 30% இடங்களில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மிகச் சிறந்த மாற்றம் ஏற்பட்ட நாடுகளில் ஒன்று அயர்லாந்து. அயர்லாந்து நாட்டில் 1998-ம் ஆண்டு, ஒரு மனிதர் வருடத்துக்கு 328 பிளாஸ்டிக் பைகளை உபயோகித்துக்கொண்டிருந்தது தெரிய வந்தது. எனவே, அரசாங்கம் பிளாஸ்டிக் பைகளுக்கு `பிலாஸ்வரி' (PlasTax) என்ற வரியை விதித்தது. வரி விதித்த ஒரே ஆண்டில், ஒரு நபர் ஒரு வருடத்தில் உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளின் எண்ணிக்கை 21 ஆக குறைந்தது. ஆனால், இது போன்ற கட்டுப்பாடுகளை எல்லா நாடுகளும் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணம் பிளாஸ்டிக்குகளுக்குத் தடை விதிப்பதை தடை செய்தது! இதை பல மாகாணங்கள் பின்பற்ற ஆரம்பித்துவிட்டது.

Representational image
Representational image

பிளாஸ்டிக் தடை இல்லாமலேயே கழிவுகளை சிறப்பாக கையாளும் நாடுகளும் உண்டு. அதற்கு மிக சிறந்த உதாரணம் ஜப்பான். உலகில் மிக குறைவாக பிளாஸ்டிக் கழிவுகள் உள்ள நாடு ஜப்பான். பிளாஸ்டிக்கை சிறப்பாகத் திரட்டி மறுசுழற்சி செய்துவிடுகிறது. பிளாஸ்டிக்கை தவிர்ப்பது இயலாத காரியம், எனவே, மறுசுழற்சி செய்வதே சிறந்த முறை. இந்தியாவிலும் இது போன்று பால் பைகளை (Milk Pouches) மறுசுழற்சி செய்ய வேண்டும் என்று நம்முடைய புகழ்மிக்க விஞ்ஞானியான முனைவர் சிவராம் அறிவுறுத்தினார்.

"முடியாது, பாலை உற்பத்தி செய்வதுதான் எங்கள் வேலை. பால் பைகளைத் திரட்டி மறுசுழற்சி செய்வது உள்ளாட்சித்துறையின் வேலை. எங்கள் வேலை அதுவல்ல" என்று சொல்லிவிட்டார் பிரகாஷ் குத்வால். இவர் பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர். இதுதான் இந்தியாவில் உள்ள பிரச்னை. எல்லோரும் பொறுப்பை தட்டிக்கழிப்பார்கள். ஆனால், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மறுசுழற்சிக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொண்டனர். இது போன்ற பொறுப்புணர்வு உற்பத்தியாளர்களுக்கு வர வேண்டும்.

மக்கள், பிளாஸ்டிக்கை முறையாகக் கையாள வேண்டும். விற்பனையாளர்கள் சிந்தித்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உலகெங்கும் விற்பனையாளர்கள், பிளாஸ்டிக் பை கேட்கும் வாடிக்கையாளரிடம் பணம் வசூலிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில், சணல் அல்லது துணிப்பைக்கு பணம் வசூலிக்கிறார்கள். இது கொஞ்சம் வேடிக்கையானது. மக்கள் துணிப்பைகளைப் பயன்படுத்த வேண்டுமென்றால், அதை இலவசமாகத் தந்துவிட்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பணம் வசூலிக்க வேண்டும். ஆனால், நடப்பது தலைகீழாக இருக்கிறது. எல்லோரும் தங்கள் கடமையை உணர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம்தான் பிளாஸ்டிக் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.

பின் குறிப்பு 1: பிளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து மரங்களில் தொங்குகிறது. இதை அயர்லாந்து நாட்டினர், "சூனியக்காரியின் கால் சட்டை" என்றும் தென்னாப்பிரிக்க நாட்டினர் "புதிய தேசிய மலர்" என்றும் அழைக்கின்றனர்.

பின் குறிப்பு 2: பாலித்தீனை உருவாக்கக்கூடிய முறையை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் சீக்ளர் (Karl Ziegler) மற்றும் இத்தாலியைச் சேர்ந்த குய்லியோ நாட்டா (Giulio Natta). இருவருக்கும் 1963-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனம் இவர்கள் கண்டுபிடித்த வினையூக்கியை வைத்து பாலித்தீன் தயாரிக்கிறது.

கார்ல் சீக்ளர் - குய்லியோ நாட்டா
கார்ல் சீக்ளர் - குய்லியோ நாட்டா

பின் குறிப்பு 3: பாலிமர்களைக் கண்டுபிடித்த விஞ்ஞானி ஹெர்மன் ஸ்டாடிங்கர். இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவருக்கு 1953-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஸ்டாடிங்கரின் ``ஊபர் பாலிமெரைசேஸன்" என்கிற ஆராய்ச்சிக் கட்டுரை வெளிவந்தது 1920 -ம் ஆண்டு. இந்தக் கட்டுரை வெளிவந்து நூறு ஆண்டுகள் ஆவதை ஒட்டிய கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஐஐடி குவஹாத்தியில் டிசம்பர் மாதம் சர்வதேச கருத்தரங்கு நடத்தப்படுகிறது. அந்த கருத்தரங்கில் நானும் உரை நிகழ்த்துகிறேன்.

- முனைவர்.கோதண்டம் கிருஷ்ணமூர்த்தி, ஆராய்ச்சியாளர், சி.எஸ்.ஐ.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு