Published:Updated:

“அழுதுகிட்டு ஒக்காந்தா எம்புள்ளைகளுக்கு யார் சோறு போடறது'' வாழ்ந்து காட்டும் நீலா !

திரைகடலோடியும் - 9

“வருசத்துல எல்லா சீசன்லயும் வியாபாரம் பண்ணுவோம். பங்குனி - சித்திர ரெண்டு மாசத்திலதாம் மீன் வராது. தொண்டான், நெத்திலி, கலச, சூடப்பொடி எல்லா மாதிரி மீனும் வரும். எல்லா ஊர்லியும் கொள்முதல் பண்ணுவாங்க. அந்த ரெண்டு மாசம்தாம் தொழில் இல்லாம மக்க கஷ்டப்பட்டுப் போகும்| திரைகடலோடியும் - 9

“அழுதுகிட்டு ஒக்காந்தா எம்புள்ளைகளுக்கு யார் சோறு போடறது'' வாழ்ந்து காட்டும் நீலா !

“வருசத்துல எல்லா சீசன்லயும் வியாபாரம் பண்ணுவோம். பங்குனி - சித்திர ரெண்டு மாசத்திலதாம் மீன் வராது. தொண்டான், நெத்திலி, கலச, சூடப்பொடி எல்லா மாதிரி மீனும் வரும். எல்லா ஊர்லியும் கொள்முதல் பண்ணுவாங்க. அந்த ரெண்டு மாசம்தாம் தொழில் இல்லாம மக்க கஷ்டப்பட்டுப் போகும்| திரைகடலோடியும் - 9

Published:Updated:
திரைகடலோடியும் - 9

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கிராமத்திலிருந்து நேர்கிழக்காக முன்று கிலோமீட்டர் சாலைப் பயணம் செய்து கடற்கரைக்கு அழைத்துச் சென்றார் இந்தியன் கணேசன். என்னுடன் வந்திருந்த காணொலிப் பதிவாளருக்கு மற்றொரு இருசக்கர வாகனம் ஏற்பாடு செய்திருந்தார். கடலுக்குள்ளே அம்புமுனை போலக் கூராய்த் துருத்திக்கொண்டு நிற்கும் அந்த நிலப்பரப்பு அரிச்சல்முனையை (தனுஷ்கோடி) நினைவுபடுத்துகிறது.

கோடியக்கரை, கோடிமுனை என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் கடலின் ஆழம் மிகக்குறைவு. ஒரு கிலோ மீட்டர் போனால் இடுப்பளவு ஆழம் வரும், கடல் சீற்ற காலத்தில் சாலைகளை கடல் முடிக்கொள்ளும்.

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

ஜெகதாப்பட்டினம் மின்பிடி துறைமுகத்தில் எங்களோடு உரையாடிக்கொண்டிருந்த ஏழாச்சி, மூச்சை இழுத்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் கதையைத் தொடர்ந்தார்..

“எனக்கு அப்பா அம்மா கெடயாது, அண்ணன் தங்கச்சி கெடயாது. எல்லாரும் மவுத்தாப் போவுட்டாவோ. நான் ஒண்டிதான். மகளுக நாலுப்பேரு இருக்கறாளுகளே... நம்மகிட்ட பொருளாதாரம் இருந்தாக்கா பாசமா இருப்பாகோ. கேப்பாகோ, குடுத்தாத்தான் நான் நல்லவள்னு சொல்வாகோ. நானே அன்னன்னாடு சம்பாரிச்சுத்தான் சாப்புடுறேன், அவுகளுக்கு எங்கேர்ந்து குடுப்பேன்? நான் என்னா செய்ய முடியும்?

கஜாப் புயலெடுத்தப்ப ஒரு மருமகன் இறந்து போனாரு. ஐயப்பங் கோயிலுக்கு மால போட்ருந்தாரு கொல்லையிலிருந்து வீட்டுக்கூடி வந்திருக்கு கரண்டு... கரண்டு தேய்ஞ்சிருந்திருக்கு; பொயல்ல மரம் விழுந்ததுல அத்துக் கெடந்தது இவங்களுக்குத் தெரியில்ல. காலைல பல்லு வௌக்கறதுக்குக் கொல்லையிலே போனவுங்கோ... சீட்டுப் போட்டிருந்ததுக்கு மேலயிருந்த கம்பியப் புடிச்சப்போ தூக்கியெறிஞ்சிடுச்சி. 36 வயசி! எம்பொண்ணுக்கு 33 வயசு! பன்னண்டாவது வரைக்கும் படிச்ச பொண்ணு. வாரிசு சட்டிபிக்கேட்டெல்லாம் குடுத்தாச்சி. ஒம்போது மாசம் ஆவுது, இன்னி வரைக்கும் எதுவும் கெடய்க்கல, நாங்க கேட்டுகிட்டுத்தான் இருக்கிறோம். ஒரு பொண்ணு பெரியபுள்ளயாயிடிச்சி, பையன் பத்து வயசு. அவ குடும்பத்த ஓட்டணுமே. இப்ப பாத்தீங்கள்ல அவள, இந்த சங்காய யாவாரம் பண்ணித்தாம் பொழப்ப ஓட்டறா. அவளுக்கும் நான் ஏதாவது செய்யணும்...”

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

தன் காலத்தைப் போல அல்லாமல் இப்போது ஊரில் நிறையப் பெண்கள் +2 முதல் ஒன்று இரண்டு, மூன்று டிகிரி வரை படித்திருப்பதாய்ச் சொல்கிறார் ஏழாச்சி. பேரிடர்களிலும் கடலிலும் இது போல கணவர்களை இழந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு என்கிற அளவில் அரசாங்கம் கருணை காட்டவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை துயர்க்கடலில் மூழ்கிப் போகும் என்பதற்குத் தனது மருமகளை உதாரணம் காட்டும் ஏழாச்சியின் கவலை நியாயமனதே.

மீன்பிடி துறைமுகத்தின் மீன் உலர்த்துத் தளத்தில் ஆறேழு பெண்கள் உலர்த்திய மீன்களை வகைப்படுத்தி சந்தைக்கு அனுப்புவதற்கேற்றவாறு கூடைகளில் சேகரித்துக் கொண்டிருந்தனர். ஏழாச்சியிடம் உரையாடுகையில், ‘தொழிலில் ஈடுபட்டிருக்கும் விதவைப் பெண்களைச் சந்திக்கவேண்டும்’ என்றபோது ஏழாச்சி என்னை இந்தப் பெண்களிடம் அழைத்து வந்தார். எட்டுப் பத்துப் பெண்களுக்கு வேலை கொடுத்து, சில வருடங்களாகக் கருவாட்டு வியாபாரத்தை நடத்திவரும் நீலா என்னும் பெண்மணியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அருகில் கருவாடு சேகரித்துக் கொண்டிருந்த பஞ்சுவிடம் (38, ஜெகதாப்பட்டினம்) பேச்சுக் கொடுத்தேன்.

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

“வருசத்துல எல்லா சீசன்லயும் வியாபாரம் பண்ணுவோம். பங்குனி - சித்திர ரெண்டு மாசத்திலதாம் மீன் வராது. தொண்டான், நெத்திலி, கலச, சூடப்பொடி எல்லா மாதிரி மீனும் வரும். எல்லா ஊர்லியும் கொள்முதல் பண்ணுவாங்க. அந்த ரெண்டு மாசம்தாம் தொழில் இல்லாம மக்க கஷ்டப்பட்டுப் போகும்... இந்த யாவாரத்தில ஒரு பொம்பள மொதல் போட்டு செய்யறாக, நாங்க கூலிவேல செய்யறம்.''

பேசியவாறே பஞ்சு நீலாவைக் கை காட்டினார். நீலாவிடம் பேசத் தொடங்கினேன். வாழ்க்கையில் நேர்ந்த இழப்புகளின் துயரச்சுமை ஒருவகையான மௌனத்தை அவர்மீது சுமத்தியிருக்கிறது. ’எங்கதெயப் பேசினா இன்னைக் முச்சூடும் பேசிட்டே இருக்கலாம், வேல நடக்காது' என்றார் ஆர்வமில்லாமல். பொழுது சாயும் நேரத்தைக் கணக்கிட்டு கருவாட்டைத் தரவாரியாக வெவ்வேறு சந்தைகளுக்குத் தயார்படுத்தும் பரபரப்பிலிருந்தார் நீலா. இடையிடையே மற்ற பெண்களுக்குக் குறிப்புகள் கொடுத்துக் கொண்டே ஒரு பெரிய கூடையில் முரல் கருவாட்டை அழகாய் அட்டி வைத்து அடுக்கிக் கொண்டிருந்தார். முரல், ஓலைக் கணவாய், நாய்க்கண்டம், இப்படி வகைவகையான மீன்கள் வெவ்வேறு தார்ப்பாய்களில் காய்ந்துகொண்டிருந்தன.

வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் வெயிலுக்கு மிகவும் பழகியிருந்தனர் என்பதை அவர்களின் தோலின் நிறமும் மினுமினுப்பும் அறிக்கையிட்டுக் கொண்டிருந்து. வெய்யில் அவர்களின் வாழ்வின் ஓர் அங்கம்; உப்பளத் தொழிலைப் போலக் கருவாட்டுத் தொழிலிலும் வெய்யில்தான் மூல ஆதாரம். அந்த மீன் உலர்த்தும் தளத்தில் கருவாட்டோடு அவர்களது வாழ்க்கையையும் வெய்யில் பாரபட்சமின்றிக் காய்ந்து கொண்டிருந்தது. நானும் நவீனும் காமிராவுடன் பொறுமையாய்க் காத்திருந்தோம். சிறிது நேரத்துக்குப் பிறகு நீலா பேசுவதற்குத் தன்னை ஒருவாறு தயார்ப்படுத்திக் கொண்டு எங்களை நோக்கித் திரும்பினார்.

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

“ஊர்லயிருந்து (நாகப்பட்டினம்) போட் எடுத்துட்டு வந்தோம். ஒரு போட் கட்டினோம். அந்த ரெண்டுல ஒரு போட்ட வித்தோம். அப்புறம் சுனாமி வந்திரிச்சி. போட் வேல பாக்கப் பணமில்ல, அதனால அதக் குடுத்திட்டோம். எனக்கு அஞ்சு பிள்ளைக. அவர் வேலைக்குப் போகமாட்டாரு. பொழைப்புக்கு வேற வழியில்ல, கடைசில கருவாட்டு யாவாரத்துக்கு வந்தேன்…”

ஒரு பெருமூச்சோடு நிறுத்திய நீலா, நேர்ப் பார்வையைத் தவிர்த்தவாறு சிறிதுநேர இடைவெளிக்குப் பின் மீண்டும் தொடர்ந்தார்.

“ரெண்டு மூணு வருசத்துல அவரு உடம்புக்கு நல்லாயில்லாம போச்சு. நாலு லச்ச ரூபா செலவு பண்ணினோம். ஒரு நாள் திடீர்ணு எறந்துட்டாரு. அவரு போய்ச்சேந்து பத்து வருசமாச்சு. யாவாரம் பாத்து ஒரு பொண்ணக் கல்யாணம் பண்ணிக் குடுத்திருக்கேன். மூணு புள்ளைங்க படிச்சிட்டிருக்கு… மகன் ஒருத்தன் பிஎஸ்ஸி படிக்கிறான், ஒருத்தன் அய்ட்டி முடிச்சான்; பெரிய பையன் இப்பத்தான் வெளிநாட்டுல போயிருக்கான். சம்பளம் ரொம்பக் கம்மியாத்தான் போட்டுக் குடுக்குறான்- மாசம் பதினேழாயிரம்...”

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

நீலாவுக்கு விதவை பென்ஷன் கிடைக்கிறதா?

“மாசம் ஆயிரம் ரூபாய் கெடைக்குது... புள்ளைங்க படிப்புக்கு, வேலைக்கு, வேறெயெந்த சலுகையும் கெடைக்கல. ஒரு பொம்பளப் புள்ளதாம் பன்னண்டாவது; மத்தவங்க எல்லாம் நாலு வருஷம் அஞ்சு வருஷம் காலேஜு படிச்சாங்க. யாருக்கும் எந்த ஒதவியும் கெடய்க்கல. எங்கெயெல்லாமோ ஓடிப் பாத்தம் ஆடிப் பாத்தம் வேலைக்கி, கெடய்க்கவேயில்ல. பெரிய பையன்லாம் நொம்பக் கஷ்டப்பட்டு, இப்போ சீனாவுக்குப் போயிருக்கான். பல்லெடுக்கற மிசின் தயார் பண்ற வேல...”

நீலா நடத்திவரும் கருவாட்டு வியாபாரத்தைப் பற்றி…

“கடலூர், மாயவரம், திருவாரூர்- மூணு சந்தைக்கும் போவோம். நானே சரக்க எடுத்திட்டுப் போவேன். இங்க பத்துப்பேர வச்சி வேல பாக்கிறேன். முன்ன கருவாட்டுக்கு மீனெல்லாம் மலிவாராங் கெடச்சரு, இப்போ பாடு இல்லாம- போட்டுங்களுக்கெல்லாம் பாடு இப்போ கம்மி- எல்லாமே வெலதாம். கெடய்க்கிறத வச்சி சமாளிச்சிட்டிருக்கோம்.”

இங்கே கருவாட்டு வேலை செய்பவர்களுக்கு எவ்வளவு கூலி கிடைக்கிறது?

“நாள் கூலிதான், நானூறு ரூபா ஒரு நாளைக்கி. ஒன்பது மணிக்கி வருவாங்க, ஆறுமணிக்குப் போவாங்க, ஏழு மணிக்கும் போவாங்க.”

வியாபாரத்தின் நெளிவு சுளிவுகளை இத்தனை வருட அனுபவத்தில் நன்றாய்க் கற்று வைத்திருக்கிறார் நீலா.

திரைகடலோடியும்
திரைகடலோடியும்

“மூணு கடைல சரக்கு எடுக்கிறதா இருந்தா, ஒருவாரம் கெடய்க்கும், ஒருவாரம் நட்டம் வரும். அந்த நட்டத்தப் பாக்கார யாவாரம் பாத்துக்கிட்டிருக்கிறோம். இன்னைக்கிப் பத்து ரூபா கெடய்க்கிது, நாளய்க்கி இல்லைன்ன ஓடன அந்த யாவாரத்த உடக்கூடாது. அதச் செய்து நாளய்க்கிச் சாம்பாரிச்சுர்லாம்கிற நம்பிக்கையிலதாம் யாவாரம் நடக்குது... இத விட்டுட்டா வேற வழியே இல்ல. இது இல்லேன்னா எதையுமே சமாளிக்க முடியாது. கல்யாணம் பண்ணிக்குடுத்த பொண்ணுக்கு அதப் பாக்கணும் இதப் பாக்கணும், புள்ளைகளைப் படிக்க வைக்கணும்- எல்லாமே செலவுதான். பத்து ரூபா குடுத்து ஒதவறதுக்கு ஆளில்ல. இந்த நெலமையிலதாம் இந்த யாவாரத்த நாம் பாத்திட்டிருக்கோம்'' என்றார்.