Published:Updated:

நாகலாந்தில் கொரோனாவை வென்ற தன்னிறைவு பசுமை கிராமம் - ஒன்றிணைந்து சாதித்த மக்கள்!

Corona
Corona ( Pixabay )

ஊரடங்கு தொடங்கிய பின் கிராமத்தின் வருமானம்தான் தடைபட்டதே தவிர அங்கு உணவுப் பற்றாக்குறை என்பது அறவே ஏற்படவில்லை.

உலகத்தையே ஆட்டிப் படைத்துவரும் கொரோனா வைரஸின் பாதிப்பு தற்போதுதான் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

இவ்வைரஸ் தொற்று பரவாமல் இருக்க கடந்த இரண்டு மாதங்களாக அமலில் இருந்த பொது முடக்கம் இன்னும் சில நாட்களில் நிறைவடைய வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழப்புகள் ஒருபுறம் இருக்க இந்த பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி தான் மிக பெரிய அச்சுறுத்தலாக தற்போது உருவெடுத்துள்ளது. கடந்த 60 நாட்களுக்கும் மேலாக நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே அடைந்து கிடந்ததால் பல்வேறு துறைகளை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டு நாட்டின் அனைத்து துறை உற்பத்தியும் அடியோடு நின்றுபோய் மக்களிடையே இருந்த பணப்புழக்கம் வெகுவாக குறைந்தது. இதன் பாதிப்பை குறைக்க பல்வேறு மாநில அரசுகள் மிகுந்த எச்சரிக்கையோடு தளர்வுகளை தற்போது அறிவித்து வருகின்றன.

Lockdown in tamilnadu
Lockdown in tamilnadu

கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அரசு என்னதான் முயற்சிகள் மேற்கொண்டாலும் அவ்வவைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பதே ஒரு நிரந்தர தீர்வாகும். எனவே அதுவரை கொரோனா பாதிப்பு ஏற்படாமல் ஒரு எச்சரிக்கை மிகுந்த நடைமுறை வாழ்கையை பழகிக்கொள்வதே சிறந்த வழி. இந்நிலையில் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்த கிராமம் ஒன்று கொரோனா ஊரடங்கு பாதிப்புகளை மீறி தற்போது தன்னிறைவு பெற்றுள்ளது.

நாகலாந்து மாநிலத்தை சேர்ந்த கொநோமா என்ற அந்த கிராமம் அங்கு அமைந்துள்ள வனவிலங்கு காப்பகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே இருக்கிறது. 1998ம் ஆண்டு திறக்கப்பட்ட கொநோமா இயற்கை பாதுகாப்பு சரணாலயம் அதன் இயற்கை வளத்தால் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்தது. மேலும் 2005ம் ஆண்டு கொநோமா கிராமம் இந்தியாவின் முதல் Green village ஆக அறிவிக்கப்பட்டது. இதனால் மியான்மர் எல்லையில் அமைந்திருக்கும் அந்த கிராமத்திற்கு சென்ற ஆண்டு மட்டும் 4,000 சுற்றுலா பயணிகள் வந்து போயினர். இதில் ஐந்தில் ஒரு பங்கு வெளிநாட்டினர் ஆவர்.

மார்ச் 25ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கை அரசு அறிவித்தபோது நாட்டின் மற்ற பகுதிகளைப் போல சுற்றுலா துறையை மட்டுமே நம்பி இருந்த கொநோமா கிராமமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் மார்ச் ஏப்ரல் மாதங்கள்தான் அக்காப்பகத்தில் பறவைகளை கண்டுகழிக்க உகந்த பருவம் என்பதால் அவ்வூர் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

கொநோமா
கொநோமா
prayash.giria | Instagram

ஊரடங்கு காலத்தில் காப்பகத்தின் விலங்குள் வேட்டையாடப்படலாம் என்ற மற்றொரு அச்சமும் அப்போது எழுந்தது. ஆனால் இது குறித்து அக்காப்பகத்தின் தலைவர் மேயாஸி (Meyase) கூறுகையில், "பொதுவெளியில் மக்களின் நடமாட்டம் இல்லாதவரையில் வனவிலங்கு வேட்டை குறித்த எந்த ஒரு அச்சமும் எங்களுக்கு இல்லை, அப்படி சட்ட விரோதமாக வேட்டையாடுபவர்கள் பிடிபட்டால் இருபதாயிரம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்” என்கிறார். மேலும் இவர் வேட்டைகாரர்களுக்கு எதிராக போராடி வரும் கொநோமா கிராம மக்களின் வரலாறு மிக நீண்டது என்கிறார்.

சுமார் 700 ஆண்டுகள் பழைமையான கொநோமா கிராம மக்கள் அனைவரும் அங்கமி இனத்தை சேர்ந்தவர்கள். பல நூற்றாண்டுகளாக காட்டில் வாழ்ந்து வந்த இவர்களுக்கு வேட்டையாடுதல் என்பது ஒரு புனிதமான கலாச்சார நடைமுறையாகும். ஆனால் 90களின் தொடக்கத்தில் வனவிலங்குகள் அதிக அளவில் வேட்டையாடுவதை கருத்தில் கொண்ட ஊர் பெரியவர்கள் அக்காட்டை பாதுகாப்பது குறித்த பிரசாரத்தை தொடங்கினர். அதன் பயனாக காப்பகம் தொடங்கப்பட்டதும் வேட்டையாடுதல் முழுமையாக தடை செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்டையாடுதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டு விலங்குகள் மிகவும் பாதுகாக்கபட்டதால் அவற்றின் எண்ணிக்கை உயர்ந்து விவசாய நிலங்களுக்கு அதிகப்படியான சேதங்களை விளைவிப்பது என்ற மற்றொரு பிரச்னையும் எழுந்தது. இதனைத் தடுக்க பல நிபந்தனைகளுக்கு உட்பட்ட வேட்டையை அரசு அவ்வபோது அறிவித்தது.

கொநோமா கிராம ஆண்கள் தடையை மீறி வேட்டைக்கு செல்வதைத் தவிர்க்க அவர்களுக்கு வன வார்டன்களாக பணி அமர்த்தப்பட்டு சம்பளம் அளிக்கப்பட்டது. மேலும் பழம், காய்கறி பறிக்க காட்டில் நுழையும் பெண்களுக்கு நர்சரி அமைக்க அரசு வழி செய்தது.

இங்கு, முதன்முதலில் 2006-ல் பயணிகள் விடுதி ஆரம்பித்த பின்தான் சுற்றுலா பயணிகளின் வரவு தொடங்கியது. தற்போது அக்கிராமத்தில் 12 விடுதிகள் மற்றும் சுற்றுலா செல்வோருக்கு வழிகாட்டிகளாக 20க்கும் மேற்பட்டோர் பணி செய்கிறார்கள். 600 குடும்பங்கள் வசிக்கும் அக்கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வரை முழுக்க முழுக்க சுற்றுலாத் துறையை மட்டுமே நம்பி வாழ்கின்றனர்.

ஊரடங்கு தொடங்கிய பின் கிராமத்தின் வருமானம்தான் தடைபட்டதே தவிர, அங்கு உணவு பற்றாக்குறை என்பது அறவே ஏற்படவில்லை. அதற்கு முக்கிய காரணம் கொநோமாவின் தன்னிறைவான உள்கட்டமைப்பு வசதி மற்றும் அங்கு நடந்து வந்த வேளாண்மை தொழிலும் ஆகும்.

Khonoma
Khonoma
Twitter

மலைகளின் சரிவுகளில் பயிரிடப்பட்டு, மலை உச்சியில் இருந்து வரும் சத்தான தண்ணீரால் சுமார் 20 நெல் வகைகளை வருடந்தோறும் அறுவடை செய்கிறார்கள் அவ்வூர் விவசாயிகள். மேலும் தினை, சோளம் ஆகிய தானியங்களும் பயிரிடப்படுவதால் ஒரு வருடம் வரை கால்நடைகளுக்கு அக்கிராமவாசிகளால் உணவளிக்க முடியும் என்கிறார்கள். இது மட்டுமின்றி பூசணி, கேரட், முட்டைகோஸ், கடுகு, இஞ்சி, மிளகு ஆகிய செடிகள் அங்கு வீட்டுக்கு வீடு வளர்க்கப்படுகிறது. கொநோமாவின் பாதுகாப்பு முயற்சிகளை அம்மாநிலத்தின் பல கிராமங்கள் பின்பற்ற தொடங்கின. இன்று நாகலாந்து மாநிலத்தில் 700 க்கும் மேற்பட்ட இதுபோன்ற பாதுகாப்பு பகுதிகள் உள்ளன.

வீட்டுக்கு வீடு காய்கறி! - ஒரு கிராம நலச் சங்கத்தின் சக்சஸ் ஸ்டோரி #MyVikatan

தற்போது நிகழும் பேரிடர் காலத்தை மிக எளிதாக எதிர்கொண்ட கொநோமா கிராமம் இந்தியாவின் மற்ற அனைத்து கிராமங்களுக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது. கொநோமாவின் தன்னிறைவு என்பது அது அமைத்துள்ள நிலப்பகுதி, பாசன வசதி ஆகியவற்றை பொருத்திருந்தாலும் இந்தியாவின் பல்வேறு நில அமைப்புகளில் அமைத்திருக்கும் கிராமங்கள் அதற்கேற்றவாறு நடவடிக்கை முயற்சிகளை தொடங்கினால் எதிர்கால தலைமுறையினர் மிகுந்த பயனடைவர்.

அப்படி நிகழ்ந்தால் பேரிடர் காலங்களில் மட்டுமல்லாது எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்களை மட்டுமே பொது மக்கள் நம்பி வாழும் நிலை என்பது நிச்சயம் மாறும்.

அடுத்த கட்டுரைக்கு