Published:Updated:

``ஒரு வாரத்தில் 1 கோடி செலவு செய்யச் சொல்கிறார் கலெக்டர்!” கொதிக்கும் தேனி காளவாசல் உரிமையாளர்கள்!

செங்கல் காளவாசல்
செங்கல் காளவாசல்

மவுசு குறையாத பெரியகுளம் பகுதி செங்கல் காளவாசலுக்குத் தற்போது நெருக்கடி கொடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அது பற்றி விசாரிக்க நேரடியாக பெரியகுளம் பகுதி செங்கல் காளவாசல்களுக்குச் சென்றோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம், சரத்துப்பட்டி, கள்ளிப்பட்டி, தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 64 செங்கல் காளவாசல்கள் இயங்கிவருகின்றன. இப்பகுதி செங்கலுக்குத் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. காரணம், பெரியகுளம் பகுதியில் உள்ள நீர்நிலைகளின் மண், கெட்டித்தன்மை வாய்ந்தது மட்டுமல்லாமல், அவற்றைச் சூளையில் வைத்து சுட்டு எடுக்கும் போது உறுத்தித்தன்மை அதிகமாகவும் இருக்கும்.

செங்கல்
செங்கல்
வீட்டுக்குள்ளிருக்கும் காற்று மாசு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? #ExpertOpinion

இன்றளவும் மவுசு குறையாத பெரியகுளம் பகுதி செங்கல் காளவாசல் செங்கலுக்குத் தற்போது நெருக்கடி கொடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம். அது பற்றி விசாரிக்க நேரடியாக பெரியகுளம் பகுதி செங்கல் காளவாசல்களுக்குச் சென்றோம்.

நோட்டீஸ் கொடுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்:

செங்கல் காளவாசல்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெறவில்லை எனக் கூறி, அவற்றினை மூட வலியுறுத்தியுள்ளது மாவட்ட நிர்வாகம். இரண்டு மாதத்திற்கு முன்னர் லேசாக ஆரம்பித்த இந்த விவகாரம் தற்போது சூடுபிடுக்கத் தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில், காளவாசலுக்கு வழங்கப்பட்டு வந்த மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால், செங்கல் காளவாசலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்த சுமார் 5 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல் காளவாசல்
செங்கல் காளவாசல்

வாகன ஓட்டிகளுக்குப் பிரச்னை 

லெட்சுமிபுரம், சரத்துப்பட்டி மண்பாண்டம் மற்றும் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் செயலாளர் சரவணக்குமாரிடம் பேசினோம்,

"மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்கள். அதில், `காற்று மாசுக்கட்டுப்பாடு தடுப்புச் சட்டம் 1981-ன் படி, செங்கல் காளவாசலுக்கு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவு ஆணை பெற்றிருக்க வேண்டும். மேலும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் 1064/2009-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு படி 1996-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி, காற்று மாசு ஏற்படுத்தாத வகையில், செங்கல் காளவாசலில் 22 மீட்டர் உயரத்திற்கு புகைக்கூண்டு அமைக்க வேண்டும். எனவே, புகைக்கூண்டு அமைத்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும் இல்லையேல் காளவாசல் மூடப்படும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்கள். அதைப் பார்த்து எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதிகாரிகள் சிலரிடம் விவரம் கேட்ட போது, ’தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிப்பவர்கள் செங்கல் காளவாசல்களின் புகையால் பாதிக்கப்படுகிறார்கள். இது சம்பந்தமாக நிறைய புகார்கள் வந்தன. அதனால்தான் நோட்டீஸ் அனுப்பப்பட்டது’ என்றார்கள். வாகனங்கள் குறைவாகச் செல்லக்கூடிய நள்ளிரவு 2 மணிக்கு மேல்தான் எப்போதும் அடுப்பு எரியும். 1 மணி நேரம் மட்டுமே புகை வரும். அதிலும், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படும் வகையில் அதிக புகை இருக்காது. புகையால் விபத்துகள் ஏதும் இதுவரை நடந்ததில்லை. அப்படி இருக்கும் போது ஏன் இந்த நோட்டீஸ் எனக் குழப்பமாக இருந்தது.

சரவணக்குமார்
சரவணக்குமார்

மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்த சில நாள்களிலேயே மாவட்டக் கனிமவளத் துறையிலிருந்து ஆட்கள் வந்தார்கள். `நீங்கள் வைத்திருக்கும் மண்ணிற்கு முறையான ஆவணங்கள் வைத்திருக்கிறீர்களா?’ எனக் கேட்டார்கள். `இது மூன்று வருடத்திற்கு முன்னர் வாங்கிய மண். அதற்கான ஆதாரம் தற்போது இல்லை’ எனக் கூறினோம். உடனே, மண் எவ்வளவு உள்ளது எனக் கணக்கிட்டு, யூனிட்டிற்கு ஒரு தொகை வைத்து 75 ஆயிரம் முதல் 3 லட்சம் வரை ஒவ்வொரு காளவாசலுக்கும் அபராதம் விதித்தார்கள். மண் விலையை விட ஐந்துமடங்கு அபராதத் தொகை அது.

தொடர்ந்து, மின்சார வாரியத்திலிருந்து ஆட்கள் வந்தார்கள். `காளவாசல் நடத்த மாசுக் கட்டுப்பாட்டுவாரியத்தின் அனுமதி வைத்திருக்கிறீர்களா?’ எனக் கேட்டார்கள். இல்லை என்றோம். உடனே, மின்சாரத்தைத் துண்டித்தார்கள். அடுத்தடுத்து இவையெல்லாம் நடந்தன. ‘நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். மாசுக்கட்டுப்பாட்டு அனுமதி எங்களிடம் இல்லை. புகைக்கூண்டு வைத்தால்தான் அனுமதி கிடைக்கும். அதை அமைக்க சில லட்சங்கள் செலவாகும். அதற்குக் கால அவகாசம் வேண்டும். அதைக் கொடுங்கள்’ என மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டோம். ‘உடனே மூடிவிடுங்கள்’ எனக் கூறிவிட்டார். எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. கொஞ்ச காலம் அவகாசம் கொடுத்தால் பிழைத்துக்கொள்வோம்” என வேதனையோடு கூறினார்.

கலங்கவைக்கும் காற்று மாசு!

"கட்டுமானத்துறை வளர்ச்சி இல்லாததால், செங்கல் உற்பத்தியில் பெரிய லாபம் இல்லை. மேலும், மண் விலை ஒரு லோடு ரூ.7 ஆயிரம். ஆனால், ஒரு செங்கல் ரூ.5 க்குதான் விற்பனை ஆகிறது. ஹாலோபிளாக், சிமென்ட் கற்கள் என நாட்டுச் செங்கலுக்குப் போட்டியாக நிறைய வந்துவிட்டன. இதில், இடத்திற்கான வாடகை, தொழிலாளர்கள் கூலி, கனிமவளத்துறையின் அனுமதி என நிறைய செலவு உள்ளது. இவ்வளவு பிரச்னைக்கு மத்தியில், பாரம்பர்யமான தொழிலை விட்டுவிடக்கூடாது என நினைத்துதான், கடன் வாங்கி கூட இந்தத் தொழிலை நடத்திக்கொண்டிருக்கிறோம்.

மூன்று நான்கு வருடத்திற்கு முன்னர் வாங்கிய மண் இது. இதைக் காலி செய்துவிட்டு, நாங்களே காளவாசலை மூடலாம்னுதான் இருந்தோம். அதற்குள், மாவட்ட நிர்வாகம் மூடவைக்கிறது. ’மூன்று மாதம் அவகாசம் கொடுங்கள். இருக்கும் மண்ணை செங்கல் அறுத்துவிட்டு, நாங்களே போய்விடுகிறோம்’ எனக் கேட்டுப்பார்த்தோம். புகைக்கூண்டு அமைத்தால்தான் இயங்க விடுவோம் என்கிறார்கள். சேம்பர் போல செங்கல் உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு ரூ.1 கோடி வரை செலவாகும்.

மணிகண்டன்
மணிகண்டன்

அவ்வளவு பணத்திற்கு நாங்கள் எங்கே செல்வது. சிறு தொழில் என்றுதான் இதைப் பதிவு செய்திருக்கிறது அரசு. சிறுதொழிலை நசுக்கும் வேலை இது! நோட்டீஸ் கொடுத்த ஒரு வாரத்தில் கரன்ட் கட், இருக்கும் மண்ணுக்கு அபராதம் என வேகம் காட்டும் கலெக்டர், ஒரு வாரத்தில் ஒரு கோடி செலவு செய்யச் சொல்கிறார்” என்று வேதனையோடு கொதித்தார் மணிகண்டன்.

காளவாசல் ஒன்றில் வேலை செய்யும் காமேஸ்வரியிடம் பேசிய போது, "எங்களுக்கு செங்கல் அறுப்பதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. வெளி ஊர்களிலிருந்து பலரும், காளவாசலில் தங்கி வேலை செய்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அருகில் இருக்கும் பள்ளியில் படித்துக்கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு காளவாசலிலும் குறைந்தது 100 பேர் வேலை செய்வார்கள். கரன்ட் இல்லாததால், அவர்களால் இங்கே தங்க முடியவில்லை. இந்தத் தொழில் நடக்குமா, நடக்காதா... வேற என்ன வேலைக்குப் போவது என யோசித்துக்கொண்டிருக்கிறது ஜனம். ஏதாவது நல்லவழி காட்டுங்க” என்றார்.

செங்கல் காளவாசல்
செங்கல் காளவாசல்

போதிய அவகாசம் கொடுத்து கையிருப்பில் இருக்கும் மண்ணை செங்கலாக உற்பத்தி செய்ய காலக்கெடு கொடுக்கலாமே... இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறதே என மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பல்தேவிடம் கேள்வி எழுப்பினோம்.

"ஒரு வருடமாக இந்தப் பிரச்னை இருக்கிறது. புகைக்கூண்டு அமைக்க பல முறை அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். அதனால்தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு