Published:Updated:

``ஆண்டு முழுவதும் இதுதான் எங்களுக்கு குடிநீர்!" - மழைநீர் சேமிப்பில் கலக்கும் காவல்துறை அதிகாரி

எஸ்.எஸ்.ஐ திலகர்
News
எஸ்.எஸ்.ஐ திலகர்

``வாய்ப்புள்ள ஒவ்வொருவரின் வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வது மட்டுமல்லாமல், மோட்டார் மூலம் நீர் எடுத்து பயன்படுத்துவது குறையும். இதனால் மின்சாரப் பயன்பாடும் குறையும்." - எஸ்.எஸ்.ஐ திலகர்

அண்மையில் வடகிழக்கு பருவ மழை கொட்டித் தீர்த்ததால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. வறட்சியான பகுதிகள் என அறியப்படும் மாவட்டங்களில்கூட நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டைவிட 1.77 மீட்டர் அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இத்தகையச் சூழலில், மழைநீரை முறையாகச் சேமிப்பது மட்டுமல்லாமல், மழைநீரையே குடிநீராகவும் பயன்படுத்தி வருகிறார், தேனியைச் சேர்ந்த காவல் சிறப்பு சார்பு-ஆய்வாளர் பாலகங்காதர திலகர் (54).

மனைவி முத்துகிருஷ்ணவேணியுடன் திலகர்
மனைவி முத்துகிருஷ்ணவேணியுடன் திலகர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மழைநீரை எவ்வாறு குடிநீராக பயன்படுத்துகிறார் என்ற ஆச்சர்யத்துடன் அவரின் இல்லம் நோக்கி புறப்பட்டோம். முறுக்குமீசையுடன் போலீஸாருக்கே உண்டான மிடுக்குடன் வாழ்க வளமுடன் என வரவேற்றார் திலகர்.

``தங்களின் மழைநீர் சேகரிப்பு முறை குறித்து அறிந்துகொள்ள வந்துள்ளோம்" என்றவுடன், ``மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்தும் எவ்வாறு சேமிப்பு என்பது குறித்தும் பெரும்பாலானோருக்குத் தெரியும். இருப்பினும் அதைப் பின்பற்ற தயாராக இல்லை" என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தி தனது வீட்டைச் சுற்றிக் காட்டினார்.

பிறகு மொட்டை மாடியில் அமர வைத்து மழைநீர் சேமிப்பு குறித்து விளக்கினார். ``தேனி அருகே சீப்பாலக்கோட்டை அருகே காமாட்சிபுரம்தான் எனது பூர்வீகம். என் பெற்றோர் கிராமத்தில் டீக்கடை நடத்தினர். அந்தக் காலகட்டத்தில் போதிய தண்ணீர் வசதி இருந்தும், மழைக்காலத்தின்போது மழைநீரை வீட்டில் இருக்கும் அனைத்து பாத்திரங்களிலும் சேமித்து வைப்பதை என் பெற்றோர்கள் பின்பற்றி வந்தனர். மேலும், சேமிக்கப்படும் மழைநீரை சமையல் செய்யவும் பிற தேவைக்கும் பயன்படுத்தினர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இதனால் அப்போதே மழைநீர் சேமிப்பு குறித்து எனக்கு தெரியும். இதையடுத்து 1993-ல் காவல்துறையில் பணிக்கு சேர்ந்ததைத்தொடர்ந்து திருமணமும் முடிந்தது. என் மனைவி முத்துகிருஷ்ணவேணி அரசுப் பள்ளி ஆசிரியர். தற்போது அவர் பண்ணைக்காடு அரசுப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக உள்ளார். நான் காவல்துறையிலும், அவர் ஆசிரியப் பணியிலும் இருப்பதால் பல்வேறு ஊர்களில் குடியிருக்க வேண்டிய நிலை இருந்தது. அவ்வாறு வாடகை வீடுகளில் இருந்தபோதும் மழைநீரைச் சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்கிவிட்டோம்.

எஸ்.எஸ்.ஐ திலகர்
எஸ்.எஸ்.ஐ திலகர்

அப்போது வீடு கட்டினால், முறையான மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து மழைநீரை சேமிப்பது மட்டுமல்லாமல் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்தோம். அந்த கனவு 2014-ல் நிறைவேறியது. பொதுவாக மழைநீர் கிருமிகள் நிறைந்தது. பருகினால் ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் என்றும், மழைநீரைச் சேமித்தால் புழுக்கள் உருவாகும் என்றும் கூறுகின்றனர். அவை தவறான புரிதலாகும். மழைநீரை சூரியவெளிச்சம் படாதபடி மூடிவைத்தால் எத்தனை காலங்கள் ஆனாலும் நீரில் புழுக்கள் உருவாகாது. இதை எனது அனுபவத்தின் மூலம் உறுதியாகக் கூறுகிறேன்.

எனது வீட்டின் 1,250 சதுர அடி கொண்ட மொட்டைமாடியை 800 சதுர அடி, 450 சதுர அடி என 2 பாகங்களாகப் பிரித்துக் கொண்டேன். அதில் விழும் மழைநீரை தனித்தனியாகக் குழாய் மூலம் தரைக்குக் கொண்டு வந்தோம். 800 சதுர அடியில் கிடைக்கும் மழைநீரை வீட்டின் நுழைவுவாயிலில் 7-க்கு 8 என்ற அளவில் 8 அடி ஆழத்தில் தொட்டி அமைத்து நீரைச் சேமிக்க ஏற்பாடு செய்தேன். இதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால் தொட்டியில் எறும்பு, பூச்சி புகாதவாறும், மரங்களின் வேர் தொட்டியில் ஊடுருவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தொட்டியில் முதலில் பெய்யும் மழைநீர் சேமிக்காமல் வெளியேற்றி விட வேண்டும். தொட்டிக்கு வந்துசேரும் மழைநீர் வடிகட்டப்பட்ட பிறகு, தொட்டியில் தேங்கும் வகையிலான ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். இதற்கு மொத்தம் ரூ.30,000 தான் செலவு ஆகும். சிறிய அளவில் செய்ய வேண்டுமெனில் அதற்கும் குறைவான தொகையே தேவைப்படும். முதலில் மாடியில் இருந்து விழும் மழைநீர் அழுக்கும், தூசியாக இருக்க வாய்ப்புள்ளது. எனவேதான் மாடியில் விழும் மழைநீரை உடனே சேமிக்கத் தொடங்கக் கூடாது. இவ்வாறு சேகரிப்படும் நீரை ஒரு ஆண்டு முழுவதும் கூட பயன்படுத்த முடியும். இந்த நீரை அப்படியே குடிநீராகப் பயன்படுத்தலாம், சமையல் உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் உபயோகிக்கலாம்.

மழைநீர்
மழைநீர்

இதேபோல மொட்டை மாடியின் மற்றொரு பாகத்தில் இருந்து கிடைக்கும் மழைநீரை குழாய் மூலம் தரைப்பகுதிக்குக் கொண்டு வந்துள்ளேன். கீழே 2-க்கு 2-க்கு அளவில் 8 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி மணல், செங்கல், கூழாங்கல், அடுப்புக்கரி என அடுக்கடுக்காகப் போட்டு மூடியுள்ளேன். இதில் மழைநீர் தேங்கி நிலத்தில் இறங்கிக்கொண்டே இருக்கும். தொடர்மழை பெய்தால் சேகரிப்புத் தொட்டியில் இருந்து நீர் வெளியேறும். அந்த நீர் மரக்கன்றுகள் பாயும் அளவுக்கு ஏற்பாடு செய்துள்ளேன்.

இவ்வாறு வாய்ப்புள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்தினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வது மட்டுமல்லாமல், மோட்டார் மூலம் நீர் எடுத்து பயன்படுத்த வேண்டியது குறையும். இதனால் மின்சாரப் பயன்பாடும் குறையும்.

எனது வீடுகளுக்கு வரும் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மழைநீரையே குடிநீராகக் கொடுக்கிறேன். அவர்கள், `உங்க வீட்டு தண்ணீ சுவையா இருக்கே எங்க தண்ணீக் கேன் வாங்குறீங்க' என்று கேட்கிறார்கள். அவர்களிடம் மழைநீர் சேமிப்பு குறித்து விளக்கினால், `அட நல்லா இருக்கே எங்க வீடுகளிலும் இப்படிச் செய்கிறோம்' என மழைநீரைச் சேமித்து குடிநீராகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்'' என்றார்.