Published:Updated:

``இதுவும் மெடிக்கல் மிராக்கிள் தான்!" - மரணித்த மரம் உயிர் பிழைத்த கதை

அவரைச் சுற்றியிருக்கும் அவருடைய பேரன்கள் அத்தனை பேரும் வேர்கள் மூலமாகப் பாட்டனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அந்தத் தொடர்பைக் குழாய் போலப் பயன்படுத்தித் தத்தம் சத்துக்களிலிருந்து சிறிது சிறிதாகக் கொடுக்கின்றன.

மரம்
மரம் ( Pixabay )

மனிதர்கள் தனித்தனியாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அனைவருமே ஏதாவது ஒரு வகையில் ஏதேனும் ஓர் உறவுமுறைக்கு ஆட்பட்டிருப்பார்கள். நாம் குடியிருக்கும் பகுதியிலுள்ள விற்பனையாளருக்கு நாம் வாடிக்கையாளர் என்ற உறவுமுறையோடு இருப்போம். ஓர் அரசு அதிகாரி மக்களுக்குச் சேவகன் என்ற உறவுமுறை கொண்டிருப்பார். ஆசிரியர் மாணவர்கள் இப்படி அனைவருக்கும் மத்தியில் தொடர்புகளும் உறவுகளும் இருக்கவே செய்கின்றன. இங்கு யாருமே தனியாக இல்லை. யாரேனும் ஒருவர் சந்திக்கும் பாதிப்புகள் நமக்குச் சம்பந்தமில்லாதது என்று விலகிச் செல்ல முடியாது. அது ஏதாவது ஒரு வழியில் நம்மையும் பாதிக்கலாம் என்கிறார் காரல் மார்க்ஸ்.

இந்த அமைப்பு மனித இனத்திற்கு மட்டுமல்ல. மரங்களுக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்துள்ளது இந்த ஆய்வு.

நியூசிலாந்து ஊசியிலைக் காடுகளில் வளரும் ஒரு வகை மரம்தான் காவுரி (kauri tree). அது 165 அடி உயரம் வரை வளரும். அதில் கடந்த சில வருடங்களாக இறந்த மரங்களாகக் கருதப்பட்ட சில மரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இலைகளற்ற, கிளைகளற்ற மரத்தின் நடுப்பகுதியான அடிமரக்கட்டை மட்டுமே நின்றிருந்தது. பல ஆண்டுகளுக்கு முன்னமே அந்த மரம் இறந்துவிட்டது என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால், கடந்த 25-ம் தேதி அந்த மரத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் வெளியாகின. அந்த முடிவுகள் அப்படியிருந்த காவுரி மரங்கள் இறந்துவிட்டதாகச் சொல்லவில்லை.

மேற்பரப்பில் பார்ப்பதற்குச் சாதாரண பட்டுப்போன அடிமரக்கட்டை போல நிற்கும் காவுரி, மண்ணுக்கு அடியில் ஒரு சக்திவாய்ந்த உயிரினமாக வாழ்ந்துகொண்டிருக்கிறது.

காடு
காடு
Pixabay

காவுரி, நிலத்துக்கு அடியில் பின்னிப் பிணைந்த வேர்களோடு தன்னைச் சுற்றியிருக்கும் மரங்களோடு தொடர்பு கொண்டிருக்கிறது. அதைச் சுற்றியிருக்கும் ஒன்றிரண்டு மரங்களோடோ அல்லது சில பத்து மரங்களோடோ இல்லை. நூற்றுக்கணக்கான மரங்களோடு அதன் வேர்கள் தொடர்பு கொண்டிருக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள மரங்கள் கிரகித்து வைக்கும் நீர் மற்றும் ஊட்டச்சத்துகளிலிருந்து தனக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகளாகக் காவுரி உயிர்த்திருக்கிறது.

காவுரி மரத்தின் அடிக்கட்டை மிகப்பெரிய வேலையைச் செய்துகொண்டிருக்கிறது. அதற்குக் கிளைகளே இல்லை. பசுமைத் திசுக்களும் சுத்தமாகச் செத்துவிட்டன. பசுமைத் திசுக்கள் இல்லாமல் ஒரு மரம் உயிர்த்திருக்கவே முடியாது. அதையும் மீறி, காவுரி அடிமரக்கட்டையை வைத்தே பிழைத்துக் கொண்டிருக்கிறது.
செபாஸ்டியன் லியூசிங்கெர் (Sebastian Leuzinger)
அடிமரக்கட்டை மட்டுமே எஞ்சியிருக்கும் காவுரி மரம்.
அடிமரக்கட்டை மட்டுமே எஞ்சியிருக்கும் காவுரி மரம்.
Sebastian Leuzinger

லியூசிங்கெர் மற்றும் அவரது குழு இணைந்து அதற்கான விடையைத் தேடத் தொடங்கினார்கள். அதைக் கண்டுபிடிக்க அவர்கள் முதலில் அடிமரக்கட்டை மட்டுமே மிஞ்சியிருந்த பாட்டனையும் அவருக்கு அருகிலிருந்த மற்ற இரண்டு மரங்களோடு அவருக்கிருந்த தொடர்பையும் பரிசோதித்தார்கள். மூன்று மரங்களுக்கும் இடையில் பரிமாறப்படும் நீர் மற்றும் இதர ஊட்டச்சத்துகளைப் பல்வேறு சென்சார்களைக் கொண்டு ஆராய்ந்தார்கள். அப்போதுதான், இரண்டு மரங்களும் பாட்டன் மரமும் வெவ்வேறு நேரங்களில் தண்ணீர் குடிப்பது தெரியவந்தது.

பகல் வேளைகளில் மற்ற மரங்கள் அனைத்தும் தங்களுக்கான தண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் பாட்டன் எந்தவிதச் செயல்பாடுகளுமற்று அமைதியாக இருந்து கொள்கிறது. அவை தனக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் தண்ணீரை எடுத்துக்கொண்டு இரவில் அமைதியான பிறகு பாட்டன் காவுரி விழித்துக்கொள்கிறார். இரவில் பாட்டன் மற்ற மரங்களிடமிருந்து தான் உயிர்த்திருக்கத் தேவையான ஊட்டச்சத்துகளையும் நீரையும் எடுத்துக் கொள்கிறார். அவரைச் சுற்றியிருக்கும் அவருடைய பேரன்கள் அத்தனை பேரும் வேர்கள் மூலமாகப் பாட்டனோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அந்தத் தொடர்பை குழாய் போலப் பயன்படுத்தித் தத்தம் சத்துக்களிலிருந்து சிறிது சிறிதாகக் கொடுக்கின்றன. இது ஒரு நெட்வொர்க்கைப் போலச் செயல்படுகிறது. பேரன்கள் அத்தனை பேரும் சீராக ஒருவர் விட்டு ஒருவராக நீரையும் ஊட்டச்சத்துகளையும் தம் பாட்டனுக்குப் பரிமாறுகின்றனர்.

சரி, அந்த மரங்கள் தங்கள் பாட்டனுக்கு எப்படி உணவளித்து உயிர் பிழைக்க வைத்திருக்கின்றன என்பதைப் பார்த்தோம்.

ஆனால், அந்த மரங்களெல்லாம் சேர்ந்து தங்களுக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காத தம் பாட்டனைக் காப்பாற்றி வருவது எதற்காக?

காவுரி மரத்தில் சுத்தமாக இலைகளே இல்லை. அதன் பசுமைத் திசுக்கள் மொத்தமாகச் செத்துவிட்டன. ஆனால், அதன் அடிமரக்கட்டை அந்தக் காட்டிலுள்ள துடிப்பான, ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய மற்ற மரங்களுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றது. இந்தப் பாலம், ஒருவேளை காவுரி மரத்தின் பசுமைத் திசுக்கள் முற்றிலும் அழிவதற்கு முன்னமே ஏற்பட்டிருக்கலாம். செழிப்பாக, நன்கு வளர்ந்து நின்ற சமயத்திலேயே இந்தப் பாலம் ஏற்பட்டு இவை தனக்குள் இந்த ஆற்றல் பரிமாற்றத்தைச் செய்துகொண்டு இருந்திருக்கலாம். இன்றளவும் அதைத் தொடர்ந்துகொண்டிருக்கும் மரங்களுக்கு, காவுரி மரம் தன் பசுமையை இழந்துவிட்டது ஒருவேளை தெரியாமல்கூட இருக்கலாம் என்கின்றனர் அதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள்.

இந்தச் செயல்முறை நமக்குக் காடுகள் பற்றிய பார்வையை வேறொரு புதிய கோணத்தில் கொண்டு செல்கிறது. இருந்தாலும், இதில் சில சிக்கல்களும் இருக்கவே செய்கின்றன. இப்படி வேர்கள் வழியாக ஊட்டச்சத்துகளைக் கடத்தும் மரங்களுக்கு ஆபத்துகளும் இருக்கவே செய்கின்றன. ஏதேனும் ஒரு மரம், கொடிய விளைவுகளைத் தரக்கூடிய நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அந்தக் கிருமி மொத்தக் காட்டுக்குமே இந்தத் தொடர்பு மூலமாகப் பரவிவிடும். அதிலும், காவுரி மரங்களுக்கு காவுரி டைபேக் (kauri dieback) என்ற நோய்க்கிருமி தாக்கும். ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இந்தக் காவுரி மரம் இப்படித் தொடர்பு ஏற்படுத்தியதுதான் அதன் பசுமைத் திசுக்கள் அழிந்ததற்குக் காரணமா அல்லது அந்த நோய்க்கிருமியிலிருந்து தப்பிக்கத்தான் அவை இந்த மாதிரியான நிலத்தடித் தொடர்பு மூலம் தற்காத்துக் கொள்கின்றனவா என்பது அடுத்தகட்ட ஆய்வுகளில்தான் தெரியவரும்.

இடதுபுறம் இருக்கும் காவுரி மரத்தி அடிமரக்கட்டை, வலதுபுறம் இருக்கும் மரத்தோடு வேர்களால் தொடர்பு வைத்துக்கொண்டு உயிர் பிழைத்திருக்கிறது.
இடதுபுறம் இருக்கும் காவுரி மரத்தி அடிமரக்கட்டை, வலதுபுறம் இருக்கும் மரத்தோடு வேர்களால் தொடர்பு வைத்துக்கொண்டு உயிர் பிழைத்திருக்கிறது.
Sebastian Leuzinger

ஒருவேளை அவற்றுக்குள் ஏற்படுத்திக்கொண்ட இந்தத் தொடர்புதான் நோய்கிருமியைப் பரப்பிவிட்டதாக இருந்தால் தொடர்பிலுள்ள மற்ற மரங்களுக்கும் அது பரவியிருக்கும். அப்படிப் பரவாததால், நோய்க்கிருமியிடமிருந்து தப்பிக்கச் செய்துகொண்ட தற்காப்பு முயற்சியாகக்கூட இருக்கலாமென்ற ஊகம் முன்வைக்கப்படுகிறது. இதில் எது உண்மை என்பது மேற்கொண்டு நடத்தப்படவிருக்கும் ஆய்வுகளின் மூலம்தான் தெரியவரும்.

மரம் எப்போதும் தனித்திருப்பது கிடையாது. அது காட்டின் ஓர் அங்கம். உடலில் ஏதேனும் ஓர் அங்கத்தை வெட்டுவதால் அந்த உயிரினத்தின் உயிர் போய்விடாதுதான். ஆனால், அந்த அங்கம் அகற்றப்பட்டதன் வலி வாழ்நாள் முழுக்க இருந்துகொண்டேயிருக்கும். ஏனென்றால் அந்த உடலில் ஒவ்வோர் அங்கத்திற்கும் இடையே தொடர்புண்டு. ஒன்றில்லாமல் மற்றொன்று இயங்குவது சிரமம். காடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உடல் போன்றவை. அந்த உடலிலிருந்து நீங்கள் ஏதேனும் ஓர் அங்கத்தை ஒரு மரத்தை வெட்டிவிடலாம். ஆனால், அந்தக் காடுள்ள வரை அந்த வலியும் இருந்துகொண்டேயிருக்கும்.

மரங்கள்
மரங்கள்
Pixabay

அதை உணர்த்தும் வகையில் மரங்கள் தனியாக இல்லை என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது இந்த ஆய்வு.

நாம் மரங்களைத் தனித்தனியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவை தனியாக இல்லை. அவை ஒரே காடாக உள்ளது.
செபாஸ்டியன் லியூசிங்கெர் (Sebastian Leuzinger)