Published:Updated:

'சென்னையில், நீல நிறத்தில் மிளிர்ந்த கடல் அலைகள்!' - காரணம் என்ன தெரியுமா?

ம.காசி விஸ்வநாதன்

இந்த அழகிய காட்சிக்குப் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன?

Bioluminescent waves in Chennai
Bioluminescent waves in Chennai ( K.Ashwanth )

நேற்று இரவு சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் கடற்கரையில், அலைகள் நீல நிறத்தில் மினுமினுத்திருக்கின்றன. இதை அங்கிருந்தவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் என்ன?

இதுபோன்ற நிகழ்வுகளைக் கடலில் அவ்வப்போது பார்க்க முடியும். இதற்குக் காரணம், உயிரொளிர்வு (Bioluminescence) என்னும் தன்மைதான். ஓர் உயிரினம் மூலம் இயற்கையாக உருவாகும் ஒளியையே இப்படி அழைக்கின்றனர். மின்மினிப் பூச்சிகள் இதற்கு ஓர் உதாரணம். இப்படி கடலோரங்களில் அலைகள் மின்னுவதற்கு dinoflagellates என்ற ஒரு பாசி (Algae) வகைதான் காரணம். பெரும்பாலான நேரங்களில் தற்காப்புக்காக இப்படி ஒளியை வெளியிடுகின்றன இந்த பாசிகள். அதாவது, மீன்கள் இவற்றைச் சாப்பிட முயலும்போது இவை நடக்கும். அப்படிச் செய்வதன்மூலம், பெரிய மீன்களை இதனால் ஈர்க்கமுடியும். அந்த மீன்கள், சிறிய மீன்களைத் தின்றுவிடும். கப்பல்கள் செல்வது போன்ற எந்தவித அழுத்தம் இருந்தாலும் ஒளியை வெளியிடுகின்றன இந்தப் பாசிகள்.

பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், மிகவும் அதிகமாக காணப்பட்டால் ஆபத்தானவை இவை என்று கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தப் பாசிகள் பலவும் நச்சுத்தன்மை கொண்டவை. எண்ணிக்கையில் ஓரளவுக்கு மேல் இவை உயர்ந்தால், அங்கு இருக்கும் உணவுச் சங்கிலியில் நச்சுப் பொருள்களின் அளவை அதிகரித்துவிடும். அங்கு வாழும் மீன்களை சாப்பிடும்போது, அது மனிதர்களையும் பாதிக்கும்.

முதலில் இவை, தொழிற்சாலைகளால் கடல் மாசுபடுவதனால்தான் ஏற்படுகிறது என்று நம்பப்பட்டது. சமீபத்தில், இது மொத்தமாக புவிவெப்பமாதலின் (Global Warming) விளைவாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டது.

கேமராவில் சிக்கிய ராட்சத கனவா... பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஞாபகம் இருக்கா மக்களே?!

சில இடங்களில், பல கிலோமீட்டர்கள்வரை நீண்டிருக்கின்றன இந்த மின்னும் பாசிகள். ஆனால், நேற்று பார்க்கப்பட்டது சிறிய அளவில்தான். இதனால் பெரிய அளவில் கவலைப்பட ஒன்றுமில்லை என நம்பி அழகை ரசிக்கலாம்.