Published:Updated:

``மழை நீரைச் சேமிப்பது ஈஸி... ஒரு வருஷத்துக்குப் பயன்படுத்தலாம்!" - இவர் மக்களின் பொறியாளர்

ஜி.சதாசிவம்

தமிழகம் முழுவதும் கடும் குடி நீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது, இந்நிலையில் மழை நீரைச் சேமித்து குடி நீராகப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்து வருகிறார் சிதம்பரத்தைச் சேர்ந்த பொறியாளர் ராஜா.

மழை நீர்
மழை நீர் ( எஸ். தேவராஜன். )

பருவ மழை பொய்த்துப் போனது, நிலத்தடி நீர் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. நகர்ப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரவும், குடி தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும் நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் மழை நீரைச் சேமித்தால் போதுமானது என்கிறார் பொறியாளர் ராஜா.

மழை நீர்
மழை நீர்
எஸ். தேவராஜன்

சிதம்பரம் செங்கோடான் தெருவைச் சேர்ந்த சிவில் இன்ஜினீயரான ராஜா, தனியார் கட்டுமான நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாகத் தனது வீட்டில் மழை நீரை சுத்திகரித்துச் சேமித்து அதைக் குடி நீராகப் பயன்படுத்தி வருகிறார்.

நம் எதிர்கால சந்ததிக்குச் சுத்தமான காற்றையும், தண்ணீரையும் விட்டுச் செல்ல வேண்டும். மழை நீர் சேமிப்பு மூலம் கிடைக்கும் நீரை பூமிக்கடியில் விடாமல் நாமே ஏன் உபயோகப்படுத்தக் கூடாது என்று யோசித்தேன்.

பொறியாளர் ராஜா
பொறியாளர் ராஜா
எஸ். தேவராஜன்.

உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் மழை நீரில் பொட்டாசியம், அயன், கால்சியம் என 18 வகையான தாதுகள் இருக்கின்றன. இயற்கையில் அமிர்தம் போல் கிடைக்கும் மழை நீரைச் சேமித்துக் குடி நீருக்குப் பயன்படுத்த முடிவு செய்து மேல் மாடியில் மழை நீரைச் சேமிப்பதற்காகத் தனியாக பைப் லைன் அமைத்து அந்த நீரை வீட்டின் கீழ் பகுதிக்குக் கொண்டு வந்தேன். இந்த நீரைச் சுத்தப்படுத்துவதற்காகத் தனியாக பில்டர் அமைத்துள்ளேன், இதிலிருந்து வரும் சுத்தமான நீரை வீட்டிலுள்ள ஆயிரம் லிட்டர் டேங்கில் நிரப்பி அதைத் தினம் குடி நீர் தேவைக்குப் பயன்படுத்தி வந்தோம்.

மேலும் மழைக்காலங்களில் தொடர் மழை பெய்யும் போது கிடைக்கும் அதிக அளவு நீரைச் சேமிக்க வீட்டின் ஹாலில் கீழ்ப் பகுதியில் பெரிய அளவில் தொட்டி அமைத்துள்ளேன். இதேபோல் மேலும் இரண்டு இடங்களிலும் அமைத்துள்ளேன். இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் லிட்டர் மழை நீரை சேமித்துவைத்துள்ளேன்.

பில்டர்
பில்டர்
எஸ். தேவராஜன்.

மழை நீர் பில்டர் செய்து வருவதால் கிருமி இல்லாமல் ஆர்வோ வாட்டரை விடச் சுத்தமாக இருக்கின்றது. வெயில் பட்டால்தான் நீர் கெட்டுவிடும். அதனால் வெயில் படாத இடத்தில் மழை நீரைச் சேமித்து வைப்பதால் ஒரு வருடம் வரை நீர் கெட்டுப்போகாமல் பயன்படுத்தி வருகிறேன். தொட்டிகள் நிரம்பியவுடன் அதிகமாக வரும் மழை நீர் போர்வெல் மூலம் பூமிக்கடியில் அனுப்பப்படுகிறது. இதனால் எங்கள் வீட்டில் போர்வெல் நிலத்தடி நீர் மட்டும் குறையாமல் பாதுகாக்கப்படுகிறது.

நகர்ப் பகுதிகளில் நெருக்கமாக இருக்கும் வீடுகள், கான்கிரீட் சாலைகள் என மழை நீர் நிலத்தடிக்குச் செல்ல வாய்ப்பு இல்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக குறைந்து வருகிறது. மக்களுக்கு விழிப்புணர்வு வரவேண்டும். நான் எனது நிறுவனத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளில் மழை நீர் சேமிப்பையும், அதைக் குடி நீராகப் பயன்படுத்துவது குறித்துக் கூறி அவர்களையும் கூறி அவர்களையும் இப்படிப் பயன்படுத்தக் கூறி, தற்பொழுது நிறைய பேர் இந்த முறையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு கூறினார்.

போர்வெல்
போர்வெல்
எஸ். தேவராஜன்.

கடந்த 15 ஆண்டுக்காக மழை நீரைக் குடி நீராகப் பயன்படுத்தி மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்ந்து வருகிறார் பொறியாளர் ராஜா.