Published:Updated:

தண்ணீர்ப் பஞ்சப் பிரதேசத்திலும் 81 வருடங்களாக வற்றாத கிணறு... என்ன அதிசயம்?

துரை.வேம்பையன்
நா.ராஜமுருகன்

1995 லும், 2016 லும் பள்ளபட்டியில் வரலாறு காணாத கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போதும்கூட, இந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றியதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

வற்றாத பள்ளபட்டி கிணறு
வற்றாத பள்ளபட்டி கிணறு ( நா.ராஜமுருகன் )

இந்த வருடம் தமிழகமே கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் தாகத்தோடு தவித்துப் போனது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை நீக்கமற எங்கெங்கும் மக்கள் காலிக் குடங்களோடு தண்ணீர் தேடி அலைந்த காட்சிகள் நெஞ்சை பதறச் செய்தன. நீர்நிலைகளைச் சிதைத்து, நிலத்தடி நீர்மட்டத்தை அதலபாதாளத்துக்கு போகவைத்த நமது பொல்லாத சுயநலம்தான் அதற்குக் காரணம். கரூர் மாவட்டத்தில் கடந்த பத்து வருடங்களாகவே கடும் குடிநீர்ப் பஞ்சம். அதுவும், 50,000 மக்கள்தொகை கொண்ட, தமிழகத்தில் உள்ள பெரிய பேரூராட்சிகளில் ஒன்றான பள்ளபட்டியில் 1300 அடிகள் போர்வெல் போட்டால்தான் தண்ணீர் கிடைக்கும் என்கிற நிலைமை.

பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை
பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை
நா.ராஜமுருகன்

இந்தச் சூழலில், அதே பள்ளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், கடந்த 81 வருடங்களாகத் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைத்து வருகிறது. அதுவும், அங்குள்ள ஒரு கிணறு மூலமாகதான் 81 வருடங்களாக தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கிறது என்றால், அது ஆச்சர்ய விஷயம்தானே?

கரூர் மாவட்டத்தின், தென்கோடி எல்லையில் இருக்கிறது பள்ளப்பட்டி. இந்தப் பேரூராட்சியில் எங்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. கடந்த முப்பது வருடங்களாகவே காவிரி கூட்டுகுடிநீர்த் திட்டம் மூலமாகதான் பள்ளப்பட்டி மக்களின் தாகம் தீர்க்கப்படுகிறது. பலரும் 1000, 1200 அடிகள் வரை போர்வெல் போட்டு, தண்ணீர் கிடைக்காமல் தவித்துபோகும் கொடுமையும் நடக்கிறது.

வற்றாத பள்ளப்பட்டி கிணறு
வற்றாத பள்ளப்பட்டி கிணறு
நா.ராஜமுருகன்

இந்த நிலையில்தான், பள்ளப்பட்டி ஹாஜி வாப்பு அரசு மருத்துவமனையில் நோயாளிகள் குடிக்க, குளிக்க, நோயாளிகள் பயன்படுத்திய போர்வை மற்றும் துணிகளைத் துவைக்க என சகல பயன்பாடுகளுக்கும் கடும் வறட்சிக்காலங்களில்கூட வற்றாமல் தண்ணீர் தந்து ஆச்சர்யப்படுத்துகிறது அங்கு அமைந்துள்ள கிணறு ஒன்று.

அதுபற்றி நம்மிடம் பேசிய பள்ளப்பட்டி அரசு மருத்துமனையில் தலைமை மருத்துவராக இருந்து ஓய்வுபெற்றவரான அக்பர் அலி,

அக்பர் அலி (ஓய்வுபெற்ற மருத்துவர்)
அக்பர் அலி (ஓய்வுபெற்ற மருத்துவர்)
நா.ராஜமுருகன்

``பள்ளப்பட்டி அந்தக் காலத்தில் இருந்தே வறட்சியான பகுதிதான். 1930 களில்கூட இங்கே தண்ணீரின்றி மக்கள் தவித்துப்போயிருக்கிறார்கள். மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருத்தெருவாகத் தண்ணீருக்காக அலைந்திருக்கிறார்கள். அன்று ஒரு சில வீடுகளில் கிணறு இருந்திருக்கு. அந்தக் கிணறுகளிலிருந்து அந்தப் பகுதி மக்கள் நீர் இறைத்து தாகம் தணிப்பார்கள். அடுத்து, நங்காஞ்சி நதியில் ஊற்றுப்பறித்து தண்ணீர் கொண்டுவந்திருக்கிறார்கள். இப்படி இந்த நீர் ஆதாரத்தைத் தவிர மக்களுக்கு வேறு எந்த நீர் ஆதாரமும் அப்போது கிடையாது. இந்த நிலையில்தான், 1938-ம் வருடம் மழை பொய்த்துப்போயிருக்கிறது. ஊரில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றியிருக்கிறது. நங்காஞ்சி நதியிலும் தண்ணீர் வரத்து குறைந்து, ஒருகட்டத்தில் நதி முற்றிலும் வறண்டுப்போயிருக்கிறது. மக்கள் தங்களது தண்ணீர் தாகம் தீர எந்த வழியும் கிடைக்காமல் அல்லாடியிருக்கிறார்கள். `எங்கு செல்வது, எப்படித் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வது' என வழி தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள். அதோடு, அன்றைய காலத்தில் ஆண்கள் அனைவரும் வேலை தேடி வெளியூர்களில் வசிப்பார்கள். குடும்பத் தேவைகளை துணைக்கு ஆண்கள் இல்லாமல் பெண்களே செய்ய வேண்டும். இதனால், அப்போது பெண்கள் தண்ணீருக்காகப் பெரும்பாடுபட்டிருக்கிறார்கள். இதற்கிடையில், ஊரில் மக்களுக்கு நோய்நொடிகள் பெருகி இருக்கு.

பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் இந்த கிணற்றைப் பத்தி கேள்விப்பட்டு, ஆச்சர்யத்தோடு இங்கே வந்து ஆய்வு பண்ணினார். ஆய்வின் முடிவில் அவர், `இந்தக் கிணறு அமைந்திருக்கும் பகுதி வற்றாத சுணைகளை உடைய பகுதி. எந்த காலத்திலும் இந்த கிணறு வற்றாது'னு சொன்னார்
வற்றாத பள்ளபட்டி கிணறு
வற்றாத பள்ளபட்டி கிணறு
நா.ராஜமுருகன்

அதனால், எங்க தாத்தா ஹாஜி வாப்பாவும், ராசப்பா ராவுத்தரும் சேர்ந்து, சொந்தக்காரங்களின் பங்களிப்போடு, இந்த மருத்துவமனையை கட்டியிருக்காங்க. அதற்கும் தண்ணீர் இல்லை. மழைவேண்டி தொழுகை செய்து, துவாக் கேட்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான், அந்த அதிசயம் நடந்திருக்கு. வெளியூரைச் சேர்ந்த, ஞானி கோலத்துல பள்ளப்பட்டிக்கு வந்த பல்லாக்கு தம்பி வலியுல்லாஹ் என்பவரை, எங்க தாத்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சந்திருச்சிருக்காங்க. அவரிடம், `பள்ளப்பட்டியில் நிலவும் தண்ணீர் கஷ்டத்தைப் போக்க வழி பண்ணுங்க'னு வேண்டுகோள் வச்சிருக்காங்க. அதை ஏற்றுக்கொண்ட வலியுல்லாஹ், கீழே கிடந்த ஒரு சிறு கல்லை கையில் எடுத்து, அல்லாவை வேண்டிக்கொண்டு, சில சூராக்களை ஓதி, தூரமாக தூக்கி எறிந்திருக்கிறார். `அந்தக் கல் எங்கே விழுந்ததோ, அங்கே ஒரு கிணற்றைத் தோண்டவும். அதில் எப்போதும் தண்ணீர் வற்றாது. அதன்மூலமாக கிடைக்கும் தண்ணீரில் உங்கள் தாகம் காலகாலத்துக்கும் தீர்க்கப்படும்'னு சொல்லியிருக்கிறார்.

கனடா அதிபர் முதல் நடிகர் பொன்வண்ணன் வரை வியந்த தமிழக எழுத்தாளர்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!

அவர் அறிவுறுத்தல்படி, அவர் எறிந்த கல் கிடந்த இடத்தில், என் தாத்தா உள்ளிட்ட முக்கியஸ்தர்களால் ஒரு கிணறு தோண்டப்பட்டது. அந்தக் கிணற்றில் ஊற்று பெருகி தண்ணீர் பெருக்கெடுத்தது. அள்ள அள்ளக் குறையாமல் தண்ணீர் வந்திருக்கு. ஊர் மக்கள் அனைவரும் இந்தக் கிணற்றில் தண்ணீர் இறைத்து, தங்கள் தாகம் தீர்த்திருக்கிறார்கள். அன்றுமுதல் இன்றுவரை கிணற்றில் வலியுல்லாஹ் சொன்னதுபோல தண்ணீர் வற்றவே இல்லை. எங்க தாத்தா உள்ளிட்டவர்களால் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை, 1948-ம் வருடம் அரசு மருத்துவமனையாக மாறி இருக்கு. அன்றுமுதல் இந்த மருத்துவமனைக்கும், ஒட்டுமொத்த பள்ளப்பட்டி மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இந்தக் கிணறுதான் விளங்கி வந்திருக்கு. கடந்த 1972-ம் வருஷம், பள்ளப்பட்டிக்கு காவிரி கூட்டுகுடிநீர்த் திட்டம் மூலமா தண்ணீர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இதனால், கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு இந்தக் கிணற்றை பாதுகாப்பாக மூடி, மின்மோட்டார் மூலம் தண்ணீர் இறைத்து, மருத்துவமனையின் தண்ணீர்த் தேவையைப் போக்கி வருகிறார்கள். இந்தக் கிணற்று நீரை இப்போது ஆர்.ஓ தண்ணீராக சுத்தப்படுத்தி பயன்படுத்தி வருகிறார்கள்.

மோட்டார் அறை
மோட்டார் அறை
நா.ராஜமுருகன்

நோயாளிகளின் குடிநீர்த் தேவை தொடங்கி மருத்துவமனையைச் சுற்றியுள்ள மரக்கன்றுகளுக்கு நீர்பாய்ச்சுவது வரை சகல விஷயங்களுக்கும் இந்த நீரைதான் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிணறு பள்ளப்பட்டிக்கு கிடைச்ச அதிசய ஊற்று" என்றார் மகிழ்ச்சியாக!.

அடுத்து பேசிய, காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு கரூர் மாவட்டச் செயலாளரான முகமது ஜக்காரியா,

``தினமும் மருத்துவமனைக்கு 10,000 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படுது. அந்த அளவு நீரை தட்டுப்பாடின்றி இந்தக் கிணறு வழங்கி வருகிறது. தினமும் இன்றுவரை தண்ணீர் இறைத்துக்கொண்டேயிருக்கிறார்கள். இருப்பினும் தண்ணீர் குறைவது கிடையாது. 1995 லும், 2016 லும் பள்ளப்பட்டியில் வரலாறு காணாத கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போதும்கூட, இந்தக் கிணற்றில் தண்ணீர் வற்றியதில்லை என்பதுதான் ஆச்சர்யம். பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் இந்தக் கிணற்றைப் பத்தி கேள்விப்பட்டு, ஆச்சர்யத்தோடு இங்கே வந்து ஆய்வு பண்ணினார். ஆய்வின் முடிவில் அவர், `இந்தக் கிணறு அமைந்திருக்கும் பகுதி வற்றாத சுணைகளை உடைய பகுதி. எந்தக் காலத்திலும் இந்தக் கிணறு வற்றாது'னு சொன்னார்.

முகமது ஜக்காரியா (காங்கிரஸ் பிரமுகர்)
முகமது ஜக்காரியா (காங்கிரஸ் பிரமுகர்)
நா.ராஜமுருகன்

பள்ளபட்டியைச் சுத்தியுள்ள 32 கிராம மக்கள் இந்த அரசு மருத்துவமனைக்கு தினமும் நோய்நொடிகளைப் போக்கிக்கொள்ள வந்துபோகிறார்கள். அவர்களுக்கு அட்சயபாத்திரமாகவும், வற்றாத ஊற்றாகவும் இருந்து இந்தக் கிணறுதான் தாகம் தீர்த்துக்கிட்டு இருக்கு. ஆனா கூட்டுக்குடிநீர் மூலம் தெருவெங்கும் வீடுதோறும் தண்ணீர் வந்துவிட்ட இந்தக் காலத்தில் இந்தக் கிணற்றை மக்கள் பலரும் மறந்தேவிட்டார்கள். இப்போது உள்ள தலைமுறையினர்களுக்கும், `இங்கு ஒரு கிணறு இருப்பதும், அதில் எப்போதும் தண்ணீர் வற்றியது இல்லை' என்ற உண்மையும் தெரியவே தெரியாது. இந்தக் கிணற்றை நாங்க பொக்கிஷமாக பாதுகாப்போம்!" என்றார்.