Published:Updated:

`இன்று தேசியக் கொடி, நாளை மரம்..!’ - ஸ்டார்ட்-அப்பின் அடடே முயற்சி

இந்தக் கொடிகளை மண்ணில் விதைத்தால் அதிலிருந்து செடிகள் முளைக்கும்!

இன்று தேசியக் கொடி, நாளை மரம்
இன்று தேசியக் கொடி, நாளை மரம்

சுதந்திர தினமான இன்று இந்த மகத்தான தேசத்தில் பிறந்த பெருமையுடன் தேசியக் கொடியை நம் சட்டைகளில் குத்திக்கொள்வது வழக்கம். பெரும்பாலும் இவை வெறும் காகிதத்தால் மேலே ஒரு பிளாஸ்டிக் லேமினேஷனுடன் தயாரிக்கப்படுகின்றன. சுதந்திர தினத்தில் எத்தனை கொடிகள் வாங்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு வரை அவை நம்மிடம் இருப்பதில்லை. எங்காவது போட்டுவிடுவோம். சிறிய பொருள் என்றாலும் பிளாஸ்டிக் இருப்பதால் அவை எளிதில் மக்கவும் செய்யாது. இதற்கு பதிலாக சுற்றுச்சூழலை எந்த விதத்திலும் பாதிக்காமல் அதற்கு நன்மை செய்யும் புதிய தேசியக் கொடிகளை அறிமுகம் செய்திருக்கிறது பெங்களூரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம்.

விதைகள் கொண்ட தேசியக்கொடி
விதைகள் கொண்ட தேசியக்கொடி

Seed paper India என்னும் இந்த நிறுவனத்தின் கொடிகள் மண்ணில் விதைத்தால் செடியாக வளரும். பழைய துணிகளிலிருந்து கிடைக்கும் மறுசுழற்சி கார்பன் பைபர்கள் கொண்டு கையால் தயாரிக்கப்படும் காகிதத்தில் துளசி விதைகள் சேர்க்கப்படுகின்றன. தேசியக்கொடியில் இருக்கும் நிறங்களைக் கொண்டுவரவும் இயற்கையில் கிடைக்கும் பொருள்களே டையாக பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சளின் உதவியுடன் காவியும், கீரையிலிருந்து பச்சையும், அவுரி நெல்லிகளிலிருந்து (blueberries) அசோகா சக்கரத்தின் நீல நிறமும் உருவாக்கப்படுகிறது. இந்தப் பசுமை தேசியக்கொடிகள் தரத்திற்கேற்ப ரூபாய் 5 முதல் 12 வரை கிடைக்கும்.

Vikatan
விதையிலிருந்து வளரும் மரங்கள்
விதையிலிருந்து வளரும் மரங்கள்

இது போன்ற முயற்சிகளில் இந்த நிறுவனம் இறங்குவது இது முதல்முறை அல்ல. கேரளா அரசு மற்றும் சத்யா சாய் ஆதரவற்றோர் அறக்கட்டளை உதவியுடன் இதே போன்ற கொடிகளை இந்த நிறுவனம் குடியரசு தினத்திற்கும் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.