Published:Updated:

`இது காட்டுத்தீ செதுக்கிய பூமி!' ஒரு டைனோசர் கால கதை

டைனோசர் அழிவும், காட்டுத் தீயும்
டைனோசர் அழிவும், காட்டுத் தீயும்

டைனோசர்களின் அழிவு, ஒரு பெரிய காட்டுத்தீயால் உயிரினங்கள் எந்த அளவு பாதிக்கப்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் தற்போது கொளுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ, போர் அச்சுறுத்தல்களையும் தாண்டி பெருமளவில் உலக கவனத்தைப் பெற்றுவருகிறது. இதுவரை பல மில்லியன் ஹெக்டேர் பரப்பளவிலான வனப்பகுதி இந்தக் காட்டுத் தீக்கு இரையாகியிருக்கிறது. இதனால் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைவிட பல்லுயிர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்தான் அதிகம்.

இந்தக் காட்டுத்தீயால் பல உயிரினங்கள் மொத்தமாக அழிந்தே போகும் அபாயம் இருக்கிறது.
அறிவியலாளர்கள்
ஆஸ்திரேலிய காட்டுத்தீ
ஆஸ்திரேலிய காட்டுத்தீ
AP

இப்படியான ஒரு பெரும் காட்டுத்தீயை மனிதன் இதற்குமுன் நேரடியாகப் பார்த்திருப்பானா எனத் தெரியவில்லை. ஆனால், காட்டுத்தீயால் பெருமளவில் உயிரினங்கள் அழிந்த ஒரு வரலாறு நமக்குத் தெரியும். அது என்ன வரலாறு என்று கேட்கிறீர்களா? டைனோசர்கள் அழிந்த வரலாறுதான் அது.

சுமார் 6.6 கோடி வருடங்களுக்கு முன் கிரிட்டாசியஸ்-பேலியோஜீன் பேரழிவு (Cretaceous-Paleogene extinction) நிகழ்ந்தது. இதை K-Pg extinction என்றும் அழைப்பர். இதில் அப்போதைய உலகின் 75 சதவிகித உயிரினங்கள் மொத்தமாக அழிந்துபோயின. இந்த அழிவுதான் டைனோசர்களின் ஆதிக்கத்துக்கு மொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தது. இந்த அழிவு சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுடைய விண்கல் ஒன்று மெக்சிகோ பகுதியில் விழுந்ததால் நிகழ்ந்தது. இந்த விண்கல் அங்கு தமிழகத்தின் பாதி பரப்பளவுக்கு ஒரு பெரிய பள்ளம் ஒன்றை ஏற்படுத்தியது.

விண்கல்
விண்கல்

இதில் வெடித்துச் சிதறிய துகள்கள் சூரியனின் ஒளியை மறைத்ததால் மொத்த பூமியிலும் ஒரு கொடிய குளிர்காலம் தொற்றிக்கொண்டது. இது பல வருடங்களுக்கு நீடித்தது. இந்த இருள் சூழ்ந்த குளிர்காலம் ஒற்றை செல் உயிரினங்கள் தொடங்கி பெரிய மரங்கள் வரை பலவற்றையும் மொத்தமாக அழித்தது.

இந்த விண்கல் விழுந்ததில் எரியும் துகள்கள் வளிமண்டலமெங்கும் வெடித்துச் சிதறியது. உலகமெங்கும் பெருமளவில் காட்டுத்தீயை ஏற்படுத்தியது. அப்போது கண்டங்கள் அனைத்தும் அருகில்தான் இருந்தன. அன்றைய உயிரினங்களின் அழிவுக்கு இந்தக் காட்டுத்தீயே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இன்று கிடைக்கப்பெறும் அந்தக் கால படிமங்களில் அதிகப்படியாகப் படிந்திருக்கும் கார்பன் புகைக்கரி அதையே பறைசாற்றுகின்றன. அந்த நேரத்தில் உலகின் அனைத்து வனங்களுமே தீக்கு இரையாகியிருக்கக்கூடும் எனக் கணிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

இதற்கு முழுமையான ஆதாரங்கள் இல்லையென்றாலும், அப்போது வாழ்ந்த பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் என அனைத்தின் படிமங்களே இந்தக் காட்டுத்தீ நடந்ததை உறுதிசெய்யும் வகையிலேயே இருக்கின்றன. இருந்தும் இது குறித்த விவாதம் இன்றும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.

டைனோசர் கால காட்டுத்தீ
டைனோசர் கால காட்டுத்தீ
Douglas Henderson

இந்தக் காலகட்டத்தில் நிலத்தில் வாழும் உயிரினங்களுள் வெப்பத்திலிருந்தும் தீயிலிருந்தும் தற்காத்துக்கொள்ள ஏதேனும் திறனிருப்பவை மட்டுமே தப்பித்து உயிர்வாழ்ந்திருக்கின்றன. அதாவது பொந்துகள் தோண்டி வாழ்பவை, பிளவுகளில் மறைந்து வாழ்பவை, பறக்கும் திறனுடையவை, நீர் நிலம் இரண்டிலும் வாழ்பவை தப்பித்தன. ஊர்வனவற்றில் முதலைகள், நன்னீர் ஆமைகள், பொந்துகளில் வாழ்ந்த பாம்புகள் தப்பின. ஆனால், மற்ற பாம்புகள் பெருமளவில் மடிந்தன. பாலூட்டிகளிலும் அதே நிலைதான். பறவைகளில் சிறியவை தப்பின, பெரிய டைனோசர் வகை பறவைகள் அனைத்துமே மறைந்தன.

Vikatan

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மேலே குறிப்பிட்ட குணங்கள் இல்லாமல், சராசரி பூனையைவிட பெரியதாக இருந்த அனைத்து நிலம்வாழ் விலங்குகளும் மடிந்தன. தீயிலிருந்து தப்பும் அந்தக் குணங்களும் அன்றைய சூழலில் தாக்குப்பிடிக்க வாய்ப்புகளைத் தந்ததே தவிர, உயிர்பிழைப்பது அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் போராட்டமாகத்தான் இருந்தது. உதாரணத்துக்கு டெரோசார்களால் (pterosaurs) நன்றாகப் பறக்க முடியும். ஆனால், அந்த இனம் அழிந்துதான்போனது. சொல்லப்போனால் மரங்களைச் சார்ந்திருந்த பறவை இனங்கள் பலவும் அப்போதைய காட்டுத்தீயால் பெருமளவில் அழிந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து இன்றைய மரம் சார்ந்து வாழும் பறவைகள் (perching birds) தோன்ற பல மில்லியன் வருடங்கள் ஆகின.

டெரோசார்(pterosaur)
டெரோசார்(pterosaur)

டைனோசர்களின் இந்த அழிவு, ஒரு பெரிய காட்டுத் தீயால் உயிரினங்கள் எந்த அளவு பாதிக்கப்பட முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆனால், அந்தக் காட்டுத் தீயுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இன்று உலகைச் சுற்றி நிகழும் காட்டுத்தீ சம்பவங்கள் அளவிலும் வீரியத்திலும் சிறியவைதான். அமேசான், ஆஸ்திரேலியா, கலிஃபோர்னியா, சைபீரியா என அனைத்தும் ஒரு பகுதிக்குள்ளாகவே நடக்கின்றன. இருந்தும் இவற்றின் தாக்கமும் மோசமானதாகவே இருக்கும். ஏனென்றால், இன்று உலகின் பாதி காடுகளை மனிதர்களாகிய நாமே அழித்துவிட்டோம். மாசு, காலநிலை மாற்றம் என மனிதனால் ஏற்கெனவே பல உயிரினங்கள் அழிவின் விளிம்பில் நிற்கின்றன. இந்தக் காட்டுத் தீயானது அவற்றுக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கின்றன. மில்லியன்களில் சென்றுகொண்டிருக்கிறது காட்டுத் தீக்கு இரையாகும் மொத்த வனப்பகுதிகள்.

6 மில்லியன் ஹெக்டேர்.
ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு இதுவரை இரையான மொத்த வனப்பரப்பு.
6 மில்லியன் ஹெக்டேர் காட்டை எரித்த ஆஸ்திரேலிய காட்டுத் தீ! 

உலகில் அதிக வகையான உயிரினங்கள் காணப்படும் 'megadiverse' நாடுகள் மொத்தம் 17 தான். அதில் ஆஸ்திரேலியாவும் ஒன்று. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பே தனி தீவாக ஆஸ்திரேலியா பிரிந்துவிட்டதால், அதற்கேயென பல வகையான உயிரினங்களைக் கொண்ட ஒரு தேசம் ஆஸ்திரேலியா. இந்த உயிரினங்களை உலகின் வேறு எங்கேயும் பார்க்க முடியாது. அப்படியான பல்லுயிர்கள் அதிக அளவில் வாழும் இடங்களில்தான் தற்போதைய காட்டுத் தீ தழல் பற்றி எரிகிறது. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்டு பகுதிகளைச் சேர்ந்த கோந்த்வாணா மலைக்காடுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. இதில் பல பாலூட்டிகளும் பறவைகளும் பெரும் ஆபத்தைச் சந்தித்துவருகின்றன. அதைவிடவும் பெரிய ஆபத்தில் சிறிய முதுகெலும்பில்லாத விலங்குகள் இருக்கின்றன.

காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க முயலும் கங்காரூ
காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க முயலும் கங்காரூ

இந்தக் காட்டுத்தீ உயிர்கள் மீது நீண்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இது போன்ற பெரிய காட்டுத் தீ நிகழ்வுகள் மொத்த சூழலியல் அமைப்புகளையே மாற்றியமைக்கும் சக்தி கொண்டவை என்பதால் உடனடியாக அழியாவிட்டாலும் இதன் தாக்கத்தால் வரும் வருடங்களில் பல உயிரினங்கள் மறைந்துபோகும் வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து உயிரினங்கள் மீண்டுவரப் பல வருடங்கள் தேவைப்படும்.

விண்கல் விழுந்ததில் ஏற்பட்ட காட்டுத் தீயிலிருந்தும், குளிர்காலத்திலிருந்தும் இன்றைய நிலைக்கு வரப் பூமிக்குப் பல மில்லியன் ஆண்டுகள் ஆனது. டைனோசர்கள் ஆண்ட உலகத்தைப் பாலூட்டிகள் மற்றும் பறவைகளின் உலகமாக மாற்றியது அந்தக் காட்டுத்தீதான். மீண்டும் உலகைத் திருப்பிப்போடும் சக்தி அதற்கு உண்டு!

Source: The Conversation

அடுத்த கட்டுரைக்கு