Published:Updated:

தண்ணீர் பாட்டில்களால் கட்டப்பட்ட குளியலறை... துத்துக்குடி மாநகராட்சியின் புது முயற்சி!

நுண் உரம் செயலாக்க மையம்
நுண் உரம் செயலாக்க மையம்

தமிழகத்தில் முதல்முறையாக தூத்துக்குடியில் மாநகராட்சி நுண்உர செயலாக்க மைய வளாகத்தில், செங்கல்லுக்குப் பதிலாகக் காலியான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களைப் பயன்படுத்தி குளியலறை கட்டப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் கழிவுப் பொருள்களை மறுசுழற்சி செய்து பயனுள்ளவையாக மாற்றப்பட்டு வருகிறது. தினந்தோறும் டன் கணக்கில் வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் சேமிப்புக் கிடங்குகளில் அப்படியே கொட்டப்படுவதால் அவற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வந்தது.

பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுவர்
பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட சுவர்

இவ்வாறு சேமிக்கப்படும் குப்பைகளை மறுசுழற்சி செய்து மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் மற்றும் விவசாயத்துக்கு உரமாகப் பயன்பட்டு வருகிறது. இத்திடக்கழிவு மேலாண்மையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் சவாலாக இருப்பதே பிளாஸ்டிக் பொருள்கள்தான்.

அதிலும், பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் மறுசுழற்சி செய்து அழிக்கபட்டாலும், அதிக பயன்பாடு காரணமாகத் தினமும் நூற்றுக்கணக்கில் பிளாஸ்டிக் பாட்டில்கள் குப்பைகளில் சேர்கின்றன. இந்த பாட்டில்களைப் பயனுள்ள பொருள்களாக மாற்றும் நோக்கத்தில் காலியான பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களைப் பயன்படுத்தி புதிய குளியலறைக் கட்டடத்தைக் கட்டியுள்ளது தூத்துக்குடி மாநகராட்சி.

பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்படும் குளியலறை
பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்படும் குளியலறை

தூத்துக்குடி, பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு நுண் உர செயலாக்க மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, குப்பைகள் பிரிக்கப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தினமும் 100 முதல் 150 தொழிலாளர்கள் வரை குப்பைகளைப் பிரித்தெடுத்தல் மற்றும் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்கள், பணிகளை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும்போது, குளித்துவிட்டுச் செல்லும் வகையில் இம்மைய வளாகத்தில் இந்த குளியலறை கட்டப்பட்டுள்ளது. செங்கல்லுக்குப் பதிலாக காலியான பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முனைவர் ஜெயசீலனிடம் பேசினோம், “கொரோனா பாதிப்பின் போது வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தல் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு உணவுடன் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அந்தக் காலி பாட்டில்களைக் கொண்டுதான் இக்கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. கட்டுமானத்துக்காக ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் 1,700 பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளியலறை
பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட குளியலறை

இந்த பாட்டில்களில் கடல் மணல் நிரப்பப்பட்டு, பாட்டில்களின் வாய்ப்பகுதியில் பசை தடவி மூடுவதுடன், மேல் பகுதியிலும் பசையால் சீல் வைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் கலவைக்கு மத்தியில் செங்கல்களுக்குப் பதிலாக, இந்தப் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், சோதனை முயற்சியாக இந்தக் குளியலறை கட்டப்பட்டுள்ளது. இன்னும் 10 நாள்களில் இக்குளியலறை, பணியாளர்களின் பயன்பாட்டுக்கு வரும்” என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், ”செங்கற்களைப் பயன்படுத்தி குளியலறை கட்டினால் குறைந்தபட்சம் இரண்டரை முதல் 3 லட்சம் வரை செலவாகும். ஆனால், சுகாதார பணியாளர்கள் மூலம் சேமிக்கப்பட்ட இந்தக் காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு குளியலறை கட்டுவதன் மூலமாக மாநகராட்சிக்கு செலவு பாதியாகக் குறைகிறது. திட்டமிட்ட காலதந்துக்குள் பணியை விரைந்து முடிக்க முடிகிறது.

கடல் மணல் நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்
கடல் மணல் நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்

செங்கல்லைப் போன்று ஸ்திர தன்மையோடு, இருப்பதற்காக பாட்டிலினுள் கடல் மண் நிரப்பப்படுவதால் நீடித்த உறுதித்தன்மை கிடைக்கிறது. எங்களின் இந்த முதல் முயற்சி வெற்றி அடைந்தால், இதை முன்மாதிரியாகக் கொண்டு மாநகராட்சிக்குட்பட்ட பல இடங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குளியலறை, கழிப்பறை போன்ற சிறு கட்டடம் கட்டித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு