Published:Updated:

33 ஆண்டுகள்... 193 ஏக்கர் குளம்... தூர்வாரிய இளைஞர்கள்! - 12 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தண்ணீர்

கண்மாய் கரை பலப்படுத்தும் பணி
கண்மாய் கரை பலப்படுத்தும் பணி

தூத்துக்குடியில் இளைஞர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து 193 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் வரத்துக் கால்வாய்கள், குளங்களைச் சீரமைத்ததால் 12 ஆண்டுகளுக்குப் பின் தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ளது ஈராச்சி கிராமம். இங்கு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயமே முக்கியத் தொழிலான இக்கிராமத்தில் நெல், வாழையை முக்கியப் பயிராக பயிரிட்டு வந்தனர். இங்குள்ள கண்மாய் 193 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாய்க்கு சிதம்பரபுரம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை, கரிசல்குளம், சிவந்திப்பட்டி ஆகிய கிராமங்கள் வழியாக தண்ணீர் வரும்.

தூர்வாரிய வரத்துக் கால்வாயில்  தண்ணீர்
தூர்வாரிய வரத்துக் கால்வாயில் தண்ணீர்

கடந்த 33 ஆண்டுகளாக சிவந்திப்பட்டியிலிருந்து வரும் வரத்துக் கால்வாய், குளம், கண்மாய் உள்ளிட்ட எந்தவொரு நீர்நிலைகளும் தூர்வாரப்படவில்லை. இதனால், கடந்த 12 ஆண்டுகளாக கண்மாய்க்குத் தண்ணீர் வரத்தின்றி, மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை உருவானது. இதனால் படிப்படியாக குறைந்த இறவை சாகுபடியை விட்டுவிட்டு மானாவாரி சாகுபடிக்கு மாறினர்.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வாட்ஸ்அப் குழு மூலம் இணைந்து, 193 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாய் வரத்துக் கால்வாய்களை சீரமைத்ததால் 12 ஆண்டுகளுக்குப் பின் தற்போது கண்மாய் நிரம்பியுள்ளது. இதுகுறித்து ஈராச்சி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசினோம். ``முற்காலத்தில் எட்டயபுரம், பாஞ்சாலங்குறிச்சி ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த மன்னர்களின் இரண்டு ஆட்சி நடந்ததால்தான் எங்கள் கிராமத்துக்கு `ஈராச்சி’ என்று பெயர் வந்தது.

மழைநீர் தேங்கிய தெப்பக்குளம்
மழைநீர் தேங்கிய தெப்பக்குளம்

இங்கு 500 ஏக்கர் பாசன பரப்பு உள்ளது. நெல், வாழை, வெற்றிலை கொடிக்கால் ஆகியவை விளைந்த இடம். வரத்துக் கால்வாய், கண்மாய் தூர்வாரப்படாததால் மானாவாரி நிலம் போல் மாறிவிட்டன. இதனால், கண்மாய், வரத்துக்கால்வாய்களை தூர்வாரலாம் என முடிவு செய்தோம். கடந்த மாதம் எங்க கிராமத்திலுள்ள மரகதவள்ளி அம்மன் கோயில் முன்பு ஒன்றுகூடி, தூர்வாறுதல் சம்பந்தமாகப் பேசி முடிவு செய்தோம்.

`இதற்காகத்தான் பாடுபட்டோம், நம்பிக்கை வீண் போகவில்லை!' - 35 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரி

இதற்காக `ஈராச்சி கெத்து' என்ற வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தொடங்கினோம். இதில், வெளியூர்களில் வசிக்கும் எங்க கிராமத்தைச் சேர்ந்தவர்களையும் இணைத்தோம். தூர்வாறுதல், சீரமைத்தல் குறித்த எங்களது கருத்தைப் பதிவிட்டு, அனைவரின் ஒப்புதலைப் பெற்றோம். வெளியூர் நண்பர்கள் ரூ.75,000 வரை பணம் அனுப்பினார்கள். உள்ளூரிலுள்ள சில நண்பர்களும் பணம் கொடுத்தார்கள். பலர், உடலுழைப்பு செய்தனர். ஜே.சி.பி இயந்திரம் மூலம் மரகதவள்ளி அம்மன் கோயில் முன்புள்ள தெப்பம், ஊருக்கு வெளியே மற்றும் பள்ளிக்கூடத்துக்கு அருகிலுள்ள சிறிய குளங்கள் ஆகியவற்றைத் தூர்வாரினோம்.

கண்மாயில் நிரம்பிய மழைநீர்
கண்மாயில் நிரம்பிய மழைநீர்

அத்துடன் 193 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய கண்மாயின் வரத்துக் கால்வாய்களையும் தூர்வாரினோம். இதனால், கடந்த 10 நாள்களில் பெய்த மழையில் சிவந்திப்பட்டி வரத்துக் கால்வாய் மூலம் கண்மாய்க்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் கண்மாய் 50 சதவிகிதம் வரை நிரம்பியது. தொடர்ந்து பெய்யும் மழையால் முழுவதும் நிரம்பிவிடும்.

இதையடுத்து, விவசாயிகள் மகிழ்ச்சியில் மீண்டும் நெல், வாழை பயிரிட தங்களது நிலங்களை தயார்படுத்தி வருகின்றனர். டிராக்டர் உள்ளிட்ட உதவிகளை தாராளமாகச் செய்த கிராம மக்களின் ஒத்துழைப்பும் முக்கியமானது. ஆனால், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்க்குள் வளர்ந்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றினால் கண்டிப்பாக 2 போகம் விளைச்சல் கிடைக்கும்” என்றனர்.

தூர்வாரும் பணி
தூர்வாரும் பணி

சமூக ஊடகங்களை வைத்து பலவித குற்றச்செயல்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், ஈராச்சி கிராமத்து இளைஞர்கள், சமூக வலைதளங்களைப் பொழுதுபோக்கிற்கு மட்டும் பயன்படுத்தாமல் பொதுநலத்துக்காகப் பயன்படுத்தியது பாராட்டைப் பெற்றுள்ளது.

பின் செல்ல