கேரளா: ஊருக்குள் நுழைந்த புலி... ரேஞ்சர் முதுகில் பாய்ந்த பயங்கரம்... திக் திக் நிமிடங்கள்!

அதுவரை அமைதியாகப் பதுங்கியிருந்த புலி, இவர்கள் புதர் அருகில் சென்றதும் பயங்கர உறுமலுடன் பாய்ச்சலில் வெளியேறியது. களத்தில் இருந்தவர்கள் சிதறியடித்து ஓடினர்.
தமிழ்நாட்டின் முதுமலைப் புலிகள் காப்பகம், கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளாவின் முத்தங்கா காட்டுயிர் சரணாலயம் ஆகிய பகுதிகளே உலகில் வங்கப்புலிகள் அதிக எண்ணிக்கையில் வாழும் பகுதியாக உள்ளது.

வெளி மண்டல பகுதிகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். காட்டைவிட்டு வெளியே வரும் புலிகள் அவ்வப்போது மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்குகின்றன. புலி- மனித எதிர்கொள்ளல்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில், கேரள மாநிலம் வயநாடு சீதாகுன்னு குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு வாரமாகப் புலி நடமாட்டம் உள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் 4 வளர்ப்பு நாய்களை வேட்டையாடிக் கொண்டுச் சென்றுள்ளது. புலியின் நடமாட்டத்தை உறுதி செய்ய கேரள வனத்துறையினர் பொறுத்திய கேமராக்களில் குறிப்பிட்ட புலியின் உருவம் பதிவாகியுள்ளது.

சீதாகுன்னு குடியிருப்புப் பகுதியிலுள்ள ஒரு புதரில் புலி பதுங்கி இருப்பதை உறுதி செய்த வனத்துறையினர், காவல்துறை மற்றும் பொதுமக்கள் உதவியுடன் புலியை விரட்ட களமிறங்கினர்.
அதுவரை அமைதியாகப் பதுங்கியிருந்த புலி இவர்கள், புதர் அருகில் சென்றதும் பயங்கர உறுமலுடன் பாய்ச்சலில் வெளியேறியது. களத்தில் இருந்தவர்கள் சிதறியடித்து ஓடினர்.
அப்போது விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வனச்சரகர் சசிகுமார் மீது புலி பாய்ந்தது. இதில் அவரது முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு புலியை விரட்டினர்.

படுகாயமடைந்த வனச்சரகர் சசிகுமாரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், குறிப்பிட்ட அந்தப் புலியைப் பிடிக்க கூண்டு வைத்துள்ளனர்.