Published:Updated:

இறந்த புலியின் வயிற்றில் ஒரு செ.மீ அளவில் பிளேடு - ஊட்டியில் வனத்துறையினர் அதிர்ச்சி!

Sathish R
ரா.சதீஸ்குமார்

ஊட்டி அருகே வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்த புலியின் வயிற்றில் கூர்மையான பிளேடு இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புலியின் வயிற்றில் இருந்த பிளேடு துண்டு
புலியின் வயிற்றில் இருந்த பிளேடு துண்டு ( கே.அருண் )

உலகில் வங்கப்புலிகள் காடுகளில் அதிகம் வாழும் பகுதியாக நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலம் விளங்கிவருகிறது. 600 ச.கி.மீ பரப்பளவு கொண்ட முதுமலை புலிகள் காப்பகம், முதுமலையையொட்டியே கர்நாடக மாநில பந்திப்பூர், கேரள மாநில முத்தங்கா ஆகிய மூன்று புலிகள் காப்பகம் இணைந்த பகுதியாக உள்ளது. 2015-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் மட்டும் சுமார் 60 புலிகளுக்கு மேல் இருப்பது தெரியவந்தது. தற்போது முதுமலை புலிகள் காப்பக எல்லை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் புலிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்த புலி
வாயில் ரத்தம் கசிந்த நிலையில் இறந்த புலி
கே.அருண்

வேட்டை, விஷம் போன்ற காரணங்களால் அழிவின் விளிம்புக்குச் சென்ற புலி இனம் கடந்த சில ஆண்டுகளாக மெல்ல மீண்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மட்டும் அல்லாது பந்தலூர், கூடலூர், முக்குருத்தி, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் புலிகள் காணப்படுகின்றன. ஆட்கொல்லி என்ற பெயரில் கடந்த 5 ஆண்டுகளில் 3 புலிகள் சுட்டுக்கொல்லப்படன. மேலும், கீழ் கோத்தகிரி, நடுவட்டம் ஆகிய பகுதிகளில் 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.

இந்த நிலையில் ஊட்டி அருகேயுள்ள பார்சன்ஸ்வேலி அணையையொட்டிய பகுதியில் நேற்று முன்தினம் புலி ஒன்று இறந்து கிடப்பதை ரோந்து சென்ற வன ஊழியர்கள் பார்த்தனர். உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவத்தனர். வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்த்தபோது இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் புலி என்பது தெரியவந்தது. பின்னர், கால்நடை மருத்துவர்களை அழைத்து உடற்கூறு ஆய்வு மேற்கொண்டனர்.

இறந்த நிலையில் ஆண் புலி
இறந்த நிலையில் ஆண் புலி
கே.அருண்

அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் புலியின் வயிற்றில் ஒரு செ.மீ அளவுள்ள கூர்மையான பிளேடு துண்டு இருந்தன. அதுவரை வயது முதிர்வு அல்லது இறைச்சியில் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என நினைத்த வனத்துறைக்கு பேரதிர்ச்சியாக இருந்தது இந்தச் சம்பவம்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் குருசாமி கூறுகையில், “பார்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலி நஞ்சநாடு சுற்று வட்டார வனப்பகுதிகளில் தொடர்ச்சியாக நடமாடியுள்ளது. பிரேத பரிசோதனையின்போது அதன் வயிற்றில் பிளேடு இருந்தது. மேலும் நாடா புழுவும் இருந்தது. வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி சாப்பிட்டால் மட்டுமே நாடா புழு உருவாகும். இருப்பினும் பிரேத பரிசோதனைக்குப் பின்பே முழு விவரமும் தெரியவரும்” என்றார்.

இறந்த புலியின் குடல் பகுதி
இறந்த புலியின் குடல் பகுதி
கே.அருண்

பிரேத பரிசோதனையின்போது உடனிருந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறுகையில், ``பார்சன்ஸ்வேலி பகுதிக்கு அருகில் நஞ்சநாடு, தீட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் தீட்டுக்கல் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கு உள்ளது. இங்குள்ள உணவுக் கழிவுகளை உண்பதற்காகக் கட மான்கள், பன்றிகள் தொடர்ச்சியாக வருகின்றன. பார்சன்ஸ்வேலியில் இறந்த புலியின் உடலில் கட மான் இறைச்சியுடன் பிளேடு துண்டு இருந்தது. எனவே, தவறுதலாக மான் புற்களுடன் சேர்த்து பிளேடையும் விழுங்கி இருக்கலாம். மானை புலி இறையாக்கும்போது புலியின் வயற்றில் பிளேடு துண்டு சென்று குடல் அறுபட்டு இறந்திருக்க வாய்ப்பு உள்ளது” என்றார்.