Published:Updated:

International Tiger Day: பசுமை ஆற்றலால் மட்டுமல்ல; புலிகளைக் காப்பதன் மூலமாகவும் உலகைக் காக்கலாம்!

Tiger
Tiger ( Pixabay )

பசுமை ஆற்றல் உற்பத்தி எந்த அளவுக்கு காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறதோ, அந்த அளவுக்கான முக்கியமான பங்களிப்பை புலிகள் பாதுகாப்பு மூலமும் நம்மால் செய்ய முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இன்று சர்வதேச புலிகள் தினம்.

2010-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதியன்று ரஷ்யாவிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பல்வேறு நாடுகள் இணைந்து ஒரு சந்திப்பு நிகழ்த்தின. அதில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலி உடன்படிக்கை (Saint Petersburg Tiger Summit) கையெழுத்தானது. குறைந்துவரும் உலக அளவிலான புலிகளின் எண்ணிக்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் புலிகளின் இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதுமே அந்த உடன்படிக்கையின் நோக்கம். மேலும், புலிகளின் வாழ்விடங்கள் அமைந்துள்ள பல்வேறு நாடுகள், 2022-ம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டிலுள்ள புலிகளின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவதாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டன.

வங்கப் புலி
வங்கப் புலி
மாதிரி படம்

கடந்த ஜூலை 23-ம் தேதியன்று இத்தாலியிலுள்ள நேபிள்ஸில் நடந்த காலநிலை மாற்றத்துக்கான ஜி20 நாடுகளின் சந்திப்பில், இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் புபேந்தர் யாதவ், ``வளரும் நாடுகளுக்கான காலநிலை நிதியைக் கொடுப்பது மற்றும் அதுசார்ந்த தொழில்நுட்பங்களைக் குறைந்த விலையில் கொடுப்பது ஆகியவற்றுக்காக நீண்ட காலமாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பணக்கார நாடுகள் இதுவரை அதில் தோற்றுவிட்டன" என்று கூறியிருந்தார்.

அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு 2050-ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய வெளீயிடு இலக்கை அடைவோம் என்று உறுதியளிப்பதில் பெரிய சிக்கல் எதுவும் இல்லை. ஆனால், நம்மைப் போன்ற வளரும் நாடுகளிடையே, நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கான திட்டங்கள் மற்றும் அமலாக்கம் எப்படியிருக்கப்போகிறது என்பதுதான் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

கனடாவிலுள்ள லைட்டன் என்ற சிறுநகரம் காட்டுத்தீ விபத்துகளில் சிக்கிப் பெருஞ்சேதங்களுக்கு உள்ளானது. பனி மற்றும் குளிர்ச்சி நிறைந்த சைபீரிய காட்டுப் பகுதிகளிலும்கூட 1.5 மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலம் காட்டுத்தீக்கு இரையானது. சீனாவின் ஹெனான் மாகாணத்தில் மூன்றே நாள்களில் 700 மி.மீ மழைப்பொழிவு பதிவானது. மகாராஷ்டிராவில், ரத்னகிரி, ராய்கார், மகாபலேஷ்வர் ஆகிய பகுதிகளில் ஒரே நாளில் பதிவான 500 மிமீ மழைப்பொழிவு, அப்பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதங்களை உண்டாக்கியது.

வெள்ளம்/ Representational Image
வெள்ளம்/ Representational Image
லித்தியம் பேட்டரி வணிகத்திலும் தொடரும் சீன ஆதிக்கம்; 2030 இலக்கை அடையுமா இந்தியா?

இதெல்லாம், கடந்த ஒரே மாதத்தில் காலநிலை மாற்றத்தால் உலக நாடுகள் எதிர்கொண்ட பாதிப்புகளின் ஒரு துளி மட்டுமே. இப்படியான காலநிலை பிரச்னைகளிலிருந்து மீண்டு வருவதற்கு, உலக மக்களிடையே இருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க ஆயுதமாக பசுமை ஆற்றல் கூறப்படுகிறது. அந்த வரிசையில் இந்தியாவும் 2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் மின்சாரத்தை பசுமை ஆற்றலில் உற்பத்தி செய்வதற்கான பாதையில் திட்டமிட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆம், இது நல்ல முன்னேற்றம்தான். ஆனால், இதற்கும் சர்வதேச புலிகள் தினத்துக்கும் என்ன தொடர்பு?

2030-ம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் அளவுக்கு பசுமை ஆற்றல் உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், அதேநேரத்தில் இந்தியாவில் இதுவரை சீரழிக்கப்பட்டுள்ள 26 மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலத்தை மீட்டெடுத்தால் 2.5 முதல் 5 ஜிகா டன் வரையிலான கரிம வாயுவை அவை கிரகித்துக்கொள்ளும். அதேநேரம், இருக்கின்ற இயற்கையான காடுகளைக் காப்பாற்றுவதன் மூலம் எதிர்கால கரிம தன்மயமாக்கல் செயல்பாடுகளின் நீட்சி துண்டிக்கப்படுவதைத் தடுக்க முடியும்.

புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல்
புதுப்பிக்கத்தக்க பசுமை ஆற்றல்
மாதிரி படம்
`தலைக்குமேல் தொங்கும் காலநிலை மாற்றம் எனும் கத்தி!' - இனியாவது சூரிய ஆற்றலை ஊக்குவிக்குமா அரசு?

அதோடு, இந்த இரண்டையுமே சாத்தியப்படுத்தக்கூடிய திறன் புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இருக்கிறது. இந்திய கானக அளவை நிறுவனத்தின் அறிக்கைப்படி, கடந்த சில ஆண்டுகளில் பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதிகளுக்குள் அதிகரித்துள்ள பசுமைப் பரப்பைவிட, அதற்கு வெளியே மனிதக் குடியிருப்புகளுக்கு இடையிலும் வேளாண் காடுகளிலும் அதிகரித்துள்ள பசுமை பரப்புதான் அதிகம். இதில், பாதுகாக்கப்பட்ட காடுகளின் பரப்பளவில் சுருங்கிப் போன நிலப்பரப்புகளில் பெரும்பான்மையானது புலிகளின் வாழ்விடமாகச் செயல்படுபவை.

2018-19 புலிகள் கணக்கெடுப்பில், 20 மாநிலங்களிலுள்ள அவற்றின் 3,81,400 சதுர கி.மீ வாழ்விடம் கணக்கெடுக்கப்பட்டது. புலிகள் கணக்கெடுப்பு தொடங்கியதிலிருந்து, முதல் முறையாக, துணை-வேட்டையாடிகள் (co-predators), இரை உயிரினங்கள் ஆகியவை அதிகரித்திருந்தது. கின்னஸில் இடம் பிடிக்கும் அளவுக்கு 26,838 கேமரா பொறிகள் பொருத்தப்பட்டன. அதன்மூலம், உலக அளவிலான 13 நாடுகளில் வாழும் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 70 சதவிகிதம் இந்தியாவில்தான் இருப்பதும் உறுதியானது.

இந்தியாவில் தற்போது, 52 புலிகள் காப்பிடங்கள் இருக்கின்றன. அந்தக் காப்பிடங்களின் பரப்பளவு, நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 2.6 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. சரிஸ்கா போன்ற புலிகள் காப்பிடங்களிலிருந்து புலிகள் காணாமல் போவது அதிகரித்தபோது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, அந்தப் பிரச்னையை சரிசெய்வதற்கான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2006-ம் ஆண்டில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தை, 1972-ம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தில் இணைப்பதற்கான சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

புலிகளின் வாழிடங்களை மேலாண்மை செய்யும் முறைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள், மாறிக்கொண்டிருக்கும் நிலப்பகுதிகள் மற்றும் நிலப் பயன்பாடு மீதான ஆய்வுகள் ஆகியவை அந்த முன்னேற்றத்துக்கு வழி வகுத்தன.

புலி
புலி
மாதிரி படம்

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் சூழலியல் ரீதியாகப் பார்க்கையில், ஒரு வாழ்விடத்தில் புலிகள் நீண்டகாலத்துக்குப் பிழைத்திருக்க வேண்டுமெனில், குறைந்தபட்சம் 1,200 சதுர கி.மீ மனிதத் தலையீடுகளற்ற, இயற்கையான வாழ்விடமும், போதுமான இரை உயிரினங்களும் இருக்கவேண்டும்.

ஆனால், ``2014 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி மட்டுமே சுமார் 527 சதுர கி.மீ புலிகளின் வாழ்விடத்தை இழந்துள்ளது. இதே காலகட்டத்தில் வடகிழக்கு மாநிலங்கள் மொத்தமாக இழந்த புலிகளின் வாழ்விட அளவு சுமார் 6,000 சதுர கி.மீ" என்கிறார் கர்நாடக வனத்துறையின் முன்னாள் தலைமை வன அலுவலர் பி.கே.சிங். புலிகளின் வாழ்விட அழிவு என்பது, காடுகளின் தரம் சீர்குலைவது மற்றும் ஒரு காடு தன் கரிம தன்மயமாக்கல் திறனை இழப்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

காட்டுயிர் பாதுகாப்பில் புலிகள் முதன்மை உயிரினமாகக் (flagship species) கருதப்படுகின்றன. அதன் இருப்பைப் பாதுகாப்பது, குறிப்பிட்ட நிலத்தின் தாவரம் மற்றும் காட்டுயிர் வளம் உட்பட பல்லுயிரிய வளத்தை முழுமையாகப் பாதுகாப்பதற்கு வழி வகுக்கும் என்று காட்டுயிர் பாதுகாப்பு துறையில் குறிப்பிடப்படுகிறது. அப்படியிருக்கும்போது, அவற்றின் வாழ்விடம் அதிகரிப்பதால், கரிம வாயுவை கிரகித்துக்கொண்டு பசுமை ஆற்றல் மூலம் குறைக்கப்படும் கரிம வெளியீட்டுக்கு நிகரான கரிமத்தை அவை தன்னுள் புதைத்து வளிமண்டலத்தைச் சுத்தப்படுத்துகின்றன. ஆனால், அத்தகைய காடுகளின் இயல்புநிலையைக் குலைப்பதில், புலிகளின் வாழிட இழப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஆகையால், காடுகளை ஒட்டியுள்ள கிராமப்புற மக்களின் ஒத்துழைப்போடு, இயற்கையான காடுகளில் அமைந்துள்ள புலிகளின் வாழிடங்களில் ஊடுருவல்கள் ஏதும் நிகழாத வண்ணம் பாதுகாத்து, அவற்றின் மூலம் கரிம வாயுவை கிரகித்தல் போன்ற சூழலியல் சேவைகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

புலி
புலி
மாதிரி படம்
புலிகள் அதிகரித்துள்ளன... ஆனால் அவற்றுக்கான வாழிடம்..? - சர்வதேசப் புலிகள் தினப் பகிர்வு!

புலிகளுடைய எண்ணிக்கையில் கவனம் செலுத்தியதைப் போலவே, அதிகரிக்கும் புலிகளுக்குப் போதுமான வாழிடங்கள் இருப்பதையும் உறுதி செய்வதற்கு, மாநில அரசுகளும் ஒன்றிய அரசும் இணைந்து நிலவியல் ரீதியிலான பாதுகாப்புத் திட்டத்தை வகுக்க வேண்டும். அந்தத் திட்டமும் மையப்படுத்தப்படாததாக, அந்தந்த உள்ளூர் மக்களின் ஒத்துழைப்பை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேற்குத்தொடர்ச்சி மலை சூழலியல் ஆய்வறிக்கையில், சூழலியல் ஆய்வாளர் மாதவ் காட்கில் குறிப்பிட்டிருப்பதைப் போல், ``ஒரு மண்ணின் மக்களை அந்த மண்ணில் நீங்கள் செய்யும் சூழலியல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ளடக்காமல் உங்களால் அந்தப் பணியைச் சிறப்பாகச் செய்துவிட முடியாது."

பசுமை ஆற்றல் உற்பத்தி எந்த அளவுக்கு காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறதோ, அந்த அளவுக்கான முக்கியமான பங்களிப்பை புலிகள் பாதுகாப்பு மூலமும் நம்மால் செய்ய முடியும். அதற்கு நாம் முதன்மையாகச் செய்ய வேண்டியது புலிகளின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு