Published:Updated:

ஸ்பைடர் தாவரம், பீஸ் வேக்ஸ் மெழுகுவத்தி... வீட்டில் சுத்தமான காற்று உலாவ டிப்ஸ்! 

நம் வீட்டிலிருக்கும் காற்றை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை. அதற்கான சில டிப்ஸ் இதோ!

Indoor Plant
Indoor Plant ( Image by PublicDomainPictures from Pixabay )

ஒவ்வொரு வருடமும் 4.2 மில்லியன் மக்கள், காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்களால் உயிரிழக்கிறார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. காற்றில் மாசு அதிகரிப்பதால், பக்கவாதம், இதய நோய், நுரையீரல் புற்று, ஆஸ்துமா எனப் பல நோய்கள் தாக்க வாய்ப்பு உள்ளதாம். நாம் சுவாசிக்கும் காற்றுதான் நம் உடம்பிலுள்ள 70% நச்சுத்தன்மையை வெளியேற்றுகிறது. நம் வீட்டிலிருக்கும் காற்றை சுத்தமாக வைத்திருப்பது நம் கடமை. அதற்கான சில டிப்ஸ் இதோ!

தாவரங்கள்
தாவரங்கள்

வீட்டில் வளர்க்கக்கூடிய சில தாவரங்கள்

வீட்டினுள் தாவரங்களை வளர்த்தால், அவை நச்சுத்தன்மையுள்ள வாயுக்களைக் கிரகித்துக்கொண்டு, அந்த இடத்தை சுத்தமான ஆக்சிஜனால் நிரப்புகின்றன. ஆகவே, வீட்டுக்குள் தாவரங்களை அதிகமாக வளர்த்தால், தூய்மையான ஆக்சிஜனின் அளவு கூடும்.

பீஸ் லில்லி ( Peace Lily)

இது, நல்ல மணம் வீசுகின்ற, பூ பூக்கும் தாவரமாகும். காற்றிலுள்ள மாசுபாட்டை நீக்கி, சுத்தமான காற்றைக் கொடுக்க வல்லது. ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), அமோனியா, பென்சீன் (Benzene) போன்ற நச்சுகளைச் சுத்தப்படுத்தும் தாவரமான பீஸ் லில்லியை, வீட்டில் நிழல் படர்ந்த இடத்தில் வளர்ப்பது நல்லது.

வீட்டினுள் வளர்க்கும் தாவரங்கள்
வீட்டினுள் வளர்க்கும் தாவரங்கள்

ஸ்பைடர் தாவரம்

இது, காற்றை மிகச் சிறந்த முறையில் தூய்மைப்படுத்தும். எந்தச் சூழ்நிலையிலும் நன்கு வளரும் ஸ்பைடர் தாவரம், ஃபார்மால்டிஹைடு, Xylene போன்ற நச்சுகளைச் சுத்தப்படுத்தும்.

மருள் (ஸ்நேக் பிளாண்ட்)

பேரைப் பார்த்து பயப்பட வேண்டாம். பல நாள்களுக்குத் தண்ணீர் இன்றி வாழக்கூடியது. நாசா ஆராய்ச்சி மையத்தால் சிறந்த காற்று சுத்திகரிப்புத் தாவரமாக அடையாளம் காணப்பட்ட மருள் செடி, நைட்ரஜன் ஆக்சைடு, ஃபார்மால்டிஹைடு ஆகியவற்றைக் கிரகித்து, ஆக்சிஜனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. குறைந்த வெளிச்சத்தில் நன்கு வளரக்கூடிய இது, படுக்கையறையில் வைக்க ஏற்ற தாவரமாகும்.

ஃபிகஸ் (Ficus)

ஃபிகஸ் அல்லது weeping fig என்றழைக்கப்படும் இத்தாவரம், பென்சின், ஃபார்மால்டிஹைட் (formaldehyde), Tricholoro ethyle ஆகியவற்றை அகற்ற வல்லது.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

பீஸ் வேக்ஸ் மெழுகுவர்த்தி (Bees wax Candle)

நாம் சாதாரணமாக உபயோகிக்கும் மெழுகுவத்திகள், பராஃபின்னில் (Paraffin) தயாரிக்கப்படுகின்றன. இவை, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய பென்சினையும் மூளை பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய டொலூன் (Toluene) என்ற நஞ்சையும் வெளியிடக்கூடியது. இதற்கு மாற்றாக, பீஸ் வேக்ஸ் கேண்டில் என்ற சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மெழுகுவத்தியைப் பயன்படுத்தலாம். நல்ல மணத்துடன் இருக்கக்கூடிய இந்த மெழுகுவத்திகள், காற்றின் நச்சுத்தன்மையை அகற்ற வல்லது. இதில், எதிர்மின் அயனிகள் (Negative ions) உள்ளன. காற்றிலுள்ள நச்சு வாயுக்களில் நேர்மின் அயனிகள் (Positive ions) உள்ளன. இவை இரண்டும் கலந்து எடை அதிகமாக மாறி, காற்றில் மிதக்க முடியாமல், தரையில் விழுந்துவிடுகின்றன. இதனால், வீட்டைச் சுத்தம் செய்யும்போது குப்பைக்குச் செல்கின்றன. ஆக, பீஸ் வேக்ஸ் உபயோகிப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.

Bees wax Candle
Bees wax Candle
வீட்டுக்குள்ளிருக்கும் காற்று மாசு எவ்வளவு ஆபத்தானது தெரியுமா? #ExpertOpinion

உப்பு மெழுகுவத்தி (Salt Lamp)

நாம் கடற்கரைக்குச் சென்றாலே ஒரு மன அமைதியை உணர்வோம். அதற்கு, காற்றில் கலந்திருக்கும் உப்பும் முதன்மையான காரணம். பீஸ் வேக்ஸ் மெழுகுவத்தி போலவே, இதிலும் எதிர்மின் அயனிகள் இருப்பதால், இது காற்றைச் சுத்தமாக்குகிறது. நம்மை ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்கிறது.

அத்தியாவசிய எண்ணெய்கள்

யூகலிப்டஸ், லெமன்கிராஸ், லாவண்டர், பெப்பர்மின்ட் போன்ற எண்ணெய்கள், பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படக்கூடியன (Anti bacterial). இவை, காற்றை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல் சிறந்த நறுமணத்தையும் கொடுக்கும்.

குளிர் காலமானாலும் கோடை காலமானாலும், ஜன்னல் கதவுகளைத் திறந்துவைக்க வேண்டும். அதனால் காற்று தாராளமாக உள்நுழைந்து வெளியே செல்ல முடியும். வாசல்கதவை குறிப்பிட்ட இடைவெளியில் திறந்துவைத்து, காற்று உள்ளே வரச் செய்ய வேண்டும். சமையலறையில் சமைக்கும்போது ஏற்படும் புகையை வெளித்தள்ள, அதற்கான மின்விசிறியைப் பயன்படுத்த வேண்டும். ஜன்னல் கம்பிகளை வாரம் ஒருமுறையேனும் சுத்தம் செய்ய வேண்டும். ஜன்னல் கதவுகளுக்கு உபயோகிக்கும் திரைச்சீலைகளை அவ்வப்போது மாற்ற வேண்டும். சுத்தப்படுத்தாமல் நாள் கணக்கில் தொங்கும் திரைச்சீலைகளில் தூசு அதிகம் படிந்து, நெஞ்சக நோய் வர வழிவகுக்கும்.

சுத்தமான காற்று
சுத்தமான காற்று
டெல்லி காற்று மாசுபாட்டால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்குமா?

மின்விசிறி, குளிர்சாதனங்கள் போன்றவற்றைக் கால அட்டவணை போட்டு, குறிப்பிட்ட இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வீடு சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா இல்லையா என்பதை அவர்கள் வீட்டு மின்விசிறியை வைத்துச் சொல்லிவிடலாம். மின்விசிறியில், குளிர்சாதனங்களில், ஜன்னல் கம்பிகளில் அடையும் தூசு, காற்றை மாசுபடுத்தும். செல்லப் பிராணிகள் வளர்ப்போர், கூடுதல் அக்கறை எடுத்து வீட்டை சுத்தம்செய்ய வேண்டும்.

படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், கால் மிதியடிகள் போன்றவற்றையும் வாரத்தில் ஓரிரு முறை சுத்தம்செய்வது அவசியம். குளிர்சாதன அறையில், அறையின் அளவிற்கு ஏற்றவாறுதான் படுப்பவர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும்.

மூன்று பேருக்கான அறையில் ஆறு பேர் படுத்தால், ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். கூடுமான வரை குளிர்சாதனத்தைத் தவிர்த்து, நல்ல காற்றோட்டத்துடன் வாழப் பழக வேண்டும். இன்றைய காலகட்டத்தில், அப்பார்ட்மென்டுகளில் வசிக்கவேண்டிய கட்டாயச் சூழல் உள்ளது. பெரும்பாலானோர் ஜன்னல் கதவு, வாசல் கதவுகளைத் திறப்பதே இல்லை. இந்தச் சூழ்நிலை, குழந்தைகளின் சுவாசத்தைப் பெரிதும் பாதிக்கும்.

காற்று
காற்று
இங்கு சுத்தமான காற்று விற்கப்படும்... விலை அதிகமில்லையாம்..! வாங்குவீர்களா?

தூசு சேரவிடாமல் பழைய பொருள்களை அவ்வப்போது வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும். காற்றை சுத்தப்படுத்தும் கருவியையும் (Air purifier) பயன்படுத்தலாம். 2,000 ரூபாயிலிருந்து 70,000 ரூபாய் வரை அவை கிடைக்கின்றன. ஒவ்வாமையை ஏற்படுத்தும் பேக்டீரியா, வைரஸ் போன்றவற்றிலிருந்து பாதுகாக்க, தரமான காற்று தேவை. சுத்தமான காற்றைத் தரும் சுகாதாரமான வாழ்க்கை நம் கையில்தான் இருக்கிறது.

மேலே கூறிய டிப்ஸ்களைப் பின்பற்றி வீட்டுக்குள் சுழலும் காற்றைச் சுத்தம்செய்துதான் பாருங்களேன்... உங்கள் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியமும் மேம்படுவதை உணர்வீர்கள்.

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |