Published:Updated:

மியாவாக்கி முறையில் ஒரு வருடத்தில் 6,000 மரக்கன்றுகள்... 20 இளைஞர்களின் `அடடே' முயற்சி!

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 20 இளைஞர்கள் ஒன்றுகூடி ஏரிக்கரையோரங்களில் 6,000 அதிகமான மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலக அளவில் மியாவாக்கி முறையில் குறுங்காடு வளர்ப்பு அதிகமானோரால் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவக்கி (Akira Miyawaki) என்பவர்தான் `செயற்கையான அடர் காடு' அல்லது `குறுங்காடு' வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார். அவர் பெயரில்தான் இம்முறை `மியாவாக்கி' என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் வளரும் மரங்கள் இயல்பான மரங்களைவிட அதிகமான வேகத்தில் வளரக் கூடியவை. உதாரணமாக, இயல்பாகவே ஒரு மரம் ஓராண்டில் 5 அடி வளருமென்றால், மியாவாக்கி முறையில் 10 அடிக்கும் மேல் வளரும். அழிந்துவரும் வனப்பரப்பை ஊக்குவிக்க இந்த முறை அதிகமாகப் பின்பற்றப்படுகிறது. இதை ஒருமுறை நடவு செய்துவிட்டால் பின்னர் பராமரிப்பிற்கு அதிக சிரமம் எடுத்துப் பராமரிக்கத் தேவையில்லை. இந்த முறையை கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு அமைப்புகள் இந்தியாவில் செயல்படுத்த ஆரம்பித்துள்ளன. தமிழ்நாட்டிலும் தன்னார்வ அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் எனப் பல தரப்பினரும் குறுங்காடு வளர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் 20 இளைஞர்கள் ஒன்றுகூடி ஏரிக்கரையோரங்களில் 6,000 அதிகமான மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். இதைப் பொறுப்பேற்று நடத்தி வரும் ஆரணி பசுமை இயக்கத்தின் செயலாளர் மகேந்திரனிடம் பேசினோம்.

மியாவாக்கி காடு
மியாவாக்கி காடு

``ஆரணியில இருந்து சேவூர் போற வழியில அனந்தபுரி ஏரி இருக்கு. இந்த ஏரி கொஞ்ச நாளா தூர்வாரப்படாமல் முட்புதர்கள் மண்டிப்போய் கிடந்துச்சு. 15 வருஷத்துக்கு முன்னால, இந்த ஏரிக்கு நடுப்பகுதியில பைபாஸ் ரோடு போட்டாங்க. அப்போ அவங்க தேவைக்காக எடுத்த மண் போக மீத மண்ணை ஏரிக்கு நடுவுல திட்டு மாதிரி அமைச்சுட்டு போயிட்டாங்க. அதுக்குப் பின்னால இந்தக் கரையில் முள் மரங்கள் முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. இதைப் பார்த்து இந்தப் பகுதியில இருக்குற இளைஞர்கள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து `ஆரணி பசுமை இயக்கம்'னு ஆரம்பிச்சோம். இயக்கம் சார்புல இந்த முள் மரங்களை எடுத்துட்டு மரங்களை வைக்கலாம்னு முடிவு செஞ்சோம். அப்போதான் `மியாவாக்கி' முறை பத்தி எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. அதுக்காகச் சும்மா கிடந்த திட்டைப் பயன்படுத்தலாம்னு முடிவு செஞ்சோம். கடந்த வருஷம் ஆகஸ்ட் மாதம் இதுக்கான வேலையில் இறங்குனோம். மாவட்ட ஆட்சியர்கிட்ட அனுமதி வாங்கி, திட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம். முதலில் 20 அடி நீளம், 600 மீ அகலம் கொண்ட இடத்தைத் தேர்வு செய்து, அதுல மரங்களை நடவு செய்தோம்.

மாவட்ட ஆட்சியரும், அமைச்சரும் வந்து ஆரம்பிச்சு வச்சாங்க. மியாவாக்கி முறையில கருநீர் மருது, வேம்பு, மலை வேம்பு, புங்கன், வேங்கை, குமிழ், மகோகனி, மகிழம், பூவரசன், இலுப்பை, சந்தனம், செம்மரம்னு மொத்தம் 34 வகையான நாட்டு மரங்களை நடவு செய்திருக்கோம். அதுக்கப்புறம் ஏரிக்கரையோரங்களிலேயும் திட்டுலேயும் 3,000 பனை விதைகளை நடவு செய்திருக்கோம். இப்போ மரங்கள் எல்லாம் பத்தடிக்கு மேல வளர்ந்து நிற்குது. அப்போ இருந்து இப்போ வரைக்கும் சுமார் 6,000 மரங்கள் இருக்கு. அதனால இந்த ஏரியே இப்போ பசுமையா இருக்கு.

மரக்கன்று நடுதல்
மரக்கன்று நடுதல்

இந்தப் பகுதியில் இருக்கிற எங்க இயக்கத்தோட இளைஞர்கள் காலை, மாலைனு ரெண்டு நேரமும் மரங்களைப் பார்த்துக்குவாங்க. சின்ன பசங்களும் மரம் வளர்க்குறதுக்குப் பல விதங்களில் உதவியா இருக்காங்க. இந்தப் பகுதியில் இருக்கிற எல்லோரும் மரங்களைப் பார்த்தா, நடவு பண்ணி 2 வருஷம் ஆன மரங்கள் மாதிரி இருக்குனு சொல்றாங்க. இதையெல்லாம் கேட்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. மியாவாக்கி முறையில் காடுகளை உருவாக்கத் தேவையானது 2 விஷயம்தான்.

ஒண்ணு காலியிடம், ரெண்டாவது கழிவுகள், குப்பைகள். இந்த ரெண்டும் நம் ஊர்ல அதிகமாவே கிடைக்குது. அதை முறையா பயன்படுத்துனா, மியாவாக்கி முறையில் குட்டிக் குட்டி காடுகளை உருவாக்கலாம். இந்த முறையில், நாட்டு மரங்களை நடுறது ரொம்ப நல்லது. அதேபோல சின்ன செடியாவே நடவு செய்யலாம். இந்த மரங்கள் கொடுத்த ஊக்கம், ஆரணியைச் சுற்றி இருக்குற பள்ளிகள், தொண்டு நிறுவனங்களுக்கும் மரத்தை நட்டு கொடுத்துகிட்டிருக்கோம். மாணவர்களுக்குத் தனியா இதுபத்தின பயிற்சிகளும் கொடுத்துக்கிட்டு வர்றோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறைந்த அளவு இடமா இருந்தாலும், அதுல நடவு பண்ணியிருக்கிற மரங்கள் எல்லாமே நாட்டு வகை மரங்கள்தான். இந்த அடர்காடுகள் வளர்க்குறதால இந்தப் பகுதியில இருக்குற சுற்றுச்சூழல் இப்போ நல்லாவே இருக்கறதோட, ஏரியும் சுத்தமா இருக்குது. அடுத்தகட்டமா மாவட்ட அளவுல இந்த அடர்காடு வளர்ப்பை எடுத்துக்கிட்டு போகப்போறோம்" என்றார், மகேந்திரன்.

மியாவாக்கி காடு உருவாக்கிய குழு
மியாவாக்கி காடு உருவாக்கிய குழு

தமிழகத்திலும் பல இடங்களில் அவரவர் வைத்துள்ள இடத்துக்கு ஏற்ப மியாவாக்கி முறையில் குறுங்காட்டை அமைத்து வருகிறார்கள். மியாவாக்கி முறைக்குக் குறைந்த இடமே போதுமானது என்பதால், எவரும் இதை முயற்சி செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு