Published:Updated:

T23 புலி: `சிகிச்சைக்குப் பின் வண்டலூர் பூங்காவில் வைத்து பராமரிக்கப்படும்!' - வனத்துறை அமைச்சர்

கடந்த 7 ஆண்டுகளில் நீலகிரியில் மனிதர்களை தாக்கியதாக 3 புலிகள் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கும் நிலையில், முதல் முறையாக ஒரு புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்திருக்கிறார்கள்.

மனிதர்களை தாக்கும் புலியை சுட்டுக் கொல்வது ஒன்று மட்டுமே தீர்வாக கருதப்பட்டு வந்த நிலையில், நீலகிரியில் முதல் முறையாக ஒரு புலிக்கு மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்து சாதித்துக் காட்டியிருக்கிறது நமது வனத்துறை. காயம்‌ காரணமாக வேட்டைத் திறன் குறைந்த டி-23 என எண்ணிடப்பட்ட 13 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் புலி இரண்டு மாதங்களாக கால்நடைகளை தாக்கி வந்தது.

டி23 புலி தேடுதல் வேட்டை
டி23 புலி தேடுதல் வேட்டை
பிடிபட்டது T23 புலி; முடிவுக்கு வந்தது வனத்துறையினரின் 21 நாள் போராட்டம்; கடைசி நேரப் பரபரப்பு!

கடந்த மாத இறுதியில் தேவன் எஸ்டேட்டில் கால்நடை மேய்த்துக் கொண்டிருந்த சந்திரன் என்ற நபரை தாக்கிக் கொன்றது. மேலும் இந்த மாதம் முதல் தேதியன்று மசினகுடி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பசவன் என்ற பழங்குடியினரைத் தாக்கிக் கொன்றதோடு அவரது உடல் பாகங்களையும் தின்றது. பொது மக்களின் போராட்டம் காரணமாக இந்தப் புலியை சுட்டுக் கொல்லவே வனத்துறையினர் முதலில் களமிறங்கினர். இந்த முடிவு பெரும்‌ சர்ச்சையை ஏற்படுத்தி சென்னை உயர்நீதிமன்றம் வரை விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த முடிவை கைவிட்டு, மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கும் சவாலான பணியை வனத்துறை ஏற்றுக்கொண்டது.

தேவன் எஸ்டேட், மேஃபீல்டு, மசினகுடி, சிங்காரா, ஓம்பெட்டா, போஸ்பாரா எனப் பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டிருந்த இந்தப் புலியை இரவு பகலாக பெரும்படையே பின்தொடர்ந்து கொண்டிருந்தது. நேற்று நள்ளிரவில் மசினகுடி பகுதியில் இந்த டி23 புலியின் நடமாட்டம் தென்பட்டதைத் தொடர்ந்து மயக்க ஊசி செலுத்தி முயன்றனர். புதர்‌ மறைவில் பதுங்கிய புலியை விடிய விடிய தேடியும் கண்டுபிடிக்க முடியாத சூழலே நிலவியது.

டி23 புலி
டி23 புலி

நேற்று காலையில் மசினகுடி பகுதியில் மீண்டும் தென்பட்ட டி23 புலியை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். உதயன் மற்றும் ஸ்ரீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் மீது அமர்ந்து புலியின் அருகில் சென்ற‌ கால்நடை மருத்துவர்கள் மதியம் 2 மணி வாக்கில் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை செலுத்தினர். சிறிது நேரத்தில் மயக்கமடைந்த புலியின் அருகில் சென்று துண்டால் கண்களை மூடி கட்டினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மயக்கம்‌ தெளிவதற்குள் புலியை கூண்டுக்குள் அடைத்தனர். புலியின் உடலில் இருந்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனடியாக வாகனத்தில் ஏற்றி மைசூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிகிச்சை‌ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 21 நாள்களாக போக்கு‌ காட்டி வந்த டி23 புலியை உயிருடன் பிடித்த குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

டி23 புலி
டி23 புலி
15 கால்நடைகள், 2 மனிதர்களைக் காவு வாங்கிய Man-eater T23 புலி உருவானது எப்படி?

பிடிபட்ட டி23 குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ``நீலகிரி வரலாற்றில் ஆட்கொல்லி புலிகளை சுட்டுக் கொன்ற சம்பவங்கள் மட்டுமே நடைபெற்றிருக்கின்றன. முதல் முறையாக ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டப் பின்னர் வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு அனுப்பி வைத்து அங்கு பராமரிக்கப்படும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு