Published:Updated:

பிளாஸ்டிக் தடை: 25 ஆண்டுகளாக யாரும் செய்யாததை செய்து முடிப்பாரா ஸ்டாலின்?

`பிளாஸ்டிக் தடை' என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கும் வரும்போதும், முதல்வர்கள் மாறும்போதும் சட்டமன்றத்தையே அதிர வைக்கும் ஒன்றாகவே இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``அடுத்தத் தடவை வரும்போது கோவிச்சுக்காம வீட்டுல இருந்து பை எடுத்துக்கிட்டு வந்துடுங்கம்மா. பிளாஸ்டிக் கவர் வெச்சிருக்கக்கூடாதுனு கெடுபிடி ஜாஸ்தியா இருக்கு'' - கடந்த சில தினங்களுக்கு முன்பு காய்கறி கடைக்குச் சென்றபோது, அந்த அக்கா அன்போடு இப்படிக் கேட்டுக் கொண்டார்.
இங்கு மட்டுமல்ல, மட்டன் கடை, சிக்கன் கடை, மளிகைக்கடை என்று எங்கு திரும்பினாலும் இப்போது இப்படி அன்போடு கேட்டுக் கொள்வது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

`அட, இதே குரலை எப்பவோ கேட்ட மாதிரி இருக்கே' என்று தோன்றுகிறதுதானே. அதிகமில்லை, இரண்டு வருடங்களுக்கு முன்பு, அதாவது ஜனவரி 2019-ல் நாம் கேட்ட அதே குரல்தான். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர்... இப்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்.
`பிளாஸ்டிக் தடை...' என்கிற பெயரில் மறுபடியும் மிரட்டத் தொடங்கியுள்ளனர் அதிகாரிகள். மிரளத் தொடங்கியுள்ளனர் வியாபாரிகள்.

பிளாஸ்டிக் பை
பிளாஸ்டிக் பை
ஓட்டை விழுந்த கப்பலில் தண்ணீரை அள்ளி கொண்டிருக்கிறோம்! - விழிப்புணர்வு பதிவு #MyVikatan

`பிளாஸ்டிக் தடை' என்பது கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கும் வரும்போதும், முதல்வர்கள் மாறும்போதும் சட்டமன்றத்தையே அதிர வைக்கும் ஒன்றாகவே இருக்கிறது. அதேசமயம், பிளாஸ்டிக் பொருள்களின் உற்பத்தியும் பயன்பாடும் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே இருப்பதுதான் நிதர்சனம். இப்படி `தடை' என்று குரல் கொடுப்பதன் பின்னணியே பணம் பண்ணும் வேலை என்பதுதான் நிதர்சனமோ... நிதர்சனம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, `மண்வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க, ஜனவரி 2019 முதல் யூஸ் அண்ட் த்ரோ பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது, சேமித்து வைப்பது, விற்பனை செய்வது, பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது என அனைத்துக்கும் தமிழ்நாட்டில் தடை விதிக்கப்படுகிறது. இதை மீறி பயன்படுத்துகிற நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்' என்று அதிரடியாக அறிவித்தார். (தடிமன் வேறுபாடில்லாமல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை என்பதுதான் அதன் முக்கிய அம்சம். மருந்து, பால் உள்பட பலவிதமான பயன்பாடுகளுக்கான பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்த விதிவிலக்கும் வழங்கப்பட்டது).

அதன்படியே தடை அமலுக்கு வர, `இங்கு பிளாஸ்டிக் கவர் வழங்கப்படமாட்டாது. துணிப்பை இருந்தால்தான் பொருள்கள் வழங்கப்படும்‘ என்று போர்டு எழுதி தொங்கவிட்டனர் வியாபாரிகள். கைப்பைகளையும், எவர்சில்வர் வாளிகளையும் கைகளில் சுமக்க ஆரம்பித்தனர் மக்கள். தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய வியாபார நிறுவனங்களின் மீது ரெய்டு நடத்தி அபராதம் விதித்தார்கள் அதிகாரிகள். ஆனால், ஒரே மாதத்தில் எல்லாம் போயே போச். வழக்கம்போல அதிகார வர்க்கம் லஞ்சம் வாங்கக்கூடிய இத்யாதிகளின் பட்டியலில் பிளாஸ்டிக் தடை என்பதும் சேர்ந்துபோனது. தடைவிதிக்கப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருள்களும் மக்களுக்கு தாராளமாகவே கிடைக்க ஆரம்பித்தன.
இன்று நேற்றல்ல... கருணாநிதி, ஜெயலிதா என காலகாலமாக `தடை' என்று முழங்குவதும், `அதை உடை' என பிளாஸ்டிக் கம்பெனி முதலாளிகளில் பலரும் `கவனிக்க வேண்டியவர்களை' `கவனி'ப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு..க அரசும் பிளாஸ்டிக் தடை என்பதை இப்போது வீராவேஷமாகக் கையில் எடுத்துள்ளது. போதாக்குறைக்கு மத்திய அரசும் (அங்கேயும் லஞ்ச பிஸினஸ் சூடு பிடித்துவிட்டது போல) 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கோப்பைகள், பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் ஸ்பூன் உள்ளிட்டவற்றின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு முழுமையாக தடை என்று அறிவித்துள்ளது.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

அதுமட்டுமல்லாமல், இந்த செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு, 75 மைக்ரான் தடிமனுக்குக் கீழான பிளாஸ்டிக் பைகள்/பொருள்களைப் பயன்படுத்தவும் தடை விதித்து அறிவித்துள்ளது. இதற்கு நடுவேதான், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தடை சட்டத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கும் சென்னை மாநகராட்சி, 10 நாள்களுக்குள்ளாக 50 மைக்ரான் தடிமனுக்குக் கீழுள்ள பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிப்பது, பயன்படுத்துவதை கைவிட வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

``தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களை கடைகளில் விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது'' என வணிகர்களுக்கு உத்தரவிட்டார் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. `இதை முழுமையாகக் கடைபிடிக்க ஒரு மாத அவகாசம் வேண்டும்‘ என்ற வணிகர்களின் கோரிக்கையை ஏற்காத ஆணையர், 10 நாள்கள் மட்டும் அவகாசம் அளிப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி வரைக்கும் கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக வியாபாரிகள் சிலரிடம் பேசியபோது...
``இந்த முறை அதிகாரிங்க ரொம்ப கண்டிஷனா இருப்பாங்க போல. போன முறை தடை வந்தப்போ இவ்ளோ கண்டிஷனா இல்லீங்க. கோயம்பேட்டுல மறைச்சு வெச்சாவது வித்திட்டிருந்தாங்க. நாங்களும் வாங்கிட்டிருந்தோம். இந்த முறை விக்க முடியாதுன்னு சொல்றாங்க. அரசாங்கம் பயன்படுத்தச் சொல்ற மக்குற பிளாஸ்டிக்கோட விலை ஜாஸ்தியா இருக்கு. வாழை இலை வாங்கியும் கட்டிப்படியாகலை. பத்து ரூவா, இருவது ரூவாவுக்கு வியாபாரம் பண்ற என்னை மாதிரி சின்ன வியாபாரிங்களுக்கு என்னப் பண்றதுன்னு ஒண்ணும் தெரியலலையே’’ என்கிறார் சென்னை, சூளைமேடு பகுதியில் பூ விற்கும் பெண்மணி.

பிளாஸ்டிக் பை
பிளாஸ்டிக் பை
Vikatan

``வட்ட வட்டமா விக்கிற டிபன் வாழையிலை நூறு ரூவாய்க்கு நூறு கிடைக்கும். அதே நூறு ரூவாய்க்கு ஆயிரம் பிளாஸ்டிக் கவர் வாங்கலாம். மக்காத பிளாஸ்டிக்குன்னா, நூறு ரூவாய்க்கு அம்பதுல இருந்து அறுவது கவர் கிடைக்கும். இந்த விலைக் கட்டுப்படியாகாமத்தான் பிளாஸ்டிக் கவரை வாங்கிட்டுக் கிடக்கிறோம். நான் வழக்கமா வாழையிலதான் பார்சல் கட்டுவேன். சட்னியெல்லாம் பொட்டலத்துக்குள்ளேயே வெச்சு கட்டிடலாம். சாம்பாரை மட்டும் பிளாஸ்டிக் கவர்ல ஊத்திக்கொடுப்பேன். இனிமே அலுமினிய கவர்ல கொடுக்கணும். கட்டுப்படியாகுறது கஷ்டம்தான். அதான், என் ரெகுலர் கஸ்டமர்களை பாத்திரம் எடுத்துட்டு வாங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்’’ என்கிறார் தி.நகரில் டிபன் கடை நடத்தும் வியாபாரி ஒருவர்.

``தமிழ்நாட்டுல பிளாஸ்டிக் கவர் தயாரிக்கிற கம்பெனியை மூடச்சொல்றாங்க. ஆனா, பிளாஸ்டிக் கவர், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ் எல்லாம் குஜராத், ஹரியானாவுல இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துகிட்டுதானே இருக்கு. இதெல்லாமே பெரும்பாலும் 51 மைக்ரானுக்கும் குறைச்சலாத்தான் இருக்கு. தமிழ்நாட்ல தயாரிக்கிற கவரைவிட ஒரு ரூவா, ரெண்டு ரூவா குறைச்சலாவும் விக்கிறாங்க. தடை போடுறதுன்னா மொத்தமால்ல தடுக்கணும். தமிழ்நாட்டுல மட்டும் தடை போடுறது. மீறி தயாரிக்கிறவன்கிட்ட, 5 ஆயிரம்... 10 ஆயிரம் அபராதம் வாங்கறதுனு காலத்தை ஓட்டுறாங்க. இவங்க வாங்குற அபராதம், லஞ்சம் எல்லாத்தையும் சேர்த்து எங்களை மாதிரி வியாபாரிங்ககிட்ட பிளாஸ்டிக் கம்பெனிகாரன் மொத்தமா வசூல் பண்ணிட்டுப் போயிடறான்’’ என்று பொருமுகிறார்கள் சில்லறை வியாபரிகள் தரப்பில்.

இந்த அறிவிப்புகளின் பின்னணியில், உண்மையிலேயே மண்வளத்தின் மீதும் மக்கள் நலத்தின் மீதும் உள்ள அக்கறை மட்டுமே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆனால், ஏற்கெனவே தடை உத்தரவில் இருக்கிற பிளாஸ்டி பொருள்களுக்கு மறுபடியும் எதற்காக இன்னொரு தடை உத்தரவு? 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணை மலடாக்கும் என்பதுத் தெரிந்த பிறகு, அதற்கு இன்னும் ஒருமாத கால அவகாசம் கொடுத்தது ஏன்? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்பவர்களை விட்டுவிட்டு நீங்களும் பயன்படுத்துபவர்களுக்குத்தான் உரிமம் ரத்து, அபராதம் என தண்டனை வழங்குவீர்களா?

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் கேட்டபோது, ``தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பைப் பற்றி வலியுறுத்திக்கொண்டே இருப்போம். இது அரசியல்சார்ந்த விஷயம் கிடையாது. மக்களுடைய மனம்தான் மாற வேண்டும்‘’ என்று சொன்னார்.
``உற்பத்தி செய்பவர்களைத் தடுப்பதற்கு என்ன வழி வைத்திருக்கிறீர்கள்?'' என்கிற நம்முடைய கேள்விக்கு, ``உடனே எதுவும் செய்துவிட முடியாது. ஆனால், நல்ல மாற்றத்தைப் பார்ப்பீர்கள்’’ என்று அழுத்தமாகச் சொன்னார்.

சீமான்
சீமான்

சுற்றுச்சூழல் பற்றி அதிக அக்கறையுடன் பேசும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் இதுகுறித்து கேட்டபோது, ``நாம பயன்படுத்துற பிளாஸ்டிக் பொருள்கள் மண்ணோட மண்ணா மட்குறதுக்கு 500 வருஷமாகும், 5,000 வருஷமாகும், 50,000 வருஷமாகும்னு ஒவ்வோர் ஆய்வறிக்கையும் ஒவ்வொருவிதமா சொல்லுது. இதைப்பத்தியெல்லாம் கவலையில்லாம இந்த திராவிடக் கட்சிகள் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை குப்பை மேடாக்கிடுச்சு. ஆர்.கே. எழில் நகர்னு பேர். ஊரே குப்பை மேடா கிடக்கு. பெரும்பாலும் பிளாஸ்டிக் குப்பைங்கதான்.
ரத்தம் சேகரிக்கிற பிளாஸ்டிக் பேக், ஊசி போடுற சிரிஞ்சி மாதிரியான ரொம்ப அத்தியாவசியமான மருத்துவப் பொருள்களைத் தவிர, மத்த எல்லா பிளாஸ்டிக் பொருள்களுக்கும் உடனே தடை போடணும். அதை விட்டுட்டு, பிளாஸ்டிக் இல்லாத நாட்டை உருவாக்கணும்னு மத்திய அரசும் மாநில அரசும் மாறி மாறி வாய்ச்சவடால் அடிச்சிக்கிட்டிருக்கறதுல அர்த்தமே இல்ல. ஒரே ராத்திரியில பணம் செல்லாதுன்னு சொன்ன மாதிரி பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதுன்னு சொல்ல முடியாதா பிரதமரால?

நிஜத்துல ஒருபோதும் மத்திய அரசோ, மாநில அரசோ அப்படியெல்லாம் செய்யமாட்டாங்க. அப்பப்போ `தடை தடை’னு அறிவிச்சிகிட்டேதான் இருப்பாங்க காலத்துக்கும். ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை, அது ஒருவிதமான சிக்னல். அதாவது, `பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கிற முதலாளிகள், எங்களை வந்து சந்தியுங்க' அப்படின்னு சொல்லாம சொல்றதுக்குத்தான் இந்த தடை உத்தரவெல்லாம்‘’ என்கிறார் வருத்தமும் கோபமுமாக.

இது உலகளாவிய பிரச்னை. நம்முடைய அடுத்தத் தலைமுறையின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய பிரச்னை. இதுபோன்ற உயிராதாரமான விஷயங்களில் மட்டுமாவது, லஞ்ச நெஞ்சத்தை மறந்து, நல்ல நெஞ்சத்தோடு மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
காத்திருப்போம்... எதிர்பார்ப்பு நிறைவேறும் வரை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு