Published:Updated:

``இனி `மஞ்சப்பை' கிராமத்தானின் அடையாளம் அல்ல!" - விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஸ்டாலின்

மீண்டும் மஞ்சப்பை
News
மீண்டும் மஞ்சப்பை

``பொருட்கள் வாங்குவதிலிருந்து, பள்ளிக்கூடத்துக்கு புத்தகம் எடுத்து செல்வது, பணம் எடுத்து செல்வது என அனைத்துக்கும் மஞ்சப்பைதான் பயன்படுத்தினோம். நாளடைவில் பிளாஸ்டிக் பை பயன்படுத்த ஆரம்பித்தோம். இன்று அது சுற்றுச்சூழலுக்கும் மனிதகுலத்துக்கும் எமனாக மாறியிருக்கிறது."

கால நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் ஆகியவற்றின் ஆபத்துகளை உலகமே பேசத் தொடங்கியிருக்கிறது. இவையனைத்தும் சுற்றுச்சூழலை மனிதர்கள் பாழ்படுத்தியதன் விளைவு. இனியும் சுற்றுச்சூழலை கவனிக்காமல் விட்டால் பேரழிவுகள் என்பது தடுக்க முடியாததாகிவிடும் என்கிற நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உலக நாடுகள் முன்னெடுக்க தொடங்கியிருக்கின்றன.

இந்நிலையில், தமிழகமும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுக்க தயாராகியுள்ளது. தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றும் விதமாக பிளாஸ்டிக்குக்கு `குட்பை' சொல்லும் `மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு இயக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மஞ்சப்பையை கிராமத்தானின் அடையாளமாகவும், நாகரிமற்றதாகவும் மாற்றி வைத்திருக்கும் சூழலில் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக மீண்டும் மஞ்சப்பையை முன்னிறுத்தி உள்ளது.

மீண்டும் மஞ்சப்பை
மீண்டும் மஞ்சப்பை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தை சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து பேசிய முதல்வர், ``உலகமயமாக்கலுக்கு முன்பு இன்று நாம் நாகரிகம் என்று சொல்கிற வாழ்க்கை முறைகள் எதுவும் இல்லாத காலகட்டத்தில் எல்லாவற்றுக்கும் நாம் பயன்படுத்தியது `மஞ்சப்பை' தான்.

கடைக்கு பொருட்கள் வாங்குவதிலிருந்து, பள்ளிக்கூடத்துக்கு புத்தகம் எடுத்து செல்வது, வியாபாரிகள் பணம் எடுத்து செல்வது என அனைத்துக்குமே மஞ்சப்பைதான். ஆனால் நாளடைவில் பிளாஸ்டிக் பைகள் வர ஆரம்பித்ததும் அனைத்துக்கும் அவற்றைப் பயன்படுத்த ஆரம்பித்தோம். இன்று சில நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்தி தூக்கி எரிந்த பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கும் மனிதகுலத்துக்கும் உயிரினங்களுக்கும் எமனாக மாறியிருக்கிறது.

மட்குவதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் இந்த பிளாஸ்டிக் உலகம் முழுவதும் அழிக்க முடியாத குப்பைகளாகக் குவிந்து கிடக்கிறது. இதனால் மண், நீர், காற்று என அனைத்து சுற்றுச்சூழலும் மாசுபட்டு உயிரினங்கள், கடல் வாழ் உயிர்கள் அனைத்துக்கும் பாதிப்பு உண்டாக்கி மனிதர்களுக்கும் ஆபத்தை விளைவித்திருக்கிறது.

எனவே சுற்றுச்சூழலையும் உயிரினங்களையும் பாதுகாக்கும் பொருட்டு பிளாஸ்டிக்கை முற்றிலுமாகத் தவிர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். `மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் மூலம் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளோம்.

கல்வி நிலையங்கள், தொழில்துறையினர், பொதுமக்கள் அனைவரையும் பிளாஸ்டிக்கை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்த கேட்டுக்கொள்கிறேன். இனி `மஞ்சப்பை' கிராமத்தானின் அடையாளமாக இல்லாமல் சுற்றுச்சூழலின் பாதுகாவலாகக் கருத வேண்டும்" என்றார்.

மீண்டும் மஞ்சப்பை
மீண்டும் மஞ்சப்பை

பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக உள்ள பொருட்களின் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேங்காய் நார், தேங்காய் சிரட்டை, வாழை இலை, வாழை நார் உள்ளிட்டவற்றிலிருந்து செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. இந்தப் பொருட்களின் தயாரிப்புகளில் ஈடுபட்டுவரும் பல நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொண்டன.

தமிழக அரசின் முன்னெடுப்பை ஆதரித்து சமூக வலைதளங்களில் மீண்டும் மஞ்சப்பை ஹேஷ்டேக்குடன் அனைவரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் மஞ்சப்பை ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

2019-ல் தமிழகத்தில் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், அந்த தடை நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு பழையபடி அதிகரித்துள்ளது.

திட்டங்கள் போடப்படுவதோடு மட்டும் நின்று விடாமல் தொடர்ந்து அதைக் கண்காணித்து அதன் இலக்கை எட்டும் நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.