Published:Updated:

`பவளப் பாறைகளை பாதுகாத்தார்' - `எர்த் ஹீரோஸ்' விருதுக்குத் தேர்வான தமிழக வனஅதிகாரி!

அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை அவர் கைது செய்துள்ளார்.

எர்த் ஹீரோஸ் விருதுக்கு தேரவாகியுள்ள சதீஷ்
எர்த் ஹீரோஸ் விருதுக்கு தேரவாகியுள்ள சதீஷ்

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசிய காப்பக பகுதியில் உள்ள அரியவகை கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழகத்தைச் சேர்ந்த வனச் சரக அதிகாரி `Save the species' என்ற பிரிவின் கீழ்`எர்த் ஹீரோ' என்ற விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள பவளப்பாறைகளைப் பாதுகாத்தல், கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் குதிரை உள்ளிட்டவற்றை கடத்துபவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் ஆமைகள் இனப்பெருக்கத்தை மேம்படுத்த அதிக அளவிலான ஆமை முட்டைகளைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வனச்சரக அலுவலர் சதீஷ்
வனச்சரக அலுவலர் சதீஷ்

மகராஷ்டிராவில் இயங்கி வரும் RBS FOUNDATION என்ற அமைப்பானது வனத்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்களைத் தேர்வு செய்து `EARTH HEROS' என்ற விருதை வழங்கி கெளரவித்து வருகிறது. இந்த விருதுடன் ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான `எர்த் ஹீரோஸ்' விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம் வனச்சரக அலுவலரான சதீஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியைச் சொந்த ஊராகக் கொண்ட சதீஷ் கடந்த 2014-ம் ஆண்டு வனத்துறை பணியில் சேர்ந்தார். 2016-ம் ஆண்டு ராமநாதபுரம் வன உயிரின கோட்ட வனச்சரகராக பொறுப்பேற்றார்.

இப்பொறுப்பை ஏற்று கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மற்றும் மண்டபம் கோட்டத்துக்குட்பட்ட மன்னார் வளைகுடா பகுதிகளில் உள்ள அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் குதிரை, கடல் ஆமைகள், பவளப்பாறைகள் ஆகியவற்றை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளார். இவர்கள் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னார் வளைகுடா கடல் பகுதியின் தூய்மைக் காவலனாக விளங்கும் ஆமைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், ஆயிரக்கணக்கான முட்டைகளைச் சேகரித்து குஞ்சு பொரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் வனச்சரகர் சதீஷின் இந்தச் சாதனைகளை பாராட்டும் வகையில் மகராஷ்டிராவில் உள்ள RBS FOUNDATION என்ற அமைப்பு `EARTH HEROS'' என்ற விருதுக்குத் தேர்வு செய்துள்ளது. மேலும், இந்த விருதுடன் ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து வனத்துறை வட்டாரத்தில் விசாரித்தோம்.``நாடு முழுவதும் உள்ள வனத்துறையினர்களில் சிறப்பாகப் பணியாற்றும் அலுவலர்களைத் தேர்வுசெய்து `எர்த் ஹீரோஸ்' என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்த விருதை வட மாநிலங்களைச் சேர்ந்த அலுவலர்களே அதிக அளவில் பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த வனச்சரக அலுவலருக்கு இந்த முறை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட கடல் அட்டை மற்றும் வாகனங்கள்
கடத்தல்காரர்களிடம் இருந்து கைபற்றப்பட்ட கடல் அட்டை மற்றும் வாகனங்கள்

மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பூங்காவில் உள்ள உயிரினங்களைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காகவும், பவளப்பாறைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் மற்றும் கடல்பகுதி தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தியதற்காகவும் இந்த விருதுக்கு து பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த விருதானது வரும் அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளது'' என்றனர்.