Published:Updated:

`சென்னை மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்!’ - காற்று மாசு தொடர்பாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

காற்று மாசைக் கண்டு சென்னை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தலைநகர் டெல்லி காற்று மாசு காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையிலும் கடந்த ஒரு வார காலமாக காலை, மாலை வேளைகளில் பனிப்படர்ந்தது போல் காற்று மாசு காணப்படுகிறது. காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடந்த சில நாள்களாக அதிகரித்து தெரியவந்துள்ளது. வட சென்னை பகுதியில் காற்று மாசு அதிகம் காணப்படுகிறது. காற்று மாசு குறித்து வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

காற்று மாசு
காற்று மாசு

இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் உதயகுமார், ``தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் காற்று மாசு இருந்தது தெரியவந்தது. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலையே இதற்கு காரணம். காற்றழுத்த தாழ்வு நிலையால் சூரிய ஒளி முழுமையாக உள்ளே வர வாய்ப்பிருக்காது. இந்த சமயங்களில் கடற்காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இதன் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்தது. வாகனப்புகை, தொழிற்சாலைகளில் புகை காரணமாக காற்று மாசு அதிகரித்தது தெரியவந்துள்ளது.

ரயில் இன்ஜின்களுக்கு இடையில் சிக்கிய லோகோ பைலட்! -கச்சிகுடாவில் ரயில்கள் மோதலுக்குக் காரணம் என்ன?

சென்னையில் இரண்டு இடங்களில் மட்டுமே மோசமான சூழல் நிலவி வருகிறது. சென்னை முழுவதும் மோசமான சூழல் நிலவி வருவதாக மக்கள் பயப்பட வேண்டாம். காற்று மாசுபாட்டால் ஏற்படும் மூச்சு திணறலின் காரணமாக இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட சுவாசக் கோளாறு, மூச்சுத்திணறலால் தான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். சென்னை முழுவதும் காற்று மாசுபாடு ஏற்படவில்லை. சமூக வலைதளத்தில் பரவும் தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்" என விளக்கமளித்தார்.