Published:Updated:

`800 பேர்; 4 மணி நேரம்!’- நீடாமங்கலம் தொடங்கி மன்னார்குடி வரை நீண்ட மர போத்து நடவு

இதுமாதிரியான போத்துகள், 3 ஆண்டு வயதுடைய மரங்களுக்கு நிகரானது. அடுத்த சில மாதங்களிலேயே பெரிய மரமா வளர்ந்துடும்.

போத்து முறையில் மரம் நடவு
போத்து முறையில் மரம் நடவு

சாலையோரங்களில் நிழல் உருவாக்க, மரக்கன்றுகள் நடவு செய்வதுதான் இதுநாள் வரை வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில்தான் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரதான நெடுஞ்சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்துக்குப் புதிய முயற்சியாக போத்துகளை நடவு செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்கள்.

மர போத்து நடவு
மர போத்து நடவு

சாலையோரங்களிலும் பொது இடங்களிலும் நிழலுக்காக மரங்களை உருவாக்க, கன்றுகள் நடவு செய்வதைவிடவும், போத்துகளை நடவு செய்வதுதான் பல வகைகளிலும் கூடுதல் பலன் அளிக்கும் என்கிறார்கள், இப்பகுதியைச் சேர்ந்த கிரீன் நீடா அமைப்பினர்.

நீடாமங்கலத்தில் தொடங்கி மன்னார்குடி வரையிலும் சாலையின் இரு ஓரங்களிலும் 12 கிலோமீட்டர் தூரத்துக்கு, 1500 மர போத்துகளை நடவு செய்துள்ளார்கள் கிரீன் நீடா அமைப்பினர். தமிழ்நாட்டில் நீண்ட தூரத்திற்குச் சாலையோரத்தில் போத்துகளாக மரம் நடவு செய்வது இதுவே முதல்முறை. இப்பணியில் இவர்களுக்கு உறுதுணையாக தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உட்பட 800 பேர் ஈடுபட்டு, நான்கு மணிநேரத்தில் இப்பணியை நிறைவு செய்திருக்கிறார்கள்.

போத்து நடவு செய்யும் மாணவர்கள்
போத்து நடவு செய்யும் மாணவர்கள்

கன்றுகள் நடவு செய்வதைவிட போத்துகள் நடவு செய்வதால் ஏற்படும் கூடுதல் பலன்கள்தான் என்ன.. இது குறித்து நம்மிடம் விவரிக்கிறார் கிரீன் நீடா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு.

``சாலையோரங்களில் நிழலுக்காகப் பெரும்பாலும் ஆலம், அரசு, வேம்பு, ஒதியன், பூவரசு, வாத மடக்கி உள்ளிட்ட மரக்கன்றுகளை நடவு செய்றதுதான் வழக்கமா நடந்துக்கிட்டு இருக்கு. கன்றுகளா நடவு செஞ்சி, அதுக்குக் கூண்டு அமைக்கணும். அது கூடுதல் செலவு. கூண்டு அமைக்கலைனா, ஆடு, மாடுகள் கடிச்சிடும். அதுமட்டுமல்ல, கன்றுகளா நடவு செஞ்சா, அது வளர்ந்து வர்ற வரைக்கும் தொடர்ச்சியா தண்ணீர் ஊத்திக்கிட்டே இருக்கணும். அதுக்குப் பிழைப்புத்திறன் குறைவு. இதுக்கு பதிலா, ஆலம், அரசு, வேம்பு, ஒதியன், பூவரசு, வாதம் மடக்கி மரங்களில் இருந்து, தரமான கிளைகளை வெட்டி எடுத்து, அதை நடவு செஞ்சா, ஆடு, மாடு தொந்தரவு இருக்காது. நடவு செஞ்ச அன்னைக்கு மட்டும் தண்ணீர் ஊத்தினா போதும்.

80 சதவிகிதம் செம்மரம்; 20 சதவிகிதம் மற்ற மரங்கள்... ஊத்தங்கரை விவசாயியின் சக்சஸ் டெக்னிக்! #Video

அதுக்குப் பிறகு தேவை இல்லை. தானாக வளர்ந்துடும். 5-10 ஆண்டுகள் வயதுடைய மரங்களில் இருந்து, நல்லா தரமான, 6-7 அடி நீளமுள்ள கிளையை வெட்டி, 2 அடி ஆழம், 2 அடி சுற்றளவுக்குக் குழி எடுத்து நடவு செய்யலாம். இதுமாதிரியான போத்துகள், 3 ஆண்டு வயதுடைய மரங்களுக்கு நிகரானது. அடுத்த சில மாதங்களிலேயே பெரிய மரமா வளர்ந்துடும். இது உயரமா இருக்குறதுனால, இதுல உருவாக்கக்கூடிய துளிர்களை ஆடு, மாடுகளால் சாப்பிட முடியாது. எங்களோட இந்த முயற்சியைப் பார்த்துட்டு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இதைப் பின்பற்றப் போறோம்னு சொல்லியிருக்காங்க. இதுக்கான பலன்களை கண்கூடாகப் பார்க்க முடியும். அதேசமயம் எல்லா மரங்களையும் போத்து முறையில் நடவு செஞ்சி வளர்க்க முடியாது. நாங்க இப்ப சொல்லியிருக்குற சில மரங்களில் இருந்து மட்டுமே போத்து எடுத்து நடவு செய்ய முடியும்” என்றார்.