Published:Updated:

வெள்ளைப் புலிகளின் காட்டில் மாயமான கண்காணிப்பு கேமராக்கள்; கடத்தல் கும்பலின் வேலையா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வெள்ளைப் புலிகள்
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வெள்ளைப் புலிகள்

``சீனா போன்ற ஒரு சில நாடுகளில் வெள்ளைப் புலிகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. இவற்றை தேடி உலகம் முழுவதும் பெரிய வேட்டைக் கும்பலே இயங்கி வருகிறது. இதனால் இவற்றுக்கு கள்ளச்சந்தையில் பெரும் மதிப்பு இருக்கிறது. உடனடியாக கேமராக்களை கண்டறிய வேண்டும்."

வனப்பகுதியில் நடக்கும் வனக் குற்றங்களை கண்டறியவும் தடுக்கவும் வனத்துறை பணியாளர்கள் தொடர் கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அதே வேளையில், வன விலங்குகளின் நடமாட்டம், வேட்டை, மரக்கடத்தல் போன்றவற்றை கண்காணிக்க அடர் வனப்பகுதிகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அந்த கேமராக்களை ஆய்வு செய்து அவற்றில் பதிவாகியிருக்கும் புகைப்படங்களை பார்ப்பதும் வனத்துறையின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. தானியங்கி கேமராக்களில் பதிவாகும் புகைப்படங்களின் அடிப்படையிலேயே தற்போது வனக்குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே சமயம் வனவிலங்குகளின் நடமாட்டத்தையும் கவனித்து வருகின்றனர்.

வனத்துறை அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட வெள்ளை புலியின் புகைப்படம்
வனத்துறை அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட வெள்ளை புலியின் புகைப்படம்
ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்படும் 20 சிவிங்கிப் புலிகள்; இந்தியாவிற்கு இவை தேவைதானா?

இந்த நிலையில், நீலகிரி வனக்கோட்டத்தில் இரண்டு வெள்ளைப் புலிகள் உலவும் அடர் காப்புக் காட்டில் வனத்துறையினர் பொருத்தியிருந்த இரண்டு தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மாயமாகியிருக்கின்றன. இதனால்அதிர்ச்சியில் உறைந்த வனத்துறையினர், காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கேமராக்கள் மாயமான விவகாரத்தை நம்மிடம் பகிர்ந்த வனத்துறை அதிகாரி ஒருவர், ``கேமராக்கள் பதிவாகியிருக்கும் புகைப்படங்களை பார்ப்பதற்காக நமது பணியாளர்கள் சமீபத்தில் சென்றபோது குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இரண்டு கேமராக்கள் காணாமல் போனதை கண்டறிந்து உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். நாங்களும் கேமராவைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கேரளா வழியாக ஊடுருவிய மரக்கடத்தல் மற்றும் வேட்டைக் கும்பல் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. கீயூ பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் விடை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்"என்றார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வெள்ளைப் புலிகள்
கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய வெள்ளைப் புலிகள்
யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு விவகாரம்: `நீலகிரி கலெக்டரை டிரான்ஸ்ஃபர் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!'

இது குறித்து நம்மிடம் பேசிய சூழலியல் செயற்பாட்டாளர்கள், ``வெள்ளைப் புலிகள் உலவும் குறிப்பிட்ட பகுதிகளில் 2 கேமராக்கள் காணாமல் போயிருப்பது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா போன்ற ஒரு சில நாடுகளில் வெள்ளைப் புலிகள் மருத்துவ குணம் கொண்டவை என்ற மூடநம்பிக்கை இருக்கிறது. இவற்றை தேடி உலகம் முழுவதும் பெரிய வேட்டைக் கும்பலே இயங்கி வருகிறது. இதனால் இவற்றுக்கு கள்ளச்சந்தையில் பெரும் மதிப்பு இருக்கிறது. உடனடியாக கேமராக்களை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

(வாசகர்களுக்கான குறிப்பு: வெள்ளைப் புலிகளின் பாதுகாப்பு கருதி அவை வாழும் குறிப்பிட்ட வனத்தின் பெயரை குறிப்பிடவில்லை)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு